சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்!
கடைசியில் சந்தர்ப்பவாத சாக்கடையில் குதித்த விஜயகாந்த்!!!!இப்படி நாம எல்லாம் சொல்லலீங்க... படிச்சேன் , அதை உங்களுக்கு படிக்கக்கொடுக்கிறேன்..!! அம்புட்டுதான்!
சென்னை: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று ஒரு படத்தில் கவுண்டமணி கூறுவார். அதை விஜயகாந்த்தின் அரசியல் நிரூபிப்பதாக உள்ளது.
2005ம் ஆண்டு விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவர் மீது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பும் மிகப் பெரிதாக இருந்தது.
யாருடனும் சேர மாட்டேன், கூட்டணி அமைக்க மாட்டேன், மக்களும், தெய்வமும்தான் எனது கூட்டணி என்று சொன்னார் விஜயகாந்த்.
இது மக்களிடையே அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது. அவருக்கு ஓட்டுக்கள் சேர ஆரம்பித்தன. எந்தப் பெரிய வெற்றியையும் பெறவில்லை என்ற போதிலும் அவரது வாக்கு வங்கி வீங்க ஆரம்பித்தது. அதிமுக ஆட்டம் காண ஆரம்பித்தது. திமுகவுக்கு அது பலமாக மாறியது.
இதனால் புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்பட்டார் விஜயகாந்த். இங்கு ஒரு விஷயத்தை அனைவரும் கவனிக்க வேண்டும். இத்தனை பேரும் விஜயகாந்த்துக்கு வாக்களித்தார்கள் என்றால் அது ஏன். ஒரு அரசியல் சக்தி என்ற அளவுக்கு விஜயகாந்த் உயர என்னக் காரணம். அது மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை மட்டுமே - இவர் வித்தியாசமான அரசியல்வாதி, தனியாக நின்கிறார், கூட்டணி என்ற பெயரில் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க மாட்டார். அதிமுக, திமுக என்று மாறி மாறி சலித்துப் போன நமக்கு இவர் நிச்சயம் நல்ல மாற்று சக்தியாக விளங்குவார் என்ற ஒரே நம்பிக்கைதான்.
ஆனால் அத்தனையையும் அப்படியே குழி தோண்டிப் புதைத்து விட்டார் விஜயகாந்த். கடைசியில் சந்தர்ப்பவாத கூட்டணி அரசியலுக்கே அவரும் புகுந்து விட்டார். மது போதையில் சட்டசபைக்கு வருகிறார் என்று சொன்ன ஜெயலலிதாவும், ஆமாம், அவர்தான் ஊற்றிக் கொடுத்தார் என்று கூறிய விஜயகாந்த்தும் அதை மறந்து போயிருக்கலாம். ஆனால் மக்கள் எப்படி மறப்பார்கள்.
அதற்கு முன்பு வரை 'இந்த லெவலுக்கு' தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் பேசியதாக தெரியவில்லை. அப்படிப் பேசிக் கொண்டார்கள் இவர்கள் இருவரும். ஆனால் இன்று கை கோர்த்து தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். இது பச்சை சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இதை விட மோசமான சந்தர்ப்பவாத கூட்டணிகள் தமிழகத்தில் அமையவில்லையா, பாமகவை விடவா ஒரு சந்தர்ப்பவாத கட்சி வந்து விடப் போகிறது என்று கேட்கலாம். அதனால்தான் அவர்கள் எல்லாம் வழக்கமான அரசியல் கட்சிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் விஜயகாந்த்தை மக்கள் பார்த்த பார்வை வேறு. அவரை புதிய சக்தியாக, புத்தம் புது மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் தலைவாராகத்தான் பார்த்தார்கள்.
ஆனால் இப்போது தான் வித்தியாசமானவன் இல்லை, நானும் பத்தோடு பதினொன்றுதான், பேரம் பேசித்தான் அரசியல் செய்யப் போகிறேன், முன்பு என்ன பேசினாலும் அதை மறந்து விடுவேன், தேவைக்கேற்றப்படி கூட்டணி சேருவேன் என்று மறைமுகமாக சொல்லி விட்டார் விஜயகாந்த்.
அதை விட முக்கியமாக, அவரை நம்பி, அவருக்காக வாக்களித்த அந்த ஜனங்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டார். நிச்சயம் இது நம்பிக்கைத் துரோகம்தான். விஜயகாந்த்தின் வித்தியாசமான அணுகுமுறையை மட்டுமே நம்பி வாக்களித்தவர்கள் இவர்கள். அவரது ரசிகர்கள் மட்டும் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. வித்தியாசத்தை விரும்பிய அப்பாவி ஜனங்களும்தான் வாக்களித்துள்ளனர். அதை விஜயகாந்தோ அல்லது தங்களது வாக்கு வங்கி குறித்து பெருமைப்படும் தேமுதிகவினரோ கண்டிப்பாக மறந்து விடக் கூடாது.
அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் விஜயகாந்த் வித்தியாசமாக இருப்பார், புதிய அரசியலை அமைப்பார் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக திரண்டனர். ஆனால் அவர் இன்று அதிமுகவில் போய் சேர்ந்துள்ளது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமையும்.
கட்சியைக் காப்பாற்ற வேறு வழியில்லை, கூட்டணி சேர்ந்தால்தான் அதிகார பலமும் பெற முடியும், திமுகவை விரட்ட வேறு வழியில்லை என்று எந்த சப்பைக் காரணத்தை விஜயகாந்த் கூறினாலும், அந்த விளக்கத்தை மக்கள், குறிப்பாக அவரை நம்பி வாக்களித்த, நடுநிலை மக்கள் முழுமையாக ஏற்பார்கள் என்று கூறுவதற்கில்லை. காரணம், விஜயகாந்த்தின் கூட்டணி முடிவு என்பதே அவரது அடித்தளத்தை அவரே தகர்த்துக் கொண்டது போலாகும்.
தேமுதிக மீதான மக்களின் ஆதரவுக்கு முதல் காரணமே, அடிப்படைக் காரணமே அது தனித்து நிற்கிறது என்பதுதான். ஆனால் அதையே இன்று விஜயகாந்த் தகர்த்து விட்டார்.
சேலத்தில் அவர் முழங்குகையில், நாங்கள் பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று என்று கூறியவர்களுக்கெல்லாம் நான் கூறும் பதில், நாங்கள் ஒன்றுதான் என்று கூறி பெருவிரலை உயர்த்திக் காட்டி தொண்டர்களின் கரகோஷத்தை வாங்கிக் கொண்டார் விஜயகாந்த்.
ஆனால் வருகிற தேர்தலில் விஜயகாந்த்துக்கு நடுநிலை வாக்காளர்கள் கட்டை விரலை காட்டுவார்களா என்பது சந்தேகமே.
'பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்' என்ற வடிவேலு பட வசனம் போலாகி விட்டது விஜயகாந்த்தின் அடிப்படை அரசியல் கொள்கை.
இவரைப் பார்த்தால் அதிமுக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து, இப்போது 'வெத்து வேட்டு' ஆகிப் போன வைகோ தான் நினைவுக்கு வருகிறார்.
இனிமேல் வைகோ இப்படிச்சொல்வாரோ....
அன்புச்சகோதரியை முதல்வராகவும் , புரட்சிக்கலைஞரை துணை முதல்வராகவும் ஆக்காமல் விட மாட்டான் அப்படீன்னு????
No comments:
Post a Comment