Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, November 14, 2011

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தெளிவான பார்வை!

நாம் நிறைய நிறைய ஈழ இணையப் பத்திரிக்கைகளை படிக்கிறோம்...சில கட்டுரையாளர்களின் கட்டுரைகளே எம்மைக் கவர்கின்றன......பல கட்டுரைகள் மிகவும் அமெச்சூர் தனமாக இருக்கின்றன....ஒரு இணைய பத்திரிக்கைகளே கூட மிகவும் அமெச்சூர் தனமாக , அடிப்படைகளேதுமின்றி இருக்கையில் ' சில நாள் முன்பு படித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்டுரை மிகவும் தெளிவான பார்வையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.....

உங்கள் பார்வைக்கு...இதுபோன்ற சிந்தனையாளர்களே தமிழர்களுக்கு உடனடித் தேவை...உணர்ச்சிக்கொந்தளிப்பில் எதையோ பேசி மக்களைக் குழப்பும் வைகோவோ , சீமானோ அல்ல..

பகுதி 1 : 

இன்றைய சர்வதேச அரசியல்:


தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளைச் செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்: கட்டுரை

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது. சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில், இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பமானது இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டியது. இதனையே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது. இச் சம்பவங்களை ஏன் தற்போது நினைவுகொள்கின்றோமெனின் அன்று எவ்வாறு தமிழ் மக்களது போராட்டத்தை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்கள் கனிந்திருந்ததோ, அதேபோன்று இன்றைய பூகோள அரசியல் சூழலானது ஒருவகையில் தமிழர்களுக்கு வாய்ப்பான அரசியல் சூழலாக கனிந்துள்ளது என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த வகையில் நோக்கினால், சர்வதேசம் பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பூகோள அரசியல் இலாப நட்டக்கணக்கில் அன்றைய சூழ்நிலையில் அதுவே தமது நலன்களுக்கு உகந்தது என அவர்கள் கணக்கிட்டமையே ஆகும். அதுவே போராட்டம் அழிக்கப்படக் காரணமாயிற்று. புலிகள் அமைப்பானது தேர்தல் அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவும் வேறு தரப்புக்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையினாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனநாயகத்திற்கு மாறானது என சர்வதேசம் வியாக்கியானப்படுத்திய அதேவேளை மக்கள் இப் போராட்டத்தின் பின்னால் நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தினையும் சர்வதேசம் நிராகரித்தே தனது முடிவுகளை எடுத்திருந்தது.

இதனை வேறுவிதமாக கூறுவதாயின்இ நாங்கள் தனித்தேசம் எனவும் எங்களுக்கு என்று தனித்துவமான இறைமை இருக்கின்றது எனவும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான விடயங்களுக்குப் பின் மக்கள் உள்ளனர் என்பதற்கான நியாயங்களை புலிகள் முன்வைத்தபோது, விடுதலைப் புலிகள் நேரடியாகத் தேர்தல்களில் பங்கெடுக்காத அமைப்பு என்பதனை சாட்டாகக் கூறி அவர்களது நியாயங்களை சர்வதேசம் நிராகரித்து விட்டது. இந்த இடத்தில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் போராட்டத்தின் கொள்கையினை சர்வதேசம் நிராகரிக்கவில்லை. எனினும் போராட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறியே போராட்டத்தினை நசுக்க சர்வதேசம் துணை நின்றது.

அடிப்படையில் சர்வதேச நியமங்களின் படி கருத்துச் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில் ஓர் அமைப்பின் கொள்கையினை தவறென வெளியுலகு ஓரங்கட்டிவிட முடியாது. எனினும் ஓரு அமைப்பின் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறி அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேசம் கொச்சைப்படுத்தலாம். இதுவே எங்களது போராட்டத்திற்கும் நடந்தது. இது இவ்வாறிருக்க இன்றைய நிலையில் பல கேள்விகள் எம்முன் உள்ளன. அதில்இ மிகப் பலமாக இருந்த போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் தாங்கி நின்ற கொள்கையினை தற்போதைய ஜனநாயக அரசியலுக்குள்ளாக நாம் முன்கொண்டுசெல்ல முடியுமா என்ற நம்பின்கையீனம் பலதரப்புக்களிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஆகவே இது பற்றி கவனத்தினைச் செலுத்தவேண்டியுள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவுறவேண்டிய விடயங்கள் உள்ளன. அதாவது ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் அரசியலானது முழுக்க முழுக்க ஜனநாயக அரசியலாகவே இருக்கப் போகின்றது. எனவே தேர்தல் வாயிலாக கொள்கைக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பொன்றை பயங்கரவாதம் எனக்கூறி சர்வதேசம் நிராகரிக்கமுடியாது. எனவேதான் சொல்லிலும் செயலிலும் தமிழ்த்தேசியக் கொள்கையினை முன்வைக்கின்ற ஒரு தரப்பிற்கு மக்கள் முழுமையாக வாக்களித்தால் அந்தக் கொள்கை எதுவாக இருந்தாலும் எந்தவொரு தரப்பும் அதனை கொச்சைப்படுத்த முடியாது. காரணம் தேர்தல் வழியாக மக்கள் அங்கீகாரம் இருக்கின்றது குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது என்பதனாலாகும்.

போர் நடைபெற்ற போது நிலவிய அரசியல் சூழல்களைக் காட்டிலும் தமிழ்த் தரப்பு நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலை இன்று உலக அரங்கில் காணப்படுகின்றது. எனவே எம் முன் உள்ள சர்வதேச அரசியல் சூழலை என்னவென நாம் விளங்கிக்கொண்டு பார்ப்போமானால் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழர் தரப்பினை பயங்கரவாதிகள் எனவும் சிங்களத் தரப்பினரை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் எனவும் சர்வதேசம் காட்டிக்கொண்டது. ஆனால்இ இன்றைய சூழலில் நிலைமைகள் மாற்றமடைந்து தமிழ்த் தரப்பானது பாதிக்கப்பட்ட தரப்பாகவும் சிங்களத்தரப்பானது போர்க்குற்றங்களை இழைத்து தமிழர்களின் உரிமைகளை மறுத்துச் செயற்படுகின்ற தரப்பாகவும் சர்வதேசம் ஆராயத்தொடங்கியுள்ளது.

இப்படியாக சர்வதேசத்தில் ஓர் அரசியற் சூழல் மாற்றம் ஏற்பட்டது தமிழ்த் தரப்பிற்கு முதலாவது சாதகமான நிலைமையாகும். அடுத்து இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு இ பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகளை நாம் கூர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இதேவேளை இந்த மூன்று தரப்பு நாடுகளினதும் நகர்வுகளையும் நாம் அவதானிக்கையில் அந் நாடுகள் அவர்கள் சார்ந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவேயுள்ளன. இவ்வாறாக தமது நலன்களை சாதித்துக்கொள்வதில் மூன்று தரப்பு சர்வதேச நாடுகளிடையேயும் போட்டியுள்ள நிலையில் சில விடயங்களில் இம் மூன்று தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் போட்டித் தன்மைக்கு உரிய விடயங்களே அதிகமாகவுள்ளன. இப் போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமது நலன்களை இலக்காகக் கொண்டே இலங்கை அரசினை வழிநடத்துவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளன.

அதேவேளை இம் மூன்று சர்வதேசத் தரப்புக்களும் இலங்கையை சரியாகக் கையாள்வதற்கு பல்வேறு உபாயங்களையும் கருவிகளையும் கையாள்கின்றனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஒவ்வொரு நாடும் கையாளும் கருவிகளை நோக்குகையில் அதில் வர்த்தகம் மற்றும் நிதி மற்றும் நிதி சாராத உதவிகளை உதாரணப்படுத்திக் கூறமுடியும். எனினும் இவ் இடத்தில் தமது நலன்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக்கொள்வதில் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் நாடுகள் மனித உரிமைகள்இ சட்டத்தின் ஆட்சிஇ ஊடகச் சுதந்திரம்இ ஊழல் அற்ற நிர்வாகம் என்பற்றை ஏற்படுத்துதல் என்ற நீண்ட பட்டியலுக்கு உரிய விடயங்களையே அடுக்கிவிடலாம். இதே போன்று இலங்கை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் நாடுகள் இனப்பிரச்சினை என்பதனையும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாம் முன்வைக்கும் முக்கியமான விடயமாக பயன்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட பட்டியலில் இருக்கத்தக்க விடயங்களில் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் மேற்குலகானது இலங்கை மீது மிகுந்த அதிருப்தியுடனேயே தனது அரசியல் நகர்வினை முன்னெடுத்து வருகின்றது.

கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டது போன்றுஇ இனப்பிரச்சினைத் தீர்வை மிக முக்கிய விடயமாக இலங்கையில் தலையீட்டைக்கொண்டுள்ள நாடுகள் முன்வைக்கையில்இ இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சகல தரப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தரப்புக்களுக்கு இதில் ஓர் முக்கிய வகிபாகம் கிடைக்கின்றது. மேலும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பது தலையீடுகளுக்கு உரிய நாடுகளின் விடயத்தில் நின்று பார்க்கையில் எவ்வாறாகப் பெறுமானம் உடையது என்பது கூட மதிப்பிடத்தக்கது. இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஒரு சர்வதேசதரப்பு நாடுகள் எதாவது ஒருவகையில் தமது நலன்களை நோக்காகக் கொண்டேனும் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றினை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த விளைவதை சர்வதேச அரங்கில் நாம் காணமுடிகின்றது. இப்படியாக சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்கையில், அந்த சர்வதேச தரப்புக்குப் போட்டியாக இலங்கையில் தலையிட விரும்பும் சர்வதேச சமூகத்தின் மறு தரப்பொன்று, நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புக்களை இலகுவாக்கி நெருக்கடிக்குள் தள்ளிய விடயத்தினை தாம் நிவர்த்தி செய்துவிடலாம்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு தரப்பு நாடுகள் கட்டுப்பாட்டை இலங்கை மீது விதிக்க முற்பட்டால், அதிலிருந்து மற்றொரு நாடு(சர்வதேசதரப்பு) தனது இலங்கை மீதான தலையீட்டுப் போட்டிக்காக பொருளாதார உதவிகளை வழங்கி காப்பாற்றி விடமுடியும். ஆனால் இலங்கை விவகாரங்கள் மீது அக்கறை கொண்டுள்ள சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இனப்பிரச்சினை என்ற விடயத்தினை முன்வைக்கின்ற நிலை ஏற்பட்டால் போட்டியடிப்படையில் தலையிடுகின்ற நாடுகள் இவ்விடயத்தை பதில் செயற்பாடு ஒன்றின் மூலம் நிவர்திதிக்கமுடியாத விடயமாகவே அமையும். ஒரு தரப்பினால் இனப்பிரச்சினை தீர்வு விடயம் அங்கீகரிக்கப்படுமாயின் மற்றத்தரப்பினால் அதனைத் தமது உதவிகளை வழங்கித் தகர்க்க முடியாது.

எனவே தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயம் இலங்கையில் விவகாரத்தில் அக்கறை செலுத்தும் நாடுகள், அதனை தமக்குரிய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்ற செயற்பாடானது தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை அடைந்து கொள்ளுவதற்கான மிகச் சிறந்த சந்தற்பமாக உருவாகி வருகின்றது. எனினும் தமிழ் தரப்பு தமக்கென உறுதியான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்காவிடின் இனப்பிரச்சினை என்கின்ற விடயத்தை கையில் எடுக்க விரும்பும் ஒரு சர்வதேசத்தரப்பு தமது தேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச தீர்வை வலியுறுத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க வேண்டிய நிலை இன்னுமொரு சர்வதேச தரப்புக்கு ஏற்படுமாயின் தமிழ் தரப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகும். அதனால் தான் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என நாம் வற்புறுத்துவதற்கான காரணமாகும்.

தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் முக்கியத்துவமுடைய தரப்பினராக இன்று உள்ளனர். இவ்வாறான முக்கியத்துவத்திற்குரிய தமிழ்; மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கிட்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கூட்;டமைப்பின் அமெரிக்க விஜயம் கூட அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு எவ்வகையில் சர்வதேச அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாக உள்ளதோ அதற்குச் சமமான அளவு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத் தரப்புக்களுக்கும் தமிழர் தரப்பு தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது. இவ்வாறான மதிப்பீடுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் ரீதியாக மிகப் பலமான நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி எமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். எமது மக்கள் நம்பிக்கையிழந்து துவண்டுவிட வேண்டியதில்லை.

நன்றி:கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 


சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம்,.....

....எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.

சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது.

தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது.

முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.

சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர்.

இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.
இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.

சோல்பரி அரசியலமைப்பு
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இனங்களிடையே பன்மைவாதம் (pluralism) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.

இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.

இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும் நம்பினார்கள்.
இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது.

இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வு, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது என்பதையேயாகும்.

இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற் சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.

முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது.


இவ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள்.

அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும் போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில் உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது.
மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும்.

இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.


இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர்.
இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.


இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும்.

மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.

இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது.

இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.

இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.
இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம் கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.

அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை அரசு நடத்தியது.

இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது.

இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.

இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும்.

இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது.

நன்றி : உயர்வு.காம் , தமிழ்வின் மற்றும் உயர்திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.  

Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

Friday, April 29, 2011

தினமணி.... நெஞ்சில் நேர்மை கொள்!!

ஈழ விடயத்தில் கருணாநிதியின் மென்மையான போக்கு கடுகளவும் பிடிக்காதவனாக இருந்தாலும் , அவ்வப்போது நமது தமிழக பத்திரிக்கைகளின் பூணூல் வெளியே தெரியவேண்டும் என்ற ஆசை கொண்டவனாகையால் இந்தப்பதிவு!

முதலில் தினமணியின் தலையங்கம்!
 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி

.இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

தினமணி சொல்லியிருக்கும் கருத்துக்களில் மாறுபாடு யாருக்கும் இருக்கமுடியாது...ஆனால் ஜெயலலிதா உடைத்தால் மண்குடம் , திமுக உடைத்தால் பொன்குடம் என்று சொல்வதுதான் தினமணியின் பூணூல் பாசத்தைக் காட்டுகிறது.

அதெப்படி , சும்மா அறிக்கை விடுவது உருப்படியான செயலாகும்? ஒரு கட்சியின் உயர்நிலைக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவது உருப்படியற்ற செயலாகும்?

முன்பெல்லாம் இலைமறை காயாய் திமுகவையும் , கருணாநிதியையும் கடிந்து கொண்டிருந்த தினமணி இப்போது வெளிப்படையாகத் தாக்குகிற மர்மமென்ன? ஒருவேளை மூத்த பத்திரிக்கையாளர் ( அதாங்க , ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருக்கிறாரே...) தினமணிக்கும் ஆலோசனை சொல்கிறாரோ?

எது எப்படியோ , இவர்கள் இப்படித்தான் , இவர்கள் இதுபோலத்தான் என்று இனம் பிரித்தறிய இதுபோன்ற தலையங்கங்கள் வாய்ப்பளிக்கிற வகையில் சந்தோஷமே.!!!

ஜெய் தினமணி.......ஜெய் தினமலர்....ஜெய் விகடன்....ஜெய் துக்ளக்.....வளர்க பூணூற்கொள்கை!

பூணூலார்கள் மீது நமக்கு துவேஷம் இல்லை.....அவர்களுக்குத்தான் நம் மீது எப்போதும் துவேஷம்...அவர்களைச் சொல்லி தவறேதுமில்லை....அத்துணை ஊடகங்களையும் அவர்களே ஆதிக்கம் செலுத்துமளவிற்கு அவர்களை உச்சாணியில் வைத்திருக்கிறோமே அதுவே தவறு

Monday, April 04, 2011

திமுகவின் சாதனைகள் இங்கே! அதிமுகவின் சாதனைகள் எங்கே?

கலைஞரின் பார்வையில்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!

அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை. 

நன்றி : திமுக வலைத்தளம்!

இது 2010 கணக்கு....இதற்குப்பின்னர்தான் ஒரு வருடத்தில் எத்தனையெத்தனை அறிவிப்புக்கள்? எத்தனையெத்தனை சாதனைகள்......குறிப்பிடத்தகுந்த ஒன்று குடிசை வீடுகளை கான்கிரிட் வீடாக்குவது.....

மனச்சாட்சியுள்ள எவரேனும் கலைஞரின் இத்தனை திட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது பலனடைந்ததை ஒத்துக்கொள்வார்கள்....உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா நண்பரே?

திமுக சாதனைகள் இங்கே....அதிமுக சாதனைகள் எங்கே?

இப்படிக்கு
கலைஞரின்
திட்டங்களால்பலனடைந்த ஒருவன்!

Saturday, March 05, 2011

கலைஞருக்கு நன்றி..நன்றி!

ஊரில் கெட்டது நல்லதுக்கு கூட ஒன்றுகூடாத ராமண்ணனும் , சடையப்பனும் இன்று ஒன்றுகூடி பட்டாசு வெடித்தார்கள்...

சில வருடங்களாகவே கொடியேற்றாமல் கிடக்கும் கம்பத்திற்கு இன்று வெகுவேகமாகப் பூச்சு வேலை நடக்கிறது.....நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ்டாலில் நான் 7 மணிக்கு லட்டு வாங்கப்போனால் தீர்ந்து போனது என்று சொல்லிவிட்டான்...இருங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடும்ங்கறான்...!

சரக்கு வாங்கச் சொல்லி செயலாளர் காசு கொடுத்தனுப்பி கனநேரமாயிற்று...செல்பேசியில் நண்பன் சொல்கிறான் , அண்ணே......சரியான கூட்டம் , பூரா கரைவேட்டிதான். இம்புட்டு சந்தோஷமா கட்சிக்காரங்கள நான் பாத்ததே கெடையாதுங்கறான்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து கரை வேட்டி கட்டுவதை நிறுத்தியிருந்த சலூன் கடை நாச்சியப்பன் இன்று சலவை போட்ட கரைவேட்டியுடன் ஊரில் மிடுக்காக நடந்து போகிறான்......
தொலைபேசியில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என் பள்ளித்தோழனும் , கட்சி அனுதாபியுமான பார்த்தசாரதியுடன் பேசினேன்...

"டேய் மாப்ளே , நீ கூப்பிடுவேன்னு தெரியும்........நைட்டு தலைவரு அறிக்க வந்தவுடனே முடிவாயிருச்சுடா மாப்ளே...எழுதி வச்சிக்க...இனி எலக்சன் வரைக்கும் ஒரு நைட்டு கூட தூங்கப்போறதில்ல நான்...இன்னிக்கு நைட்டு கூட செவரு ரிசர்வ் பண்ண கெளம்பிட்டேன்..நெறயா நாளைக்கு பின்னாடி திமுககாரன் எப்படி வேல செய்வான்னு ஊருக்கு காட்டணும்டா மாப்ள....!!"

டீக்கடை , பெட்டிக்கடை எங்கு திரும்பினாலும் இதேதான் பேச்சு........வலையுலக கட்சி அனுதாபிகளுக்கும் ஒரு பெருமூச்சு...

இன்றல்ல நேற்றல்ல...கடந்த சில வருடங்களாகவே வெளியில் சொல்லாமல் தொண்டையிலேயே வைத்திருந்தோம். .எந்தத் தேர்தலிலும் நாம் எமக்குழைப்பதை விட காங்கிரசுக்காரர்களுக்கு உழைப்பதே அதிகம்.........இனி நாம் எமக்கு உழைப்போம்...முழுவெறியுடன் உழைப்போம்.............திமுக பட்டுப்போன செடியல்ல.......கூட்டணி விலங்குகளால் சிறிதே வாடிப்போன செடி...அதற்கான உரம் தன்னம்பிக்கைதான்...அது டன் டன்னாக காங்கிரஸ் வெளியேறியதில் இருந்து கிடைத்திருக்கிறது....

எப்போதும் திராவிடக்கட்சிகளின் முதுகிலேறி சவாரி செய்யும் காங்கிரசுக்கு அவர்கள் பலமென்ன என்பது தெரியத்தான் போகிறது!!!தனியே நின்றாலும் சரி........அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாலும் சரி!

நடுநிலையான அதிமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல...திமுக தொண்டர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இப்போது பெரிய நிம்மதி!!

வேண்டாத சுமையான காங்கிரசைக் விட்டு விலகிய போது ஏற்பட்ட நிம்மதி திமுக ஆட்சியமைக்கும் போது கூட இருந்ததில்லை..வந்ததுமில்லை.!!!

தொண்டர்களின் குரலுக்கு மதிப்புக்கொடுப்பதில் கலைஞருக்கும் , பேராசிரியருக்கும் நிகரேது....என்ன கொஞ்சம் தாமதமாகிவிட்டது...அவ்வளவுதான்...

ஒற்றை டீயைக்குடித்துவிட்டு விடிய விடிய உதயசூரியன் சின்னத்தை தெருவெங்கும் வரைந்த காலம் நினைவில் இருக்கிறது....இந்தத் தேர்தலில் மீண்டும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த கலைஞருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி....

நம்புங்கள் தலைவர்களே..வெற்றி நமது கையில்.!!

Sunday, February 27, 2011

திமுக கூட்டணி மைனஸ் காங்கிரஸ்? வெற்றி நிச்சயம்!


திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் "ராகுல்" பார்முலாவால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது...


தமது தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் எப்போதும்  வென்றதாக சரித்திரமில்லை....மாவட்டத்திற்கு ஒரு கோஷ்டியாக , ஊருக்கு ஒரு பிரிவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர் பலம் மிக்க கட்சியா என்று கேட்டால் இல்லை என்பதே வெகுபலரின் பதிலாக இருக்கலாம்...


இருப்பினும் குறிப்பிட்ட சத வாக்குவங்கியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால், அந்த வாக்குவங்கியும் கூட ஈழத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால்    குறைந்திருக்கலாம்  என்பதே உண்மை! அதுதான் கடந்த    நாடாளுமன்றத்தேர்தல் சொல்லும் சேதி…பெருந்தலைகளே தோல்வி கண்டன என்பது வரலாறு!


 இந்த முறை ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட திமுக நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் விழுமா என்பது சந்தேகம்தான்...அதேதான் திமுகவினரின்  நிலையும்! யாரும் மனசளவில் காங்கிரஸுக்கு பல்லக்குத்தூக்க  தயாரில்லை.


களநிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ கனவு காண்கிறது….90 தொகுதிகள் என்ற அபத்தமான கோரிக்கையை வைக்கிறது….ஆட்சியில் பங்கு என்பதை வேண்டுமானால் நியாயமான  கோரிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்…அதைக்கூட தேர்தலுக்குப்பின்பு முடிவு செய்வதே சரியாக இருக்கமுடியும்?


காங்கிரசுக்கு கொடுக்கும் அதிக தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்லும் என்பதையே கடந்த நாடாளுமன்றத்தேர்தல் காட்டுகிறது…..காரணம் என்ன?  அர்பணிப்பு ஏதுமற்ற அதன் கட்சிப்பணியாளர்களும் , எப்போது யாரை  வாரிவிடலாம் என்று காத்துக்கிடக்கும் அதன் கோஷ்டிச்சண்டைகளும்தான்.!  ஆக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி கொடுப்பதென்பது  திமுகவைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை.!!




அப்படி ராகுல் பார்முலா தான் என்ன? அது இதுவரை சாதித்தது   தான்  என்ன?


காங்கிரஸ் வீழ்ந்துகிடக்கும் மாநிலங்களில் வெற்றிக்கொடி கட்டுவது!!! பீகாரில் லல்லுவைக் கழட்டிவிட்டு தனியே  நின்று ஆட்சிக்கெதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் நிதிஷ்குமாரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றியதுதான் “ராகுல் பார்முலா” சாதித்த பாரிய சாதனை!! அதைத்தான் தமிழகத்திலும் செய்துகாட்டப்பார்க்கிறார் அவர்…….


களநிலை வேறாக இருக்கும் , காங்கிரஸ் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமற்ற பீகாரிலே அதுதான் நிலையென்றால் காங்கிரஸ் மீத்  ஈழநிலையின்பால் இயல்பாகவே  வெறுப்புற்றிருக்கும்  தமிழகத்தில் என்ன நடக்கும்?




நமது கருத்தின் படி , கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒருதொகுதி கூட காங்கிரசுக்கு  அதிகம் கொடுக்கக்கூடாது!! அறிவாலயம் வரை சிபிஐ வந்ததைக்க்காட்டிலும் வேறென்ன பெரிய அவமானத்தை காங்கிரஸ்     தரக்கூடும்??


காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…ஏனென்றால் அந்தக்கட்சியையும் தூக்கிச்சுமக்கப்போவது எப்போதும் போல திமுக தொண்டர்கள்தான்..
ஒருவேளை காங்கிரஸ் தனியே வேறுசில சின்னக்கட்சிகளைச் சேர்த்து தனியே நின்றால் கிடைக்கப்போவது திமுகவிற்கு நிச்சய வெற்றியே…!!


ஏன்?


1. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். தனது சாதனைகளை பட்டி  தொட்டி எங்கும் பரப்பிட வழி பிறக்கும்!!!!
2. முறையற்ற,நேர்மையற்ற மீடியாக்களின் ஆட்சிக்கெதிரான பிரச்சாரங்களால் எழுந்திருக்கின்ற  ஆட்சிக்கெதிரான வாக்குகள்  இரண்டாகப்பிரியும்……..!!!1
3. சுருக்கமாகச் சொன்னால் கடந்த தேர்தலில் தேமுதிக செய்த வேலையை இம்முறை “காங்கிரஸ்’ செய்யும்!!
4. ஒருவேளை , காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையுமானால்..வைகோ+கம்யூனிஸ்டுகள் வெளியேறும் சூழல் உருவாகும்……திமுகவுடன் இணைய வாய்ப்பேதுமற்ற நிலையில்  இவர்கள் தனியே நிற்பது அதிமுகவுக்குத்தான் பாதகமாகும்..


ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…


வெற்றியைவிட தோல்வியால் கிடைக்கும் லாபங்கள் அதைவிடப்பெரிது!!  
1. சுயமரியாதையற்ற காங்கிரசுக்கூட்டணியில் இருப்பதால் சோர்ந்துகிடக்கும் திமுக தொண்டர்கள் புத்தெழுச்சி பெற வழிவகுக்கும்!!!
2. ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக  சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
3. காங்கிரஸ் என்ற தமிழர்களுக்கெதிரான கட்சி முகவரி ஏதுமற்று முடங்கிப்போகும்!!


ஆக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவது என்பது திமுகவிற்கு எவ்வகையில்  பார்த்தாலும் நிச்சய வெற்றியையே அளிக்கப்போகிறது….


இனிமேலும்  திமுகவின் முதுகிலேறி காங்கிரஸ் என்னும் நொண்டிக்குதிரை கரையைக்கடக்காமல் பார்த்துக்கொள்வதில் தான் கலைஞரின் இராஜதந்திரத்தின் வெற்றி இம்முறை இருக்கிறது!!! 


வெல்வாரா? பார்ப்போம்!


Friday, August 27, 2010

கலைஞருக்கு செருப்படி கொடுக்கும் 'பினாங்கு' முதல்வர் ராமசாமி

நீண்ட நாட்களுக்குப் பிறகு , தெளிவான நீரோடை போன்றதொரு தமிழ்த்தலைவரின் பேச்சு... இது ஆனந்தவிகடனில் வந்திருப்பதால் சர்வ நிச்சயமாக கலைஞர் படிப்பார் என்றே நம்புவோம். இனியாவது உலகத்தமிழர்களூம் , உணர்வுள்ள தமிழர்களும் தம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கருணாந்தி உணர்ந்து கொள்வார் என்றே நம்புவோம்..

கலைஞரே , காலம் கடந்து விடவில்லை. உமக்குப் பின்பு வரும் அரசியல் மாற்றம் தமிழின விடுதலையைச் சாதித்துக்காட்டும் , ஆனாலும் , முதிர்ந்த அரசியல் தலைவரான நீங்களே இனிமேலும் சொந்த குடும்பததைப் பாராமால் , சொக்கத்தங்கம் சோனியா காந்திக்கு வால் பிடிக்காமல் தமிழர்களின் உள்ளக்கிடக்கைக்கு தீனி போடுங்கள்...எதிர்ப்பார்ப்பின்றி தமிழினத்துக்காக போர்க்குணம் கொள்ளுங்கள்..இதுவே எமது எதிர்ப்பார்ப்பு.

 

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. இவ்வாறு மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, கூறியுள்ளார்.

பேராசிரியர் இராமசாமி, ‘பினாங்கு ராமசாமி’ என்றே அறியப்படுகிறார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர். இலங்கை இன அழிப்புப் போருக்குப் பின்னர் ஈழ மக்களுக்காக சர்வதேச அளவில் ஓங்கி ஒலிக்கும் கோபக் குரல்!

செம்மொழி மாநாட்டுக்கு எதிராக இவர் கொளுத்திப்போட்ட பட்டாசுகள் வெடித்து அடங்குவதற்குள், ‘மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபாய வரிசையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி ஆகிய மூன்று பேரும் போர்க் குற்றவாளிகளே. இவர்களிடமும் ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்’ என்று அதிரடி அறிக்கை விட்டிருக்கிறார்.

பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, ஆனந்த விகடனுக்காக வழங்கிய செவ்வி வருமாறு:

கேள்வி: இந்தியாவுக்குள் உங்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதே… என்ன காரணம்?

பதில்: மாநில முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக உள்துறை, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நானும் பார்வதி அம்மாளைப்போல எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன். இலங்கையில் ராஜபக்ஷவின் தமிழின அழிப்புப் போரில் இந்திய நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்து வந்தேன்.

இருண்ட மேகம் தமிழர்களைச் சூழ்ந்த வேளையில், துயர் துடைக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை. கவலையோடு ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆனால், கருணாநிதிக்கு சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் கோபத்துக்கு தான் ஆளாகிவிடக் கூடாது என்ற ஒரே கவலை மட்டுமே இருந்தது. அதன் விளைவுதான், அந்தக் கடிதம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது.

கேள்வி: உங்கள் நண்பர் சீமான் சிறையில் இருக்கிறாரே?

பதில்: மீனவர்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகத் தம்பியைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதன் பின்னர், இரண்டு முறை சிங்களக் கடற்படை இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை வெடிவைத்துத் தகர்த்திருக்கிறது. இப்போது மிகத் தந்திரமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் சதி நடந்துகொண்டு இருக்கிறது.

இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. பிரச்சினை இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலானதா? இலங்கை அரசுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையை இவர்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையாகத் திசை திருப்புகிறார்கள். அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான், தம்பி சீமானை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கேள்வி: செம்மொழி மாநாட்டுக்கு உங்களை அனுமதிக்கக் கூடாது என்று கடிதம் எழுதுகிற அளவுக்கு உங்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் என்ன முரண்பாடு?

பதில்: எல்லாத் தமிழர்களையும்போல நானும் ஆரம்பத்தில் கலைஞரை மிகவும் நேசித்தேன். அவர் எழுத்துக்களை விடாமல் படித்தேன். ஆனால், முதலாம் ஈழப் போரின்போதுதான் இவரின் சுயநல அரசியலைப் புரிந்துகொண்டேன். அவருக்கு, தமிழர்கள் பற்றியோ, தமிழ்மொழி பற்றியோ எந்தக் கவலையும் இல்லை.

செம்மொழி மாநாட்டைப் பொறுத்தவரையில் நான் ஏதோ செம்மொழி மாநாட்டுக்கு வருகிறேன்… வருகிறேன் என்று வாசலில் போய் நின்றது போலவும், கருணாநிதி என்னைத் துரத்திவிட்டது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். விருந்து உண்ணுவதில்கூட மானம் பார்க்கிற தமிழன் நான். உலக அளவில் தனக்கு நேர்ந்துள்ள அவப் பெயரைப் போக்க, இனக் கொலை நடந்த ஓர் ஆண்டுக்குள் செம்மொழி பெயரில் இந்த மாநாட்டைத் தன் குடும்ப மாநாடாக நடத்தி முடித்திருக்கிறார்.

ஆனால், தன் மீது விழுந்த களங்கத்தை மாநாடு நடத்தியோ, மயிலாட நடத்தியோ கழுவ முடியாது என்பது முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு இன்னும் விளங்கவில்லை. இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட உடனே முதன்முதலாக அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன் நான். செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில், பல தடைகளைத் தாண்டி டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்பாடு செய்த மாநாட்டிலும், மதுரையில் நாம் தமிழர் மாநாட்டிலும் பேசினேன்.

புது டெல்லியில் நடைபெற்ற புலம்பெயர்ந்த இந்தியர்களின் மாநாடான ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டுக்கு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலத்தில் இந்தியாவின் பங்கைச் சுட்டிக்காட்டி, நான் நிராகரித்தேன்.

இப்படி எதிர்ப்புத் தெரிவித்த என்னை அவமானப்படுத்தும் நோக்கில், வழக்கம் போலக் கடிதம் எழுதினார் கருணாநிதி. மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி: பிரபாகரன்தான் என் தலைவர் என்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?

பதில்: எனக்கு மட்டுமல்ல… உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்தான். தலைவர் பிரபாகரனை இரு முறை வன்னியில் சந்தித்துள்ளேன். ஈழத் தமிழர்களைப் பற்றியும் உலகத் தமிழர்கள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரிடமிருந்து விடைபெறும்போது, தமிழ், தமிழர் நலன் குறித்த தெளிந்த சிந்தனையும் தெளிவான பார்வையோடும் நான் வெளியே வந்தேன்.

பிரபாகரன் எனக்கு ஒரு வழிகாட்டி. சுருக்கமாகச் சொல்லப்போனால், தமிழினத்தின் காவலன் பிரபாகரன். தமிழர் சரித்திரத்தில், 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரைப் போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர் தோன்றுவார். தமிழர் சரித்திரத்தில் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் அவர்!

கேள்வி: 30-க்கும் மேற்பட்ட நாடுகள், புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் நிலையில், மலேசியாவில் ஓர் அரசுப் பதவியில் இருக்கும் உங்களது பேச்சு, மலேசிய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாதா?

பதில்: கடந்த காலங்களில் ‘தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, பல சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் நசுக்கப்பட்டதை நாம் அறிவோம். அயர்லாந்து புரட்சி இயக்கம், விடுதலைப் புலிகள் இயக்கம், பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன சுதந்திர இயக்கம், இப்படிப் பல சுதந்திரப் புரட்சி இயக்கங்களை அவ்வாறுதான் சித்தரித்து ஒடுக்கப்பார்த்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். சிங்கள இனவெறி அரசின் கொலை வெறியாட்டத்தில் இருந்து, இலங்கையில் ஒரு தேசிய இனமான தமிழர்களைக் காப்பாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம். அவ்வியக்கம், தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே விளங்கியது. ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காவல் அரணாக நம்பிக்கையை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் அமைப்புதான்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே, தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தோனேஷியாவின் ஆச்சே பகுதி மக்கள், பாலஸ்தீனியர்கள் என்று உரிமைக்காகப் போராடும் மக்களுக்காகப் போராடுபவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இப்போது அரசியலுக்கு வந்து, பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்பதற்காக எனது கொள்கைகளை, எனது போராட்டத்தைக் கைவிட்டுவிட முடியாது!

கேள்வி: கே.பி. கைது, ஈழ அகதிகள் விவகாரங்களில் கொண்டுள்ள அணுகுமுறை போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது, மலேசிய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று தெரிகிறதே?

பதில்: மலேசியாவில் ஆட்சியில் இருக்கும் அரசும் இனவாத அரசே. அந்த வகையில், சுதந்திர இயக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அதிசயம் இல்லை. மலேசிய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இணக்கப்பாடின்றி, நெருங்கிய ஒத்துழைப்பு இன்றி, கே.பி-யின் கைது மலேசியாவில் நிகழ்ந்திருக்காது.

பல விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு. அவ்வாறு நாடு கடத்தப்படும் புலி உறுப்பினர்களை, இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது, சித்திரவதைகள் செய்கிறது.

தமிழ் சுதந்திர இயக்கங்களை ஒடுக்குவதில், இரண்டு அரசுகளும் மிகக் கவனமாக நடந்துவருகின்றன. இன்று வரையிலும் சுமார் 2,000 தமிழ் அகதிகள், மலேசியாவின் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ளனர். அண்மையில்கூட, சுமார், 75 அகதிகள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: இந்திய, தமிழக அரசுகளையும், சோனியாவையும் நீங்கள் விமர்சிப்பது, மலேசிய-இந்திய உறவுகளைப் பாதிக்காதா?

பதில்: மகிந்தா ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷே போன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், கருணாநிதி ஆகியோரும் போர்க் குற்றவாளிகளே.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகள்பற்றி விசாரிக்கும்போது இவர்களையும் விசாரிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், ஈழப் போரில் நிகழ்ந்த கொடுமைகளைக் கண்டு, நான் சில தலைவர்களைக் கேள்வி கேட்டதற்கே, எனக்கு இந்தியாவுக்குள் செல்லத் தடை விதித்துள்ளனர்.

கண்டிப்பாக, மலேசிய அரசுக்கு என் நடவடிக்கைகள் எரிச்சலைக் கிளப்பியிருக்கும்தான். அதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதுதான் என் நோக்கம்.

கேள்வி: உங்கள் மாநிலத்துக்கு வந்த இந்தியத் தூதரை நீங்கள் சந்திக்க மறுத்து அவமதித்தது சரியா?

பதில்: எனக்குத் தடை விதித்த இந்திய அரசின் அதிகாரிகளுக்கு நான் மரியாதை கொடுப்பது அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன். சமீபத்தில், இந்தியத் தூதர் விஜய் கோகல்லே அவர்களைச் சந்திக்க நான் மறுத்துவிட்டேன். நான் என்ன நினைக்கிறேன் என்றால், மலேசியாவில் உள்ள இந்திய அரசின் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள், அவ்வளவுதான்.

கேள்வி: ஐ.நா. விசாரணைக் குழுவின் விசாரணைகள் சரியான வகையில் நடத்தப்படும் என்று கருதுகிறீர்களா?

பதில்: இலங்கையில் நிகழ்ந்த கடும் யுத்தத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது. ஆனால், இன்று பல நாடுகள், மனித உரிமைக் குழுக்கள், தனி நபர்களின் தொடர் அழுத்தத்தால், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது. அதன் நடவடிக்கைகள், விசாரணைகள் எந்த அளவுக்கு நடுநிலையாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், இலங்கையில் நிகழ்ந்தது இன அழிப்பு நடவடிக்கைதான் என உலக நாடுகளுக்கும், தலைவர்களுக்கும் புரியவைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாங்களும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்!
கேள்வி: இந்திய அரசு ஈழத் தமிழர் விவகாரத்தில் மட்டுமல்லாது எல்லா தமிழர்கள் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டினீர்களே, அது ஏன்?

பதில்: மலேசியாவில் வசித்தாலும் எங்கள் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எங்களின் மூதாதையர்களில் பலர், இரண்டாம் உலகப் போரில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராடியவர்கள். ஆனால், இந்திய அரசாங்கம் மலேசியத் தமிழர்களை எப்போதோ மறந்துவிட்டது.

எங்கள் துன்பங்களை இந்திய அரசு கண்டுகொண்டதே இல்லை. அதிலும் குறிப்பாக, வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நடுவண் அரசு, தமிழர்கள் விவகாரங்களில், அது மலேசியத் தமிழராகட்டும், ஈழத் தமிழராகட்டும், ஓர் அலட்சியப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அலறித் துடிக்கும் இந்திய அரசின் இதயம், தாக்கப்படுபவன் தமிழன் என்றால் மௌனமாகிவிடுகிறது.

கருணாநிதியோ தனது குடும்ப நலனுக்காக தமிழர்களின் நலன், அவர்களின் எதிர்காலம் எல்லாவற்றையும் காவு கொடுத்துவிட்டார்.

இப்போதைக்கு, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம், மறுமலர்ச்சி கண்டிப்பாகத் தேவை என்பதுதான் என்னுடைய கருத்து. அதன் பிறகுதான், தமிழீழத்தைப் பற்றிய விவாதங்கள் குறித்து நாம் பேச முடியும்! என்றார்.

Friday, July 16, 2010

நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்...மனிதர்கள்..!

இந்திய , தமிழக அரசாங்கத்தின் "துக்ளக்" கோட்பாட்டு அரசியலானது சீமானின் இருப்பையும் , தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு..

Necessity is the mother of innovation.  
தமிழில் சொல்வதாயிருந்தால் ,தேவைகளே கண்டுபிடிப்புக்களுக்கு காரணமாகின்றன. 

காங்கிரஸ் பேரியக்கத்தின் " தமிழ் - தமிழர் " விரோத செயல்பாடு தான் திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தை உருவாக்கியது...கடந்த ஒரீரு வருடங்களுக்கு முன்பு வரை நாமும் கூட அதே திமுக என்னும் கட்சிக்குக் கொடி பிடித்து நடை நடந்தவர்கள் தான். 

அன்று எங்கள் நெஞ்சில் அண்ணா மூட்டிய தீயை அணைத்து ,  எங்களையெல்லாம் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கத் தூண்டும்  தமிழர் விரோத சக்தியாக இன்று அதே கருணாநிதி அவர்களின் , தமிழ்நாட்டு அரசின் "துக்ளக்" தனமான செயல்பாடுகள் எள்ளி நகையாடும் வண்ணம் இருக்கின்றன.

ஜாமீனில் விட இயலாத அளவுக்கு "சீமான்" என்ன குற்றஞ் செய்தார்?

உணர்ச்சி கெட்ட ஜென்மங்களாய் , சேற்றினில் விழுந்த எருமை மாடுகளைப் போல் - எங்கு எது நடப்பினும் கவலையற்றுக் கிடக்கும் "தமிழா...கொஞ்சம் எழடா" என்று உரத்துக் கூவினார்....

அது குற்றமா?

அப்படியெனில் "தேசிய" மொழியாம் இந்தி மொழியை ( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுவே அரியணையில் நிற்கும் மொழி...) திமுக எதிர்த்த போது இந்திய  இறையாண்மை எங்கே போனது?

அந்த இறையாண்மைக்கு பங்கம் வகிக்கும் செயலுக்கு மூல காரணமே இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் "திமுக" தானே? 

அந்தச் செயலுக்கு தண்டனை கொடுப்பது யார். ?

தண்ணிரில் பந்தைப் போட்டால் மிதக்கும். அதே பந்தை நீருக்குள் அமுக்கி அமுக்கி விட அது மேலும் எகிறும்...எகிறிக்குதிக்கும்...அதன் ஆட்டத்தை சுலபமாக அடக்கி விட முடியாது.

இது இயற்கையின் விதி....

அது போலத்தான் "சீமானும்", அவர் பின்னால் அணி வகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியும்... பந்து அமைதியாகவே மிதக்கிறது. மிதந்தது....ஆனால் "துக்ளக்" தனமான திமுக அரசின் செயல்பாடுகள் அந்த இளைஞர்களை அமைதி குன்றச் செய்கின்றன. அதன்மூலம் அவர்களை மேலும் எழுச்சியுறச் செய்கின்றன.

இவையெல்லாம் திமு கழகத்திற்குத் தெரியாதவை அல்ல.........60 களில் உணர்ச்சிப் பெருக்காய் கொந்தளித்த தமிழ் இளைஞர்களால் "காங்கிரஸ்" காணாமல் போனது. அப்போதைய எழுச்சி , அதற்கு முன்னர் "விடுதலை உணர்வாளர்கள் அல்லது இந்தியர் என்ற பேச்சில் கட்டுண்ட இளைஞர்களால் நிறைவேறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைவிட அன்று இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்தச் சூழலிலேயே இளைஞர்களின் எழுச்சியை ஏற்படுத்திட "அண்ணா" வால் முடிந்தது.

அதற்காக அவர் வெறும் ஒற்றைச் சொல்லையே ஆயுதமாக்கினார் ...

அது "தமிழ்" என்ற சொல்....

அதே "தமிழ்" என்ற ஆயுதம் தான் இந்த "துக்ளக்" ஆட்சியாளர்களை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்றது. அன்றைக்கு அண்ணாவிற்கும் , கருணாநிதிக்கும் இருந்த காரணங்களை விட பலமடங்கு போராட வேண்டிய தேவை தமிழ் இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கிறது...

அந்தத் தேவையே "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் , சீமானின் எழுச்சிக்கும் அடிப்படை.

உணமையாகவே தமிழர் மீது இந்த துக்ளக் அரசுக்கு அக்கறை இருக்குமானால் எம்மைத் தமிழராக மதியுங்கள்.....தமிழராக மதித்து போராட விளைகின்ற காரணங்களுக்கு தீர்வு காண முயற்சியுங்கள்...!!

அதை விடுத்து "உமது" அரசியல் இருப்புக்கு பங்கம் வருகிறதென தவறாக நினைத்து "நாம் தமிழர்" மீது அடக்குமுறையினை ஏவாதீர்கள்.....

ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை சீமானைக் கைது செய்யும் போதும் ஒரு சில ஆயிரம் இளைஞர்கள் " நாம் தமிழராய் " இணைத்துக் கொள்கிறார்கள்...எம்மைப் போல.

கைதுகளின் மூலம் , அந்த இளைஞர்களை பயப்படுத்த முனைவதாய் எண்ணிக்கொண்டு ஆத்திரமூட்டச் செய்யாதீர்கள்...அந்த ஆத்திரம் உம்மை அழித்துவிடும்..

உதாரணம் கேட்கிறீர்களா???

கண் முன்னே இருக்கிறது......

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்ததும் , திமுக வென்றதுமான வரலாறே  உதாரணம்...

நிறைகுடமாக நீங்கள் இருப்பீர்கள் எனில் குடத்தை நிரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. ஆனால் குறைகுடமாக குற்றத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு யாரும் நீர் நிரப்பக் கூடாது என்று சொல்வீர்களானால் , இப்போது போலவே "தமிழ்" உணர்வாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவீர்களானால்................ குறித்துக்கொள்ளுங்கள்...

உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது..திமுக , அதிமுக , தேமுதிக என்று நீளும் தமிழ் விரோத , தமிழர் விரோத சக்திகளே உங்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது.

காரணம் , நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்....காலடி பட்டதும் தூள் தூளாய்ச் சிதறி காணாமல் போவதற்கு...

நாம் மனிதர்கள் ....

ரத்தமும் , சதையுமாக உணர்வால் உந்தப் பட்டு கொதிக்கும் "நாம் தமிழர்கள்"..