Tuesday, October 27, 2009

வணக்கம் திருமா…..இன்னொரு முண்டம் பேசுகிறேன்…!

தனிப்பட்ட முறையில் நமக்கு திருமாவளவன் அவர்கள் மேல் நமக்கு எந்தக் கோபமும் இல்லை. வாழ்ந்து முடித்த தலைவர் கூட பதவியைப் பிடித்துக் கொண்டு தமிழினத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கிற சூழலில் , மகன் மந்திரி ஆன பிறகும் கூட , நாடாளுமன்றத்தில் , சட்டமனறத்தில் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகள் ஆன பிறகும் கூட எங்கே தாவலாம் என்று காத்திருக்கும் தமிழின உணர்வாளர்கள் மிகுந்திருக்கும் இத்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துகிற ஒருவர் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுகிறேன் என்று சொல்லுகின்ற ஒருவர் இந்த அளவேனும் தனது குரலை உயர்த்திச் சொல்லுகிறாரே என்று சந்தோஷம் தான் பட்டோம்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திருமா எடுத்த நிலையில் கூட எந்தவித வருத்தமும் இல்லை…..நிறைய முறை நாம் வைகோவின் மீதும் , நெடுமாறன் மீதும் , சீமான் மீதும் புலிகளின் தமிழ்த்தேசிய போராட்டத்தை , தமிழீழத்தின் வாழ்வாதாரப் போராட்டத்தை தமிழினத்தின் நலனை எக்காலமும் விரும்பியிருக்காத ஜெயலலிதாவிடம் ஒரு தேர்தல் பிரச்சினையாக அடகு வைத்து விட்டார்களே என்ற ஆற்றொணாக் கோபம் கொண்டிருந்தோம். அதற்கு சற்றே மேம்பட்ட நிலையைத் தான் திருமாவளவன் எடுத்தார் என்றே எண்ணினோம்.!


ஆனால் காலம் பாருங்கள் ....இன்று அவரது நிலைமையை விமர்சித்து ஒரு பகீரங்கக் கடிதத்தை எழுதும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.


வணக்கம் திருமா அவர்களே.....


உப்புக்கொஞ்சம் அதிகம் போட்டுச் சாப்பிடுகிற காரணத்தால் நாங்கள் நலமாயில்லை......! நீங்கள் நலமாய் இருக்கிறீர்களா?


ஒருவாரமாக மனது கடும் உளைச்சலில் இருக்கிறது. எண்ணியவற்றை எழுத்தாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று கை பரபரத்தது.  இனி இதோ எம் எண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....( பகீரங்கக் கடிதம் , வேண்டுகோள் , விமர்சனம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளூம் உரிமையை வாசகர்களிடமே விட்டு விடுகிறேன்.)


முள்வேலிக்குள் மூணு லட்சம் சனம் தவிக்கிற ஒரு சூழலில் , நீங்கள் இலங்கைக்கு தூதுக்குழுவில் இடம்பெற்று சென்ற போது எல்லோருக்குமே ஒரு இயல்பான எதிர்ப்பார்ப்பு எழுந்தது.எல்லோருக்குமே ஒரு மெலிதான நம்பிக்கை பிறந்தது.

எல்லோருக்குமே உங்கள் மூலம் நமது மக்களின் அவல நிலை வெளிப்பட்டு விடாதா என்ற ஏக்கம் இருந்தது.

தோழர் திருமா ….


நீங்கள் ஒத்துக்கொண்டாலும் , ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த எதிர்ப்பார்ப்பை வீணடித்து விட்டீர்கள் என்பதுதான் உண்மை…


தோழர் தி்ருமா….

நீங்கள் என்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் எங்களின் அந்த நம்பிக்கையை சிதைத்து விட்டீர்கள் என்பதே உண்மை.


தோழர் திருமா……


நீங்கள் இப்போது என்னதான் வீரம் பேசினாலும் எங்கள் ஏக்கத்தை , தவிப்பை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்பதே உண்மை…


அதை விடுத்து உங்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் திருமாவை விமர்சிப்பவர்கள் எல்லோரும் தலையற்ற முண்டங்கள் என்று பதிவிடுகிறீர்கள்….! விமர்சிப்பவர்களை நீங்கள் இப்படி விமர்சிப்பதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கொள்வதன் அர்த்தம் என்ன? அத்தகைய விமர்சிக்கும் ஒரு முண்டமாகவே என்னையும் கருதிக்கொள்ளூங்கள்...! எங்களுக்கு பெரியார் விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைக் கொடுத்திருக்கிறார்..!


பகுதி – 2 ஐ பார்க்கச் சொல்லி வேறு மேற்கோள் காட்டியிருந்தார்கள்…….அதில் என்ன சொல்கிறீர்கள்????


தினமலரில் விமர்சித்த முண்டத்திற்கு இதுதான் பதில் என்று சொல்லியிருக்கிறீர்கள்.!


அங்கே போய் ராஜபக்சே கொடுத்த பஜ்ஜி , சொஜ்ஜியை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருமே சாப்பிடக் கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தார்கள் என்கிறீர்கள்…அதன் மூலம் உங்களைப் பற்றி மட்டும் நியாயப்படுத்தவில்லை…..யாரையெல்லாம் நியாயப்படுத்துகிறீர்கள் தெரியுமா?


தோழர் திருமா …..கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்….அது யார் எழுதியது தெரியுமா?


சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களைக் காட்டிலும் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்ட தமிழர்களின் எண்ணிக் கை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் சித்ரவதை முகாம், ஹிட்லரின் சித்ரவதை இருட்டறைகளை விட கொடுமையானது என்பது உலகின் கணிப்பு. இந்த சித்ரவதை முகாம்களில், சிங்களவர்கள் துன்புறுத்தப்படுவதில் லை. மாறாக விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களே துன்புறுத்தப்படுகின்றனர்.

        அது யாருடைய குரல் தெரியுமா?

இதோ இணைப்பினைக் கொடுக்கிறேன்…..படியுங்கள்….


உங்களோடு பத்து எம்.பிக்களில் ஒருவராக வந்த அழகிரி என்கிற காங்கிரஸ் எம்பியின் குரல் அல்லவா அது? காலமெல்லாம் புலிகளைக் கரித்துக்கொட்டுவதில் குறியாய் இருந்த இந்த அழகிரியா ராஜபக்சேவின் பஜ்ஜி சொஜ்ஜியை வேண்டாம் என்று சொன்னார் என்று கதையளக்கிறீர்கள்???


தமிழ்த்தேசியத்தையே சிதைக்கின்ற அளவிற்கு தன் கருத்துக்களால் விஷம் விதைத்த இவர்களைப் போன்றவர்கள் ,எல்லாம் அருமையாகவே இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த ஆருண் , சுதர்சன நாச்சியப்பன் போன்ற தமிழ்த் தேசிய விரோதிகள் எல்லோரும் ராஜபக்சேவிடம் விருந்துணவு சாப்பிட மறுத்தார்கள் என்ற தவறான கருத்தை நீங்கள் பதிவு செய்வதன் மூலம் உங்களை அவர்களோடு இணைத்துக்கொள்ள ஏன் துடிக்கிறீர்கள் திருமா?


உங்கள் நியாயப்படுத்தலுக்கு ஒரு அளவு   வேண்டாமா? கலைஞர்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த சுயமரியாதையை விற்றுக் காசாக்கி எங்களைக் கண்ணீரில் தள்ளி விட்டார் என்றால் நீங்களுமா?


கலைஞரின் பாரிய முயற்சியால் எல்லாம் நன்றாக நடந்துவிட்டதாக  சொல்கிறீர்கள். அதை குறை சொல்வது எமது நோக்கமுமல்ல. யார் குத்தியாகிலும் அரிசியானால் போதும் என்ற அவல நிலையில் தான் தமிழினமும் இருக்கிறது. அது இனத்துரோகிகளால் வந்த இழிநிலை. அத்தகைய துரோகிகளில் ஒருவரால் தான் ஈழத்தமிழினம் பிழைக்கிறது என்று நீங்கள் சொல்வதை ரசிக்க முடியாவிட்டாலும் கடந்து போகிறோம்..



ஐரோப்பிய ஒன்றியமும் , அமெரிக்காவும் கொடுத்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இலங்கை இந்தியாவிடம் கையேந்த , அதன் மூலம் மத்திய அரசு போட்ட சூழ்ச்சிதான் இந்த ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஜயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதன் மூலம் தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தது இலங்கை அரசு என்பதும் நீங்கள் திரும்பி வந்த அடுத்த நாளே இலங்கைஅரசு கொடுத்த பேட்டிகளைப் பார்த்தாலே புரியும்.


அச்சூழலில் , உங்களின் சிறு எதிர்ப்போ , அல்லது முகாம்களின் , தமிழர்களின் அவல நிலை பற்றிய எந்தவொரு கருத்து அங்கிருந்து , இலங்கையிலிருந்து நீங்கள் பதிந்திருந்தாலும் அது உலக நாடுகளின் பாரிய கவனத்தைப் பெற்றிருக்கும் , இந்திய மீடியாக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் , உண்மைநிலை என்னவென்று உலகுக்கு விளங்கியிருக்கும் என்ற எளிய உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதவராகவே இருக்க விரும்புகிறீர்களா திருமா?



வாய்ப்புக்கிடைத்த போது பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்துவிட்டு இங்கே வந்து தெருமுனையில் மைக் போட்டு உங்கள் தரப்பு நியாயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வதால் எள் முனையளவிற்காவது எம் இனத்திற்கு நன்மை உண்டா திருமா? அட வெகுஜன இதழ்களில் கூட அது அச்சேறாது என்ற உண்மை உங்களுக்கும் தெரிந்ததுதானே?


கடைசியில் தமிழினம் அது இதுவென்று வீராவேசம் பேசி நான்கைந்து பேரை தீயிற்கு இரையாக்கியதைத் தவிர வேறென்ன சாதித்தீர்கள் திருமா? உங்களை நியாயப்படுத்திக்கொள்வது விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர் படையைத் தக்க வைத்துக்கொள்ள மட்டும் தானே உதவுகிறது? அதனால் தமிழ்த்தேசியப் போராட்டம் என்ன வலுப்பெற்றது என்று விளக்கமுடியுமா திருமா?


அட , பதினைந்தே பேராக இருந்தாலும் இலங்கைத் தூதகரத்தைத் தாக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனமனைத்தையும் பெற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூட தனித்துத் தெரிகிறார்…..ஆனால் இன்று உங்களின் தமிழுணர்வைக்கூட சந்தேகப்படும்படியாக இன்று நாலுபேர் கேள்வி கேட்கும்போது அதற்கெல்லாம் பதில் சொல்லுமளவிற்கு நீங்கள் தாழ்ந்து போனதற்கு யார் காரணம்? எது காரணம்?


சில விடயங்களீல் பதிலைப் பேசுவதைவிட அமைதியாக தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்வதே சிறந்த மருந்தாகும். தவறுகளைத் திருத்திக்கொள்வதே சிறந்த மனிதப் பண்பாகும். நாம் மனிதர்கள்..தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்லர்.


அதனால் உங்கள் நியாயப்படுத்தல்களையும் , பசப்பு வாதங்களையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள். தமிழின விடுதலைக்கு எதிரானவர்கள் உங்களை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளூங்கள்…..


உங்களைப் போன்ற போர்க்குணம் மிக்க தலைமைகள் தமிழினத்திற்குத் தேவை…. ஆயுதம் ஏந்தா விடுதலைச் சிறுத்தைகளாய் சமரசமற்ற விடுதலைப்பாதையில் நீங்கள் பயணியுங்கள்….! வெற்றீகளை வீர மறவர்கள் வீடு கொண்டு சேர்ப்பார்கள்..


கவலை விடுத்து தமிழக மக்களை தெருவுக்கு கொண்டு வாருங்கள்…… தமிழகத்தைத் திரட்டி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பதில் சொல்லச் சொல்லி உலகத்தின் மனச்சாட்சியை உலுக்குங்கள்..!!!


இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாளில் உலகம் பதில் சொல்லும்..! சொல்லித்தான் ஆகவேண்டும்….
 
அதுகாறும் உணர்வுள்ள எந்தவொரு தமிழனும் அடங்கமாட்டான்….
 
யார் அடக்கினாலும் , அது நேற்றைய தமிழினத் தலைவராகவே இருந்தாலும் அடங்க மறுப்பான்….அத்து மீறுவான்.!



கதிரவன்

ஒரு தமிழ்த்தேசியன்

Sunday, October 25, 2009

யாழ்ப்பாணத்தில் கலைஞர் கொடும்பாவி எரிக்கும் நிலை வரலாம்!- வலம்புரி நாளிதழ்!

இலங்கைக்கு வருகை தந்த தமிழக நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

எனினும் இலங்கைக்கு விஜயம் செய்த தமிழகக் குழுவில் இடம்பெற்றிருந்த தொல்.திருமாவளவன் பிரதமருடனான சந்திப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.
பிரதமருடனான சந்திப்பில் திருமாவளவனை வெட்டிவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஆக தமிழக நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தமை,  தடுப்பு முகாம்களில் உள்ள மக்களைச் சென்று பார்வையிட்டமை போன்றவற்றால் ஏதேனும் நடந்ததோ இல்லையோ தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதால் எதனை அடையக் கலைஞர் முயன்றாரோ அது நடைபெறவில்லை. ஈழத்தமிழர் விடையத்தில் அண்மைக்காலமாக கலைஞரின் நட்டுவாங்கம் சுருதிமாறி நடனத்தைக் குழப்புகின்றது.

உண்ணாவிரதம் இருந்ததில் தொட்ட நாசம் இன்னமும் முடியவில்லை. ஈழத்தமிழர் தொடர்பில் அவர் சுருதி பிழைப்பதற்கான காரணம் எதுவெனில் யாரோ செய்ய கலைஞர் உரிமை கோர முற்படுவதுதான் எனலாம்.

தமிழகக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய கலைஞர் அதனுடாக ஈழத் தமிழருக்கு உதவ இம்மியும் நினைத்தாரில்லை. மாறாக முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு மேற்குலகமும் ஐ.நா சபையும் கலங்கிப் போயுள்ளது.

உலகம் முழுவதும் அந்த நாடுகள் பிரசாரம் செய்கின்றன. இப்பிரசாரம் உச்சமடையும் தறுவாயில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகும்.

அவ்வாறு நடவடிக்கை எடுப்பது இருவேறு தாக்கத்தை இந்தியாவிற்கு தோற்றுவிக்கும். அதில் ஒன்று ஈழத் தமிழர்களின் இந்நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். எனவே குற்றக் கூண்டில் ஆளும் இந்திய மத்திய அரசை ஏற்றவேண்டி வரும்.

இதனால் இந்திய மத்திய அரசுக்கு துணைபோன தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ் என் மூச்சு என்ற போலிப் பேச்சும் உடைபட்டுப் போகும். அடுத்து ஈழத் தமிழரின் அவலத்தைப் போக்க மேற்குலகம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அண்டை நாட்டின் மீதான தன் செல்வாக்கு சிதைவடையும் என்பது இந்திய நிலைப்பாடு.

எனவே முதல்வர் கருணாநிதி ஊடாகத் தமிழரின் வாயால் தமிழருக்கு எத்துன்பமும் இல்லை எனறு கூறவைத்தால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு எட்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கலைஞர் நிறைவேற்ற முற்பட்டார்.

ஆனால் தொடர்ந்தும் பேய்க்கூத்தாடினால் அவரின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டதென்ற செய்தியை அவர் கேட்க,  அதுவே அவரின் ஆயுளுக்கு வினையாக மாறும் நிலையும் உருவாகலாம்.



இப்போதாவது உலகத்தமிழர்கள் கலைஞரின் நாடகத்தினையொட்டி எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதை கலைஞர் புரிந்து கொண்டு செயலாற்றுவாரானால் நல்லது. இல்லாவிடில் உலகத் தமிழர்கள் முதலில் கலைஞருக்கு எதிராக கிளர்ந்தெழுவதை தவிர்க்கவியலாது....அத்தகைய கிளர்ச்சிக்குக் காரணமும் அவரே என்பதை யாரும் மறுக்கவியலாது. !


Friday, October 23, 2009

ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னன்...!

இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது!: கலைஞர்



இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சண்டை ஒழிந்தது சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்! என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்   பருவ மாற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல், இலங்கைத் தீவில் ஆடிக்காற்று வீசிக் கொண்டிருந்தது.


அந்தி வானத்திலே சிவப்பு; அந்தப் பூமியெங்கும் பரவியிருந்தது. அந்த வண்ணத்தை அந்தத் தீவின் தெருக்களில் தீட்டுவதற்கு தமிழ் ஈழ உரிமைப் போரில் ஈடுபட்ட இலங்கை வாழ் மக்களின் படைவரிசை இருபக்கமும் நின்று குருதி பொழிந்தவண்ணம் இருந்தன.


சகோதர யுத்தத்தை, பாண்டவர்கள்   கௌரவர்கள் கதையிலே படித்த மக்கள்; கடந்த சில ஆண்டுக்காலமாக காட்சியாகவே அந்த சின்னஞ்சிறு தீவில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள்  அந்தோ; கொடுமை! எதிரியின் அடையாளங்கண்டு; ஏறிமிதிக்கப் புறப்பட்ட அணிவகுப்பு; திசைமாறித் திரும்பி தன் படை வரிசையையே குலைத்துக் கொண்ட கொடுமையை என்னவென்று கூறிக் குமுறி அழுவது!


அங்கே சண்டை நடந்தால்தான்; மண்டைகள் உருண்டால்தான்; அதுவும் தமிழினத்தின் பிணங்கள் குவிந்தால்தான்; ஒப்பாரிப் பாட்டு ஒலிக்கவே சுருதி சேருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்த எட்டப்பர்கள்   தாங்கள் விரும்பியவாறு அண்ணன் தம்பிகளை அந்த மண்ணில் சவமாகச் சாயவிட்ட பிறகே; சந்தோஷம் கொண்டார்கள்   மனச்சாந்தி பெற்றார்கள்.


ஆனால், அய்யகோ; அந்த மயான அமைதிக்குப் பிறகும்   அந்த மண்ணில் திக்கற்றுத் தவிக்கும் தமிழ்க் குடும்பங்களைக் கைதூக்கி விட்டுக் காப்பாற்றும் முயற்சியிலாவது ஓரளவு வெற்றி பெற முடிந்ததே என்று மனம் ஆறுதல் பெறுகிறது.



காங்கிரசார், கழகத்தினர் எனப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பேரரசின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு அனுப்பும்போதுகூட; இவர்கள் போய் என்ன செய்யப் போகிறார்கள்; ஏமாற்றத்தைத்தான் கப்பலேற்றி வந்து இங்கே இறக்குமதி செய்வார்கள் என்று எண்ணியவர்கள், எண்ணியதையெல்லாம் பேசியவர்கள், இன்று நாவடங்கி நாடறியாமல் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.


நமது நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை சென்றபோது வாக்குறுதி வழங்கப்பட்டது. போர் முடிந்துவிட்டது; இனி அமைதியான அரசியல் தீர்வுதான்   என வாக்களித்தார்கள்.


முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார்.


வாக்குறுதி நிறைவேற்றியவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.


தொப்பூழ்க்கொடி உறவுகளைத் தொட்டுத் தழுவி; தொடர்கின்றோம் நமது லட்சியப் பயணத்தை.


ரத்தம் சிந்திடும் இனத்தின் பரிதாப நிலை கண்டு விம்மி அழுத   அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? சண்டை ஒழிந்தது   சாந்தி தழைக்கின்றது! சகோதர யுத்தம் ஓடிஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்!


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 ****



Thursday, October 15, 2009

யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரனும் , தமிழகத்தில் சகுனியும்!

மஹாபாரதத்தில் சகுனி என்ற ஒரு பாத்திரம் இருப்பதை மிகப்பலரும் அறிவார்கள். மஹாபாரதத்தின் அடிப்படையே சகுனியின் சூழ்ச்சிதான் என்பதையும் பலரும் ஒத்துக்கொள்வார்கள். அத்தினாபுரத்தினை வீழ்த்துவதே அச்சகுனியின் உள்நோக்கமாக இருந்தது. நெஞ்சில் வஞ்சகத்தை வைத்துக்கொண்டே ஒவ்வொரு சதியாலோசனையாக துரியோதனனுக்குச் சொல்வான் சகுனி.

தெரிந்தோ , தெரியாமலோ சுயமரியாதை இயக்கமே மஹாபாரதம் பற்றிய எனது கருத்துருவாக்கத்தை வடிவமைக்க உதவியது. கற்பனைக்கெட்டாத பொய்களும் , புரட்டுக்களும் நிரம்பியிருந்த அப்புராணத்தின் ஒரு கேரக்டர் இன்று நம் கண் முன்னே நடக்கின்ற ஒரு அசிங்கத்தை , ஒரு அவலத்தை , சுட்டிக்காட்ட உதவுகின்ற நிலை பற்றிய வருத்தம் எனக்குண்டுதான்.

சகுனியாவது வேற்றுநாட்டுக்காரன் ,  வேற்றினத்தான் , வஞ்சகம் கொண்டான். ஆனால் , எங்களுக்கு வாய்த்த சகுனியோ எங்களுக்குள்ளேயே பிறந்தவர். எங்களிடையேயே வளர்ந்தவர்.எங்கள் – எங்கள் என்று நான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கின்ற எங்களை இணைக்கின்ற சக்தியான தமிழைச் சொல்லியே பிழைத்தவர். எங்களுக்கெல்லாம் சுயமரியாதையையும் , பகுத்தறிவையும் போற்றிப்போற்றி வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர்.

ஒவ்வொரு முறையும் அச்சகுனியானவர் அதைச் செய்யப்போகிறேன் , இதைச் செய்யப்போகிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு வழக்கம்போலவே எங்களின் முதுகில் குத்தி எங்கள் எதிரியுடன் சமரசம் பேசிக்கொள்கிறார். சர்வ வல்லமை படைத்த தனது மீடியாக்களின் உதவியுடன் எங்களின் முதுகில் குத்தியதையே தனது சாதனையாக்கி எங்களின் எலும்புகளின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். அப்பாவி மக்கள் , அதையே உண்மையென எண்ணி அவரைத் தங்கள் சாதனையாளராக நம்பி ஏமாந்து போகிறார்கள். தங்களை நரபலியெடுத்தவனின் கூட்டாளி அவர் என்பதை வரலாறு பதிவு செய்தாலும் கூடவே எமது மக்களுக்கு அச்செய்தி போய்ச் சேருவதே இல்லை. அதன்மூலம் , எமது தமிழ் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க முயல்கிறார்.

தம் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க விரும்பும் யாருமே தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியற்றவர்கள். ஆகவே , 60 ஆண்டுகாலம் நாம் தலைவன் என்று சொன்ன ஒருவரை அவரது இறுதிக்காலத்தில் நீங்கள் தலைவனாகவே இருக்க லாயக்கற்றவர் என்று சொல்லும் துர்பாக்கிய நிலைக்கு அவர் நம்மைத் தள்ளி விட்டிருக்க வேண்டாம்…!



ஏனோ இந்த நிலை காழ்ப்புணர்ச்சியாலோ , உணர்ச்சி வேகத்தாலோ எடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் கீழிருக்கும் கேள்விகளை சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்

கொல்லப்படுகின்ற எமது இனத்துக்காக முத்துக்குமரனின் வழிகாட்டுதலில் தம்மையே அழித்துக்கொண்டு அழிந்தவர்களின் தியாகத்தையும் , அதன் மூலம் எழுந்த மாணவர் எழுச்சியையும் எம்பிக்களின் ராஜினாமா என்ற நாடகத்தின் மூலமும் , அதிகாரத்தின் மூலமும் கொன்றொழித்தார். அதன் மூலம் தமிழகத்தில் பொங்கியெழுந்த இனவுணர்வினைச் சிதைத்தார்.

எங்களின் இனவுணர்வினை சிதைத்த ஒருவரை எப்படி நாங்கள் தலைவராக ஏற்க முடியும்?

முள்ளிவாய்க்காலில் பாரிய மனித அவலம் ஒன்று நடைபெற்ற போது திடிரென அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் அமர்ந்து கொண்டார். அன்றும் கூட ஏதாவது மாற்றம் நடந்துவிடாதா என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். ஆனால் அந்த நாடகத்தையும் விரைவில் முடித்து போர் நின்றுவிட்டதாக ப்லிம் காட்டினார். ஆனால் அடுத்த நாளே முள்ளிவாய்க்கால் முழுதுமே தமிழனின் இரத்தம் பரவிச் சிவந்தது. இன்றுவரை அதற்கு ஒரு கண்டனம் தெரிவித்தாரில்லை.

தமிழனின் வரலாறு இதுவரை கண்டிராத பாரிய மனிதப் பேரவலத்தைப் பற்றி இன்றுவரை வாய் திறவாத ஒருவரை எங்களில் ஒருவராகவே ஏற்கவியலாது என்ற சூழலில் எங்ஙனம் எங்களின் தலைவர் என்று சொல்வது?

சிங்களனைக் கோபப்படுத்தும் படி பேசி விடாதீர்கள் என்று சொல்லி கதைகதையாக அவர் சொல்லிவந்த புறநானூற்று வரலாற்றை புதைகுழியில் தள்ளிச் சென்றார். ஒட்டுமொத்த தமிழினத்தை கோழையாக்கி குறுகுறுக்க வைத்தார். கோழைத்தனத்தின் வெளிப்பாடாய் வீரத்தையும் , விவேகத்தை இழந்து போனார்.

மனச்சாட்சியுள்ளவர்களே சொல்லுங்கள்……..ஒரு கோழையை எங்களின் தலைவர் என்று நாங்கள் எப்படித்தான் சொல்வது?

அரைலட்சம் மக்களை ஒரே நாளில் பரிகொடுத்துவிட்டு , மூன்று லட்சம் மக்கள் திறந்தவெளிச் சிறையில் பரிதவிக்கும் போது உலகத் தமிழ் மாநாடு எடுத்து உச்சி மகிழ நினைப்பவரை நாங்கள் என்ன சொல்லி அழைப்பது? தமிழனென்றா இல்லை தமிழினத் தலைவரென்றா?

நேற்றும் கூட தமிழகத்து எம்.பிக்களை இலங்கைக்கு அனுப்பினார். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த சனீஸ்வரனின் தூதுவர்கள் என்று வலம்புரி நாளிதழ் வர்ணித்தது. ஆதரவற்று கண்ணீர் மல்கி , போக்கிடம்  தெரியாமல் புலம்பும் மக்களுக்கு நீங்கள் ஆதரவுக் குரல் தராவிடினும் பரவாயில்லை. அதட்டாமல் இருந்தால் போதும். ஆனால் எத்தகைய அணுகுமுறையை இவர்கள் உபயோகித்தார்களளென்பதை உதயன் நாளிதழ் கிழித்தெறிந்து இருக்கிறது.


எவ்வளவு சூழச்சிகரமாக இந்த எம்.பிக்களின் பயணம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உணர முடியும்….

தமிழக எம்.பிக்கள் யாழ்ப்பாணம் போனார்கள்….மானிக் பார்ம் போனார்கள்…….மலையகம் போனார்கள்.

இலங்கையில் உட்கார்ந்து கொண்டு ஜே.எம்.ஆரூணும் , சுதர்சன நாச்சியப்பனும் இலங்கை அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றும், மலையகம் சொர்க்க லோகமாக மாறிப் போனது என்றும் உலகநாடுகளுக்கு ஒரு சேதி சொன்னார்கள். வெளிக்கிடைக்கும் செய்திகள் பொய்யென்று ஆருண் சொல்லி சிங்களத்துச் சேவகனானார். அது உலகப் பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்தது. சிங்களம் தமிழக எம்பிக்கள் பாராட்டுப் பத்திரம் வாசித்ததாக சொல்லி மகிழ்ந்தது.

ஆனால் , இறுதியாக முதல்வரிடம் கொடுத்த அறிக்கைகள் எம்.பிக்கள் கொடுத்த அறிக்கையில் நேர்மாறான ஒரு நிலையினை எடுத்து வைத்தார்கள். இந்நிலையில் இலங்கையில் மேற்கண்ட பேட்டியினைக் கொடுத்த ஜே.எம்.ஆருணுக்கும் , சுதர்சன நாச்சியப்பனுக்கும் எவ்வித மறுப்பும் கொடுக்கப்படாமை தீவிர நோக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

இலங்கையில் ஒரு நிலை , தமிழகத்துக்கு வந்தபிறகு இன்னொரு நிலை என்று இரட்டை வேடம் போடுவது யார் நலனுக்காக என்பதையும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஆறுமாதங்களில் மக்கள் எல்லோரையும் மீள்குடியேற்றம் செய்யப்போகிறோம் என்று ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வெளிப்படையாகவே மறுக்கும் மகிந்த ராஜபக்சே 58000 மக்களை விடுவிக்க ஒத்துக்கொண்டதாக அகமகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.

துன்பத்தில் உழலும் மக்களில் ஓரிருவர் விடுவிக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே. ஆனால் நேற்று அக்கட்சி சார்பு தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்ததும் நரகலைத் தின்ற உணர்வே மிகுதியானது.

தமிழக அரசின் அயராத முயற்சியால் , 600 தமிழர்கள் விடுவிக்கப்பட்டார்களாம். இந்தச் செய்தியை இவ்வளவு கோலாகலமாக வெளியிடும் இந்தத் தொலைக்காட்சி முள்ளீவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மடிந்த போது எங்கே போயிருந்தது? ஏன் அதை இருட்டடிப்பு செய்தது? இக்கேள்விக்குப் பதிலுண்டா? சரி அதை விடுங்கள். இன்று இலங்கை அரசு 58000 அகதிகளை விடுவிப்பதாகச் சொன்னதைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்கிறதே…..போர் நிறுத்தம் போன்றதொரு கண் துடைப்பு அறிவிப்புதானா அது?

எந்நேரமும் ஆட்சி , ஓட்டு , பதவி என்று எழவு கொட்டிக் கொண்டிருப்பவர்களின் பின்னால் தமிழர்கள் இருக்கப் போகிறார்களா இல்லை வீரமும் , ஈரமும் நிறைந்த போராட்டம் ஒன்றை நடத்தி உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த போராளிக்கூட்டமொன்றின் வீர மறவர்களுக்கு புகழ் சேர்க்கப் போகிறார்களா என்ற கேள்வியை உங்கள் ஆய்வுக்கு வைத்து விடை பெறுகிறேன்.

கதிரவன் – ழகரத்துக்காக.

Tuesday, October 13, 2009

கலைஞரும் , மன்மோகன்சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்டம்!

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன - சுதர்சன நாச்சியப்பன்


சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர் என இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். இவர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?


பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.

மூலம்: வீரகேசரி

***

கலைஞரும் , மன்மோகன் சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய இந்தக் கேவலமான பொம்மலாட்ட நிகழ்வு வேதனைக்கு உள்ளாக்குகிறது.

முதன் முதலில் தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்காக ஒவ்வொரு தமிழகத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் , வேதனைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த இனத்துரோகிகளை  தேர்ந்தெடுத்ததன் மூலம் தீராப்பழியை சுமக்கிறோம் நாம்.!

உலகளவில் இந்த தமிழக எம்பிக்களின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தையே சூனியமாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.

இது தவிர்த்த வேறெந்த வார்த்தைகளும் சொல்லக்கிடைக்காத அளவிற்கு "ழகரம்" ஏமாற்றத்தில் மூழ்குகிறது.