Showing posts with label உள்ளதைச் சொல்வோம். Show all posts
Showing posts with label உள்ளதைச் சொல்வோம். Show all posts

Monday, December 05, 2011

அந்நிய முதலீடும்…அழிந்துபோகும் விவசாயமும்!


 அலங்கியம் அருகிருக்கும் வானம் பார்த்த கிணறு இருக்கும் ஒரு சின்ன ஊர் பெருமாவலசு….உழவோட்டி உழவோட்டியே திமில் தேய்ந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேப்பமர நிழலில் சாய்ந்திருந்தார் ராமசாமி…..காலமெல்லாம் உழைத்து உழைத்து தேய்ந்த கால்களில் செருப்புக் கூட போடுவதில்லை அவர்…

மேடென்பதால் ஓட்ட முடியாத மக்காச்சோளத்தட்டு வைத்துக்கட்டிய சைக்கிளை மூச்சிறைக்க தள்ளிக்கொண்டே வந்தார் பழனியப்பன்…..

‘ ஏம் பழனீப்பா, செத்த வெய்யச்சாஞ்சதுக்கப்புறந்தான் மேவெடுக்கறது….உச்சி வெய்யில்ல இப்பிடி கஷ்டப்படாட்டி என்னப்பா? ‘ என்றார் ராமசாமி…

‘ இல்லீங்கப்புச்சி , மேவெறக்கிப்போட்டுட்டு மறுக்கா ஒருக்கா வரோணுமுங்க………ஊட்டுக்கு போயி ஒருவா கஞ்சி குடுச்சுட்டு வந்து தட்டு வெட்டுணும்னா பொழுது சாஞ்சுரும்…’  காரணத்தை விளக்கினார் பழனியப்பன்…

‘ தட்டு நீயா வெட்டற?ஆள் போட்டு வெட்டற பன்னயமல்லய்யா உன்னுது? ‘

‘இதென்னமோ தெரியாத மாரியே கேக்குறீங்கப்புச்சி..இன்னிக்கெல்லாம் ஆளெங்க கெடைக்குது…ஆறுமணியாப்புல வந்தா ரெண்டு மணியப்புல கெள்ம்பிர்றாங்க…இதுல டீக்குடிக்க , சோறுங்கன்ணு ஆளு வச்சி வேல வாங்கறாப்பலயா இருக்கு? ‘

‘அதுஞ்செரித்தான்…இந்த காட்டுக்குள்ள அருகம்புல்லு மம்மேனியா வளர்ந்து கெடக்கே…இந்த செல்வனக்க்கூப்புட்டு அகந்து புடலாம்னு காலைல ஊட்டுக்குப் போனா , ‘ சாமி , நான் வரலீங்க…..அங்க வந்து நாள் பூராம் கஷ்டப்படறதுக்கு  ,குட்ட வேலைக்கு போனா சுளுவா இருக்குமுங்கோன்றான்…

‘இந்தக் குட்ட வேலை ( கிராமப்புற  வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்) வந்தாலும்வந்துச்சி தக்காளி பொறிக்ககூட ஆளுக்கெடைக்கலை….நேத்து இருந்து பொறிச்சி இருவத்தாறு பொட்டி ஆச்சி…போன வாரம் பொட்டி அருவதுக்கு போச்சி……..இந்த வாரம் இருவதுக்கு கூட எடுக்க ஆளில்லை..’

‘ ஆமாம்ப்பா பழனீப்பா , ஆனா கடைல எல்லாம் கிலோ பத்து பதினைஞ்சுக்குத்தான் விக்குறான்….நம்மகிட்டதான் அடிமாட்டு விலைக்கு வாங்கறான் இந்த வேவாரி…”
‘அது நெசந்தேன் அப்புச்சி…என்றகிட்டயே இருவதுக்கு பொட்டி வாங்கி அப்புடியே அம்பதுக்கு கைமாத்தறான் வேவாரி……புரோக்கருக்கு கமிசன் வேற…….கடசீலே கைல மிஞ்சுறது வெறும் கூலிக்காசு கூட இல்லை…இந்த வெவசாயம் பாக்குறதுக்கு வெறெதாச்சும் பண்ணலாம் போல’.

இது கற்பனை உரையாடல்தான்.. கற்பனை பழனியப்பனும் , ராமசாமியும்தான்…. ஆனால் , இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் அனேக இடங்களில் நிகழ்பவையே…விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்களின் அட்டூழியம் என்பது காலங்காலமாகவே நிகழ்கிறது……கடைநிலை சில்லறை வியாபாரிகளுக்கோ அந்த லாபத்தின் பெரும்பங்கு கிடைப்பதில்லை…இடையிலிருக்கும் பணமுதலைகளான இடைத்தரகர்களுக்கே பெரும்பாலான லாபத்தின் பங்கு செல்கிறது….

நாட்பட்ட நாட்பட்ட இந்திய விவசாயம் லாபமற்ற தொழிலாய் தவிக்கிறது……இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இந்திய விவசாயம் அழிந்துபோகும்…இந்திய விவசாயத்திறக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்துப்படவேண்டியது அவசியம்…இல்லாவிடில் , நாளை உணவினை இறக்குமதி செய்யும் அவலநிலைக்கு ஆளாவோம்…
.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார்? இத்தகைய இடைத்தரகர்கள் தான்……இவர்கள் சில்லறை வணிகர்கள்  முடங்குவார்கள் என்று ஒன்றும் கவலைப்படவில்லை….தமது பிழைப்பு போய்விடுமோ என்றே கவலைப்படுகிறார்கள்…
விவசாயிகளே நேரடியாக தமது பொருட்களை விற்றுக்கொள்ளும் நிலையினை என்றுமே இவர்கள் விரும்பப்போவதில்லை….சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் வடிகட்டிய பொய்…..வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன…இதுபோல சில்லறை வணிகங்களும் இருக்கின்றன….

எவ்வித படிநிலையுமின்றி , கண்காணிப்பும் இன்றி இந்த இடைத்தரகர்கள் போடும் ஆட்டத்தினை ஒரு முறைப்படுத்த உதவும் அந்நிய முதலீடுகளை வரவேற்பதே சமுகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்………..அதன் மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை குறைக்கப்படும்.!

ஆக ,  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்..

இந்திய பொருட்களை அந்நிய தேசத்தில் விற்பதுவும் , இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை தருவதும் , வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர்களும் நமக்குத்தேவையெனில் , அந்நிய முதலீடுகளை எதிர்க்கும் நமது கொள்கை முற்றிலும் நியாயமற்றது…

ஒட்டுமொத்த முதலாளித்துவ கொள்கையினை எதிர்ப்புக்கொள்கையை எதிர்ப்பதில் நியாயம் உண்டு…அதற்கான காரணங்களும்  நிறையவே உண்டு...ஆனால் , எதிர்ப்பாளர்கள்  முன்வைக்கும் மாற்று என்ன? சீனா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சமூகமா? இல்லை வெனிசூலா போன்ற கம்யூனிச முதலாளித்துவமா? இல்லை க்யூபா போன்ற செயலிழந்துபோன , மக்களுக்குப் பயனற்ற கம்யூனிசமா?

தெளிந்து எதிர்த்தால் , தெளிவான பார்வையிருப்பின் அப்போது வேண்டுமானால் முதலாளித்துவத்தை எதிர்க்கலாம்…அதுவரை நீங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது…நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.!!

Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

Saturday, October 22, 2011

ஆனந்தவிகடனின் அல்ப அலப்பறை!!


அய்யாமாரே , அம்மாமாரே...

சவுக்கியமா? ஆனந்த விகடனின் அல்ப அலப்பறை பற்றிய இந்தப்பதிவு நகைச்சுவைக்காக இடப்பட்டத்தல்ல...சிந்திப்பதற்காக இடப்பட்டது....

நாம் மட்டுமல்ல , அப்பத்திரிக்கையும் தான்....

வெறும் சினிமாவை வச்சி மட்டுமே கல்லா கட்டுவது ஆனந்தவிகடனும் , குமுதமும் , குங்குமமும் என்பது தெரிந்த செய்திதான்..

இதுல பாருங்க சார் . தனியா சினிமா ஸ்பெஷல் போடறாங்களாம்..!



முன்னாள் குத்தாட்ட நடிகை இந்நாள் முதல்வர்.......முன்னாள் பைட் ஏக்டர் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர்...இதையெல்லாம் பாத்துமாடா பத்திரிக்கைகள் திருந்த மாட்டேங்குது???? தமிழகத்தின் இழிவுக்கு காரணம் சினிமா..அதை விட்டொழியுங்கள் மக்களே.!!


Sunday, February 27, 2011

திமுக கூட்டணி மைனஸ் காங்கிரஸ்? வெற்றி நிச்சயம்!


திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் "ராகுல்" பார்முலாவால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது...


தமது தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் எப்போதும்  வென்றதாக சரித்திரமில்லை....மாவட்டத்திற்கு ஒரு கோஷ்டியாக , ஊருக்கு ஒரு பிரிவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர் பலம் மிக்க கட்சியா என்று கேட்டால் இல்லை என்பதே வெகுபலரின் பதிலாக இருக்கலாம்...


இருப்பினும் குறிப்பிட்ட சத வாக்குவங்கியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால், அந்த வாக்குவங்கியும் கூட ஈழத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால்    குறைந்திருக்கலாம்  என்பதே உண்மை! அதுதான் கடந்த    நாடாளுமன்றத்தேர்தல் சொல்லும் சேதி…பெருந்தலைகளே தோல்வி கண்டன என்பது வரலாறு!


 இந்த முறை ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட திமுக நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் விழுமா என்பது சந்தேகம்தான்...அதேதான் திமுகவினரின்  நிலையும்! யாரும் மனசளவில் காங்கிரஸுக்கு பல்லக்குத்தூக்க  தயாரில்லை.


களநிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ கனவு காண்கிறது….90 தொகுதிகள் என்ற அபத்தமான கோரிக்கையை வைக்கிறது….ஆட்சியில் பங்கு என்பதை வேண்டுமானால் நியாயமான  கோரிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்…அதைக்கூட தேர்தலுக்குப்பின்பு முடிவு செய்வதே சரியாக இருக்கமுடியும்?


காங்கிரசுக்கு கொடுக்கும் அதிக தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்லும் என்பதையே கடந்த நாடாளுமன்றத்தேர்தல் காட்டுகிறது…..காரணம் என்ன?  அர்பணிப்பு ஏதுமற்ற அதன் கட்சிப்பணியாளர்களும் , எப்போது யாரை  வாரிவிடலாம் என்று காத்துக்கிடக்கும் அதன் கோஷ்டிச்சண்டைகளும்தான்.!  ஆக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி கொடுப்பதென்பது  திமுகவைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை.!!




அப்படி ராகுல் பார்முலா தான் என்ன? அது இதுவரை சாதித்தது   தான்  என்ன?


காங்கிரஸ் வீழ்ந்துகிடக்கும் மாநிலங்களில் வெற்றிக்கொடி கட்டுவது!!! பீகாரில் லல்லுவைக் கழட்டிவிட்டு தனியே  நின்று ஆட்சிக்கெதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் நிதிஷ்குமாரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றியதுதான் “ராகுல் பார்முலா” சாதித்த பாரிய சாதனை!! அதைத்தான் தமிழகத்திலும் செய்துகாட்டப்பார்க்கிறார் அவர்…….


களநிலை வேறாக இருக்கும் , காங்கிரஸ் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமற்ற பீகாரிலே அதுதான் நிலையென்றால் காங்கிரஸ் மீத்  ஈழநிலையின்பால் இயல்பாகவே  வெறுப்புற்றிருக்கும்  தமிழகத்தில் என்ன நடக்கும்?




நமது கருத்தின் படி , கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒருதொகுதி கூட காங்கிரசுக்கு  அதிகம் கொடுக்கக்கூடாது!! அறிவாலயம் வரை சிபிஐ வந்ததைக்க்காட்டிலும் வேறென்ன பெரிய அவமானத்தை காங்கிரஸ்     தரக்கூடும்??


காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…ஏனென்றால் அந்தக்கட்சியையும் தூக்கிச்சுமக்கப்போவது எப்போதும் போல திமுக தொண்டர்கள்தான்..
ஒருவேளை காங்கிரஸ் தனியே வேறுசில சின்னக்கட்சிகளைச் சேர்த்து தனியே நின்றால் கிடைக்கப்போவது திமுகவிற்கு நிச்சய வெற்றியே…!!


ஏன்?


1. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். தனது சாதனைகளை பட்டி  தொட்டி எங்கும் பரப்பிட வழி பிறக்கும்!!!!
2. முறையற்ற,நேர்மையற்ற மீடியாக்களின் ஆட்சிக்கெதிரான பிரச்சாரங்களால் எழுந்திருக்கின்ற  ஆட்சிக்கெதிரான வாக்குகள்  இரண்டாகப்பிரியும்……..!!!1
3. சுருக்கமாகச் சொன்னால் கடந்த தேர்தலில் தேமுதிக செய்த வேலையை இம்முறை “காங்கிரஸ்’ செய்யும்!!
4. ஒருவேளை , காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையுமானால்..வைகோ+கம்யூனிஸ்டுகள் வெளியேறும் சூழல் உருவாகும்……திமுகவுடன் இணைய வாய்ப்பேதுமற்ற நிலையில்  இவர்கள் தனியே நிற்பது அதிமுகவுக்குத்தான் பாதகமாகும்..


ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…


வெற்றியைவிட தோல்வியால் கிடைக்கும் லாபங்கள் அதைவிடப்பெரிது!!  
1. சுயமரியாதையற்ற காங்கிரசுக்கூட்டணியில் இருப்பதால் சோர்ந்துகிடக்கும் திமுக தொண்டர்கள் புத்தெழுச்சி பெற வழிவகுக்கும்!!!
2. ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக  சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
3. காங்கிரஸ் என்ற தமிழர்களுக்கெதிரான கட்சி முகவரி ஏதுமற்று முடங்கிப்போகும்!!


ஆக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவது என்பது திமுகவிற்கு எவ்வகையில்  பார்த்தாலும் நிச்சய வெற்றியையே அளிக்கப்போகிறது….


இனிமேலும்  திமுகவின் முதுகிலேறி காங்கிரஸ் என்னும் நொண்டிக்குதிரை கரையைக்கடக்காமல் பார்த்துக்கொள்வதில் தான் கலைஞரின் இராஜதந்திரத்தின் வெற்றி இம்முறை இருக்கிறது!!! 


வெல்வாரா? பார்ப்போம்!


Wednesday, November 11, 2009

சிறிலங்காவிடம் போர்க்கப்பல்களை திருப்பிக்கேட்கிறது இந்தியா.!

சிறிலங்காவின் டெய்லி மிரர் பத்திரிக்கை தலைப்பிலிருக்கும் செய்தியை இவ்வாறு வெளியிட்டிருக்கிறது.


India wants warships it lent to Sri Lanka returned

  
The Indian Coast Guard is uncertain about getting back two warships that it leased out to the Sri Lankan Navy in 2007 on an annually renewable contract. The two vessels, Coast Guard Ship (CGS) Varaha and CGS Vigraha, equipped with helicopters and rapid-fire machine guns, were leased out when Colombo was preparing for the offensive against the Liberation Tigers of Tamil Eelam (LTTE). But now the Sri Lankan Navy appears to be clueless about the Coast Guard’s demand for returning the warships and renamed the Varaha as Sagara and the Vigraha as Sayurala. Sri Lankan Navy spokesperson Captain Athula Senarath said on phone from Colombo that his country was grateful to India for making the two vessels available to it.
ஈரோட்டில் பிடிப்பட்ட  டாங்கிகள் இலங்கைக்குப் போகிறது என்றோம்..

இல்லையென்றார்கள்...!

கோவையில் பிடிப்பட்ட இராணுவ வாகனங்கள் இலங்கைக்குப் போகிறது என்றோம்

இல்லையென்றார்கள்...!

இரண்டு இந்தியர்கள் , அனுராதபுர தாக்குதல்களில் காயம்  பட்டார்கள்...அவர்கள்  இந்திய ரேடார்களை இயக்கினார்கள் , இது இலங்கைக்குச் செய்த உதவி என்றோம்....

இல்லை போருக்கான ஆயுத உதவிகளைச் செய்யவில்லை.....வெறும் தற்காப்பு உதவிகளைத் தான் செய்தோம் என்றார்கள்..

இப்போது இந்த இரண்டு போர்க் கப்பல்களை கொடுத்திருந்தார்களாம். அதை திருப்பிக் கேட்கிறார்களாம்.

போர்க் கப்பல்கள் என்ன கேடயங்களா ? தற்காப்புக் கருவிகளா ?


இப்படி பொய்க்கு மேல் பொய் சொல்லி தமிழகத் தமிழர்களை மடையர்களாகவும் , முட்டாள்களாகவும் மாற்றத் துடிப்பது ஏன்?

இவர்களின் அதிகாரப்பூர்வ தமிழக ஏஜெண்டாக  முதல்வர் கருணாநிதி மாறிப்போனது ஏன்?

இதே முதல்வர் கருணாநிதி அவர்கள் அன்று சொன்னது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிகிறது.....

"போருக்கு உதவி செய்யவில்லை" என்று இந்திய அரசு பலமுறை சொல்லிவிட்டது என்றார்...

இப்போது என்ன சொல்கிறார்..????

கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்..!!!

இப்போது வந்திருக்கிறது.........


அடப்பாவிகளா.............உங்கள் விளையாட்டுக்கு நாங்கள் தான் கிடைத்தோமா? தமிழர்கள் தான் கிடைத்தார்களா?

இனியும் நியாயம் இந்திய அரசின் மூலம்தான் கிடைக்கும் என்று சொல்லித் திரிபவர்கள் யார் என்று அடையாளம்  கண்டு கொள்வது அவசர அத்தியாவசியம் என்று இன்னொரு  முறை கட்டியம் கூறுகிறது இந்தச் செய்தி.!

Tuesday, October 13, 2009

கலைஞரும் , மன்மோகன்சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய பொம்மலாட்டம்!

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன - சுதர்சன நாச்சியப்பன்


சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர் என இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். இவர் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி; இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?


பதில்; சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கேள்வி; முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

பதில்; சுதந்திரமாக சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

கேள்வி; முகாம்களின் நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

பதில்; அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

கேள்வி; தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

பதில்; அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

கேள்வி; தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

பதில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

கேள்வி; நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

கேள்வி; அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

கேள்வி; நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

பதில்; நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

கேள்வி; தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

கேள்வி; விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

கேள்வி; மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

பதில்; மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.

மூலம்: வீரகேசரி

***

கலைஞரும் , மன்மோகன் சிங்கும் சோனியாவுக்கு நிகழ்த்திக்காட்டிய இந்தக் கேவலமான பொம்மலாட்ட நிகழ்வு வேதனைக்கு உள்ளாக்குகிறது.

முதன் முதலில் தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்காக ஒவ்வொரு தமிழகத்து தமிழர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் , வேதனைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்த இனத்துரோகிகளை  தேர்ந்தெடுத்ததன் மூலம் தீராப்பழியை சுமக்கிறோம் நாம்.!

உலகளவில் இந்த தமிழக எம்பிக்களின் இலங்கை விஜயம் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தையே சூனியமாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தமிழனாக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறோம். அவமானப் படுகிறோம்.

இது தவிர்த்த வேறெந்த வார்த்தைகளும் சொல்லக்கிடைக்காத அளவிற்கு "ழகரம்" ஏமாற்றத்தில் மூழ்குகிறது.

Sunday, September 20, 2009

ழகரம்:உள்ளதைச் சொல்வோம்! : வாரிசு அரசியல்.

தமிழக அளவில் வாரிசு அரசியல் என்பது பாரிய விவாதப் பொருளாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் உயர்திரு.வைகோ அவர்கள் திமுகவை விட்டுப் பிரிந்ததற்கும் , தனிக்கட்சி தொடங்கியதற்கும் வாரிசு அரசியலே காரணம்.

மன்னராட்சியில் மன்னர் இறந்தபிறகு அவரது மகன் அரசனாக பதவியேற்பார். மக்களாட்சி , மக்களுக்காக நடத்தப் படுவது என்றாலும் மன்னராட்சியின் வாரிசுகளுக்கு பட்டம் சூடுவது போன்றே இங்கேயும் அதுதான் நடக்கிறது.

சரி வாரிசு அரசியலுக்கு என்னதான் அடிப்படை?. ஒருசில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை கட்சிக்குள் திணிப்பதில் ஈடுபாடு காட்டினாலும் , பெரும்பாலான அரசியல் வாரிசுகள் மக்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே மக்கள் என்பவர்களில் மக்களின் பிரதிநிதிகளும் அடங்குவார்கள்.

சமீபத்திய உதாரணம் , ஆந்திர முதல்வர் வொய்.எஸ்.ஆர் அவர்களின் அகால மரணத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று அடம் பிடித்த/ பிடிக்கும் ஆந்திர காங்கிரசார்......

திமுகவிலும் கூட கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களைத் தவிர ஸ்டாலின் மற்றும் அழகிரி அவர்கள் திணிக்கப்பட்டவர்கள் அல்லர்.

அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு தத்தமது சுயலாபங்களுக்காக சிலர் எம்.ஜி.ஆரின் மனைவியார் திருமதி ஜானகி அவர்களின் தலைமையிலும் , இன்னுஞ்சிலர் ஜெயலலிதா தலைமையிலும் கொடி பிடித்தனர். திறமை , தகுதி என்ற எந்தவித அடிப்படையையும் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசுகளாகப் பார்க்கப்பட்டார்கள்.  ஒருவேளை திறமையின் அடிப்படையில் பார்த்தால் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே எவ்வகையிலும் தகுதியானவர்.

இந்திய அளவில் பார்த்தோமானால் , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக திரு.சீதாராம் கேசரி இருந்தபோது கட்சி சிதிலப்பட்டுப் போனதாகச் சொல்லி சோனியாவைத் தலைமையேற்கச் சொல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தியதால் விருப்பமேதுமின்றி காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்றார் சோனியா காந்தி. ஒரு மாநிலத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தாலும் கூட வேறெந்த தலைவரும் பெறாத முக்கியத்துவத்தைப் பெற்று விடுகிறது.

மற்ற மாநிலங்களின் அளவில் பார்த்தால் , கேரளாவில் கருணாகரனின் புதல்வர் முரளிதரன் , கருநாடகாவில் தேவகவுடாவின் புதல்வர் குமாரசாமி , லட்சத்திவுகளில் சையத்தின் புதல்வர் , ஆந்திராவில் என்.டி.ஆரின் துணைவியார் சிவபார்வதி , சந்திரபாபு நாயுடு , மராட்டியத்தில் பால் தாக்கரேவின் புதல்வர் உத்தவ் தாக்கரே , ஒரிசாவில் பிஜு பட் நாயக்கின் புதல்வர் நவீன் பட்நாயக் ....இப்படி போய்க்கொண்டே இருக்கலாம்.

அடிப்படையில், ஒரு அரசியல் தலைவரின் வாரிசு இயல்பாகவே எல்லா மக்களிடத்தும் நன்றாகவே அறிமுகமாகிவிடுகிறார். ஒவ்வொரு மாவட்ட / மாநில அளவிலான தலைவர்களும் மாநிலத்தின் / தேசத்தின் முழுமையான மக்களுக்கும் அறிமுகமானவர்கள் அல்லர்.

முழு மாநிலத்திற்கும் அறிமுகமான  ஒருவர் மக்கள் மன்றத்தின் முன் நிற்கும்போது இயல்பாகவே சற்று எளிதாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார். அதனாலேயே அரசியல் கட்சிகள் வாரிசுகளை முன் நிறுத்துகிறார்கள்.

இன்னொன்று தலைமையின் கீழ் தமக்குள்ள விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள இரண்டாம் மட்டத்தலைமைகள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் வாரிசுகளை புகழ்ந்துரைப்பதும் , அவர்களிடம் தமது இருப்பைக் காட்டிக்கொள்ள செய்யும் அதீத விளம்பரமும் துதிபாடலும். அதற்கான சரியான உதாரணங்கள் அழகிரியும் , காங்கிரஸ் தலைவர் ஜி.கே . வாசனும். இருவருமே கீழ்மட்டத்தொண்டர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு தலைமைக்கு இழுத்து வரப்பட்டவர்கள்.

மேற்கண்ட இரண்டு காரணங்களைத் தவிர மூன்றாவது முக்கியக் காரணம் மக்களின் மனப்பாங்கு....

இங்கே நேற்றுவரை , துரை துரை என்று ஆங்கிலேயர்களைத் துதிபாடிய அனேக மக்கள் தங்களை ஆள்பவர்களையும் அந்த துரை ஸ்தானத்தில் வைத்தே பார்க்கிறார்கள்.....முடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்கிலிருந்து குடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்குக்கு இந்திய மக்கள் மாறவே இல்லை. அதனால் எப்படி மன்னரின் மகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வாரிசாக அங்கீகரிக்கப்படுகிறாரோ அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது.

சரி இந்திய அளவில் தான் இப்படி . உலக அளவில்?

உலக அளவிலும் கூட வாரிசு அரசியல் கணிசமாக இருந்தாலும் இந்திய அளவிற்கு இல்லை. அமெரிக்காவின் ஜூனியர் ஜார்ஜ் புஷ் , இந்தோனேசியாவின் மேகவதி சுகர்னோ , சிறிலங்காவின் சந்திரிகா குமாரதுங்க , பாகிஸ்தானின் பெனாசீர் பூட்டோ , பங்களாதேஷின் ஷேக் ஹஸினா  என்று நீள்கிறது பட்டியல்.

வாரிசு அரசியலானது நிலையான அரசுகளுக்கு ஒரளவு உதவினாலும் , திறமையான தலைவர்கள் நாட்டை ஆள்வதற்கும் , தகுதியுள்ளவர்கள் பொறுப்பிற்கு வருவதற்கும் ஒரு பெரும் தடைக்கல்லாகவே இருந்து வருகிறது.

என்றைக்கு  தனிமனித துதிப்பாட்டில் இருந்து விலகி , நேர்மையானவர்களையும் , தகுதியுள்ளவர்களையும் தங்களது வழிகாட்டிகளாக , தலைமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மக்கள் அடைகிறார்களோ அன்றே வாரிசு அரசியலிலிருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.

வாரிசு அரசியலில் இருந்து விடுபடுவதே நேர்மையான மக்களாட்சியாகும். அரசியலில் நேர்மையையும் , தன்னலமின்மையையும் , வெளிப்படையான நிர்வாகத்தையும் நாமே தொலைத்து  விட்டு யாராவது வந்து மீட்டுத்தருவார்களா என்று காத்திருக்கிறோம்...

நம்மால் மட்டுமே நாம் தொலைத்ததை மீளப்பெற முடியும் என்ற அடிப்படையைக் கூட அறிந்து கொள்ளாமல்........! ஆக , நம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.!


படைப்பு.-

"ழ"கரம் - "உள்ளதைச் சொல்வோம்" குழு.