Showing posts with label இந்திய அரசியல். Show all posts
Showing posts with label இந்திய அரசியல். Show all posts

Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

Friday, July 16, 2010

நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்...மனிதர்கள்..!

இந்திய , தமிழக அரசாங்கத்தின் "துக்ளக்" கோட்பாட்டு அரசியலானது சீமானின் இருப்பையும் , தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு..

Necessity is the mother of innovation.  
தமிழில் சொல்வதாயிருந்தால் ,தேவைகளே கண்டுபிடிப்புக்களுக்கு காரணமாகின்றன. 

காங்கிரஸ் பேரியக்கத்தின் " தமிழ் - தமிழர் " விரோத செயல்பாடு தான் திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தை உருவாக்கியது...கடந்த ஒரீரு வருடங்களுக்கு முன்பு வரை நாமும் கூட அதே திமுக என்னும் கட்சிக்குக் கொடி பிடித்து நடை நடந்தவர்கள் தான். 

அன்று எங்கள் நெஞ்சில் அண்ணா மூட்டிய தீயை அணைத்து ,  எங்களையெல்லாம் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கத் தூண்டும்  தமிழர் விரோத சக்தியாக இன்று அதே கருணாநிதி அவர்களின் , தமிழ்நாட்டு அரசின் "துக்ளக்" தனமான செயல்பாடுகள் எள்ளி நகையாடும் வண்ணம் இருக்கின்றன.

ஜாமீனில் விட இயலாத அளவுக்கு "சீமான்" என்ன குற்றஞ் செய்தார்?

உணர்ச்சி கெட்ட ஜென்மங்களாய் , சேற்றினில் விழுந்த எருமை மாடுகளைப் போல் - எங்கு எது நடப்பினும் கவலையற்றுக் கிடக்கும் "தமிழா...கொஞ்சம் எழடா" என்று உரத்துக் கூவினார்....

அது குற்றமா?

அப்படியெனில் "தேசிய" மொழியாம் இந்தி மொழியை ( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுவே அரியணையில் நிற்கும் மொழி...) திமுக எதிர்த்த போது இந்திய  இறையாண்மை எங்கே போனது?

அந்த இறையாண்மைக்கு பங்கம் வகிக்கும் செயலுக்கு மூல காரணமே இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் "திமுக" தானே? 

அந்தச் செயலுக்கு தண்டனை கொடுப்பது யார். ?

தண்ணிரில் பந்தைப் போட்டால் மிதக்கும். அதே பந்தை நீருக்குள் அமுக்கி அமுக்கி விட அது மேலும் எகிறும்...எகிறிக்குதிக்கும்...அதன் ஆட்டத்தை சுலபமாக அடக்கி விட முடியாது.

இது இயற்கையின் விதி....

அது போலத்தான் "சீமானும்", அவர் பின்னால் அணி வகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியும்... பந்து அமைதியாகவே மிதக்கிறது. மிதந்தது....ஆனால் "துக்ளக்" தனமான திமுக அரசின் செயல்பாடுகள் அந்த இளைஞர்களை அமைதி குன்றச் செய்கின்றன. அதன்மூலம் அவர்களை மேலும் எழுச்சியுறச் செய்கின்றன.

இவையெல்லாம் திமு கழகத்திற்குத் தெரியாதவை அல்ல.........60 களில் உணர்ச்சிப் பெருக்காய் கொந்தளித்த தமிழ் இளைஞர்களால் "காங்கிரஸ்" காணாமல் போனது. அப்போதைய எழுச்சி , அதற்கு முன்னர் "விடுதலை உணர்வாளர்கள் அல்லது இந்தியர் என்ற பேச்சில் கட்டுண்ட இளைஞர்களால் நிறைவேறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைவிட அன்று இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்தச் சூழலிலேயே இளைஞர்களின் எழுச்சியை ஏற்படுத்திட "அண்ணா" வால் முடிந்தது.

அதற்காக அவர் வெறும் ஒற்றைச் சொல்லையே ஆயுதமாக்கினார் ...

அது "தமிழ்" என்ற சொல்....

அதே "தமிழ்" என்ற ஆயுதம் தான் இந்த "துக்ளக்" ஆட்சியாளர்களை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்றது. அன்றைக்கு அண்ணாவிற்கும் , கருணாநிதிக்கும் இருந்த காரணங்களை விட பலமடங்கு போராட வேண்டிய தேவை தமிழ் இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கிறது...

அந்தத் தேவையே "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் , சீமானின் எழுச்சிக்கும் அடிப்படை.

உணமையாகவே தமிழர் மீது இந்த துக்ளக் அரசுக்கு அக்கறை இருக்குமானால் எம்மைத் தமிழராக மதியுங்கள்.....தமிழராக மதித்து போராட விளைகின்ற காரணங்களுக்கு தீர்வு காண முயற்சியுங்கள்...!!

அதை விடுத்து "உமது" அரசியல் இருப்புக்கு பங்கம் வருகிறதென தவறாக நினைத்து "நாம் தமிழர்" மீது அடக்குமுறையினை ஏவாதீர்கள்.....

ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை சீமானைக் கைது செய்யும் போதும் ஒரு சில ஆயிரம் இளைஞர்கள் " நாம் தமிழராய் " இணைத்துக் கொள்கிறார்கள்...எம்மைப் போல.

கைதுகளின் மூலம் , அந்த இளைஞர்களை பயப்படுத்த முனைவதாய் எண்ணிக்கொண்டு ஆத்திரமூட்டச் செய்யாதீர்கள்...அந்த ஆத்திரம் உம்மை அழித்துவிடும்..

உதாரணம் கேட்கிறீர்களா???

கண் முன்னே இருக்கிறது......

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்ததும் , திமுக வென்றதுமான வரலாறே  உதாரணம்...

நிறைகுடமாக நீங்கள் இருப்பீர்கள் எனில் குடத்தை நிரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. ஆனால் குறைகுடமாக குற்றத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு யாரும் நீர் நிரப்பக் கூடாது என்று சொல்வீர்களானால் , இப்போது போலவே "தமிழ்" உணர்வாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவீர்களானால்................ குறித்துக்கொள்ளுங்கள்...

உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது..திமுக , அதிமுக , தேமுதிக என்று நீளும் தமிழ் விரோத , தமிழர் விரோத சக்திகளே உங்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது.

காரணம் , நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்....காலடி பட்டதும் தூள் தூளாய்ச் சிதறி காணாமல் போவதற்கு...

நாம் மனிதர்கள் ....

ரத்தமும் , சதையுமாக உணர்வால் உந்தப் பட்டு கொதிக்கும் "நாம் தமிழர்கள்"..

Saturday, June 12, 2010

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : சதியா ? நாடகமா?

பதிவுக்குள் போகுமுன் , ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். என்ன தான் இராஜபக்சே மேல் கோபம் இருந்தாலும் இந்த ரயில் தண்டவாள தகர்ப்பு போன்ற முட்டாள் தனமான காரியங்களை என்றைக்குமே ஆதரிப்பதில்லை , சாதாரண அப்பாவி பொதுமக்களின் மீதான வன்முறையைப் போன்ற விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான காரியம் எதுவுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். ஒரு வேளை உண்மையான தமிழுணர்வாளர்களே இந்த மட்டரகமான காரியத்தைச் செய்திருந்தாலும் அதை ஆதரிப்பதில் உடன்பாடில்லை. 

சரி நிற்க ; 

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பினைக் கண்டுபிடித்ததாக பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது. எப்படிக் கண்டுபிடித்ததாம்? அவர்கள் மொழியிலேயே பார்ப்போம்.


நாசவேலையில் இருந்து தப்பியது எப்படி? :

நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டு பெரும் நாசவேலையில் இருந்து ரயில் விபத்து தப்பிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்து கிடைத்த தகவலின்படி விவரம் வருமாறு: இந்த பாதையில் நள்ளிரவு 2. மணி . 10 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது ரயில் டிரைவர் சேகரன், ரயில் சற்று பம்முவதுபோல, உணர்வதாக பேரணி ஸ்டேஷன் மாஸ்டர் ருத்ரபாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை.
 
இவர் இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக வரும் ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். ( இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது) இதனையடுத்து ரயில்வே ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபால்நாத் ராவுக்கு முண்டியம்பாக்கம் ஸ்டேஷனில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்ந்து ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை தண்டவாளம் தகர்ந்த இடத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகள் தப்பினர். 

ஆதாரம் : தினமலர்

# பம்முவது என்றால் என்ன? முதலில் இதுபோன்ற கலோக்கியல்  மொழியினை ஒரு நாகரீக ஊடகத்தில் வெளியிடுவது முறையல்ல என்பதைத் தள்ளிவைத்து விடுவோம். பம்முவது என்றால் தயங்கித் தயங்கி என்று வைத்துக்கொள்ளலாமா ? அல்லது திணறித் திணறி என்றும் வைத்துக்கொள்ளலாம். அப்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது பத்திரிக்கை... பிறகெப்படி ரயில் பம்மியது? ரயில் பம்மியது என்றால் குண்டு வைத்துத் தகர்க்கும் வரை ரயில்வே போலீசாரும் , அலுவலர்களும் வேடிக்கை பார்த்தார்களா?

#    தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் பதினைந்து மீட்டர் முன்னால் தான் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் நிற்கிறது என்கிற போது அந்த கும்மிருட்டில் ( நள்ளிரவு ) தண்டவாளம் அவ்வளவு சரியாகத் தெரிந்ததா?காரணம் , பதினைந்து மீட்டர் முன்னால் ரயிலை நிறுத்த குறைந்தபட்சம் குண்டு வெடிப்பை ஒரு மைலுக்கும் அதிகமான தொலைவில் இருந்து தண்டவாளத் தகர்ப்பை பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நான் கேள்விப்பட்ட வரை பதினைந்து மீட்டர் முன்னால் எல்லாம் ரயிலை நிறுத்தினாலும் , ரயில் நிற்க குறைந்த பட்சம்ஓரு மைல் தொலைவிற்கு பயணித்தே நிற்கும்.  அதுபற்றிய ஆதாரம் தேடிய போது கிடைத்த தகவல்...

on most trains, if the engineer can see you, it is usually too late to stop for you, even when placing the train into an emergency application of the brakes. So, lets just say the average stopping distance in full emergency is at least a mile and up.

Source : Yahoo
#   முதல் ரயில் (சேலம் எக்ஸ்பிரஸ்) போனபிறகே குண்டு வெடித்திருந்தால் , பிறகெப்படி முதல் ரயில் குலுங்கிக் குலுங்கிச் செல்லும்? எப்படி விபத்துக்குள்ளாகாமல் தப்பியிருக்கும்?

 
சரி , டெக்னிக்கல் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே ஒரு துண்டுச் சீட்டை வைத்துக்கொண்டு , அதுவும் தெள்ளத்தெளிவாக புலிகள் இதைச் செய்தார்கள் என்று பட்டம் சூட்டுவதைப் பார்த்தால் , இது என்னமோ அரசியல் நாடகம் போலத்தான் தோன்றுகிறதோ தவிர வேறொன்றும் எண்ணத் தோன்றவில்லை.

# எப்படி நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தை ஒடுக்கி கடந்த முறை தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலையை ஒடுக்க முயற்சித்தார்களோ சற்றேறக்குறைய அதே நிலையில் தான் இந்தச் சதியும் நடந்திருக்கிறது. சற்றே ஒடுங்கியிருந்த தமிழின உணர்வாளர்கள் "இராஜபக்செ" வின் வருகையையொட்டி போராட்டங்களை நடாத்துகிறார்கள்..... அவர்களை ஒடுக்கவும் , செம்மொழி மாநாட்டைக் காரணம் காட்டி அவர்களை எல்லாம் சிறையில் தள்ளவும் நடக்கும் முயற்சியோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

# புலிகளே இலங்கையில் செய்யாத இது போன்ற அற்பத்தனமான காரியங்களை புலிகளின் ஆதரவாளர்கள் இங்கே செய்திருப்பார்கள் என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

#    தமிழர்களின் மரணத்திற்கு பதில் கேட்டு உலுக்கும் தமிழின உணர்வாளர்கள் தமிழர்களையே கொல்ல முயற்சிப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

# இராஜபக்சேவை எதிர்க்கத் துணிபவர்கள் , வருவதற்கு முன் எச்சரிப்பார்களா இல்லை அதற்குப் பின்னரா? உண்மையில் தமிழர்தம் நிலைபற்றி ஊடகங்களின் கவனத்தைக் கவர முயற்சிப்பவர்கள் இராஜபக்சே வருகைக்கு முன்னால் தானே செய்ய வேண்டும்?



எனக்கென்னமோ , இந்தச் சம்பவத்திற்குப் புலிப் பெயர் சூட்டி , தமிழின ஆதரவாளர்களை ஒடுக்கும் முயற்சியாகத் தான் தோன்றுகிறது என்றாலும் நாமும் அதுபோன்ற முடிவிற்கு வந்தால் நமக்கும் , இராஜதந்திரிகளுக்கும் வித்தியாசம் என்னவிருக்கிறது? 

ஆகவே , விசாரணைக்குப் பின் தான் முடிவு தெரியும். ஆனால் விசாரிப்பவர்கள் யார் ? ஒருவேளை அந்தச் சதியை யார் செய்திருப்பார்களோ என்று ஒருதரப்பு சந்தேகிக்கும் நபர்கள். இருந்தாலும் விசாரணையைப் பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்...ஏனெனில் இது சனநாயக நாடு..

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : சதியா ? நாடகமா?   

- எழுத ஆரம்பித்த போது எழுந்த கேள்வி எழுதி முடித்தபின்னும் அப்படியே இருக்கிறது.

Thursday, May 27, 2010

த. தே. கூவை தடை செய்யக் காரணங்கள் உள்ளன - ஒரு சிங்கள ஏடு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய போதுமான காரணங்கள் இருக்கின்றன என்று ஒரு சிங்கள இணைய ஏடு சொல்கிறது... இந்த "போதுமான" என்ற வார்த்தைக்கு லங்காவெப் அந்த சிங்கள ஊடகம் கையாண்டிருக்கிற அல்லது உதாரணம் காட்டியிருக்கிற சேதி இன்னமும் விசேடம்...

அதாவது , இந்திய நடுவண் அரசு "புலிகளை" தடை செய்ய அல்லது சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருந்துமாம்....

இந்திய அரசு புலிகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்ததற்குக் கூறியிருந்த காரணங்களை முழுவதுமாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்...

சீன அரவணைப்பில் சுகம் காணும் சிறிலங்கா அரசை திருப்திப் படுத்த இந்திய நடுவண் அரசும் , தமிழக அரசும் போட்ட உத்தரவை எடுத்துக்கொண்டு , தமிழீழ மக்களின் ஒரே குரலாக ( அது மட்டுப்படுத்தப்பட்ட , தணிக்கை செய்யப்பட்ட குரலாகவே இருந்தாலும்)  இன்று இலங்கைத் தீவினுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழருக்கான வாய்ப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிங்கள் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் எழுதுகிறார் எனில் , சிங்களர்களின் மனப்போக்கு என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...


ஜனநாயக ரீதியாகக் கூட தமது குரலை எடுத்தியம்ப தமிழர்களுக்கு அனுமதியளிக்கத் தயாராக இல்லை இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயம் என்பதை "தில்ருக் கன்னன்கரா" என்ற  சிங்கள எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...



Demonstrations regularly carried out by separatists elements and civil disobedience campaigns TNA has vowed to carry out.  More disquiet and threat is faced by Sri Lanka than by India by these harsh campaigns done under the guise of peaceful protest. Ultra racism associated with these is another grave concern for Lankans.

 விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றார்கள்....ஏதோ , ஆயுதமெடுத்துப் போராடியது மட்டுமே குற்றமென்பதாகவும் , ஜனநாயக முறையில் போராடி இருந்தால் சுதந்திரத்தை சும்மா தூக்கிக்கொடுத்திருப்பார்கள் என்று சொல்லும் அகிம்சாவாதிகள் இந்த அநியாய வாதம் பற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் போலவே இருக்கிறது....

இந்தியா தான் வழிகாட்டுகிறது சிறிலங்காவிற்கு எப்போதும் என்று வேறு சொல்கிறார் கட்டுரையாளர்......அதையும் பார்ப்போம்...

Indian concerns further give rise to yet another important issue that affects Sri Lanka more than India. India illegalized all separatist activity in 1962 whereas it took Sri Lanka another 21 years to follow suit. During this time Tamil separatists passed the Vaddukoddai Resolution in 1976. Had Sri Lanka followed India in 1962 in illegalizing all forms of separatism, this would not have happened.
இந்தியா 1962 லேயே அனைத்து தனிநாட்டுக் கோரிக்கைகளையும் தடை செய்து விட்டதாகவும் , ஆனால் சிறிலங்கா 21 வருடங்கள் கழித்தே அதைச் செய்ததாகவும்  சொல்கிறார்.....

இப்போது சில விடயங்களைப் பார்ப்போம்...

- விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்து விட்டு நிராயுதபாணியாக  "13 வது" சட்டதிருத்தத்தின் மூலம் "வட கிழக்கு " மாகாணங்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று சிங்களத்துக்குச் சார்பான தொரு ஒப்பந்தத்தை திணித்தது இந்தியா.....

- இலங்கை புலிகளைத் தடை செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே தடை செய்தது இந்தியா..

- புலிகளை ஒடுக்க அனைத்து வகை ஆயுத , இராஜதந்திர உதவிகளைச் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்......அதை இன்று வரை இல்லை என்று நிருபிக்க முடியவில்லை இந்தியாவால்.....குறைந்தபட்சம் , தமிழகத் தமிழர்களின் திருப்திக்காவது நிருபிக்க முயலவில்லை.....லோக்கல் கதர்ச்சட்டைகள் தான் இல்லை இல்லை என்று கூவினார்கள்.......டெல்லி ஏறெடுத்தும் பார்க்கக் காணோம்...

- தமிழினத்திற்கெதிரான யுத்தத்தில் ஐநாவின் , மேற்குலகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும் குடைபோல நின்று சிங்களத்தைக் காத்தது இந்தியா என்பது உண்மைதானே.....அதன் மூலம் தமிழின அழிவுக்கு இந்தியாவும் காரணமே என்பதுவே தமிழர்களின் வாதம்....

இவ்வாதங்களை மறுக்கவோ , மறைக்கவோ செய்ய இயலாத இந்தியா "புலிகளால்" இந்தியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் என்று அறிவிப்பது என்பது முறையோ இல்லையோ பிறகு பார்க்கலாம்....அது சிறிலங்காவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே இருக்கலாம்....காரணம் இந்தியாவை விட்டு சிறிலங்கா சீனாவை தேடிப் போய்க் கொண்டிருக்கிறது...

அதை பன்னாட்டு பொருளாதார இதழான "பைனான்சியல் டைம்ஸ்"ல் இந்திய ஆய்வாளர்  இப்படிக் குறிப்பிடுகிறார்..

"China has been trying to jump in and seize more opportunities in Sri Lanka," says Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research, a New Delhi think-tank.
China was Sri Lanka's biggest source of foreign funding in 2009, providing $1.2bn - almost triple the amount given by the Asian Development Bank, the number two overseas lender

source : financial times

நிலைமை இவ்வாறிருக்க , சிங்களத்தைக் குளிர்விக்க இந்திய இராஜதந்திரிகள் புலிகள் மீது பாய்கிறார்கள்....அதைச் சற்றும் சட்டை செய்யாத சிங்களர்கள் 
இந்தியாவுடனான "செபா " ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்கிறார்கள்.......

President Mahinda Rajapaksa on Tuesday said Sri Lanka would not enter into trade agreements that would have an adverse effect on the country’s economy when he met a group of protestors against the implementation of a comprehensive economic partnership agreement (CEPA) with India.

ஆக , சீனாவிற்கு அம்பாந் தோட்டை துறைமுகம் , அனல்மின் நிலையம் என்று அள்ளிக்கொடுக்கும் சிறிலங்கா "இந்தியாவிற்கு" ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்ததிற்கு "பெப்பே" காட்டுகிறது என்றால் சிறிலங்கா செல்லும் திசையைப் புரிந்து கொள்ளாத இராஜதந்திரிகள் தான் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலைதானே????

அந்த இராஜதந்திரிகள்  , உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பது மட்டுமின்றி இன்னமும் புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்.......காட்டி தமிழக மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்...

அப்படித் திசை திருப்ப முயலும் இந்த இராஜதந்திரிகள் , ஒருவேளை சிங்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "இந்தியா" சொன்ன அதே காரணங்களுக்காக தடை செய்யப்படுமானால் அதையும் வழிமொழிவார்களா என்பதே நம் கேள்வி......

யாருக்குத் தெரியும் ......த.தே.கூட்டமைப்பும் கூட சட்டவிரோத அமைப்பென்ற கெஜட் அறிவிப்பும் கூட கூடியவிரைவில் வரலாம் என்கிறீர்களா நண்பர்களே???

கோபாலபுரத்தாரின் ஆசியும் , சொக்கத்தங்கத்தின் ஆதரவும் இருக்கும் போது இந்திய இராஜதந்திரிகள் இதைக் கூட செய்ய மாட்டார்களா என்ன????

-கதிரவன்

Monday, May 24, 2010

"நாம் தமிழர் " இயக்கத்திற்கு "செக்" வைக்கிறது இந்தியா.

அனேகர் இந்த செய்தியை இப்போது படித்திருப்பீர்கள்......

ஊடகங்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பையும் தாண்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் மதுரையில் "நாம் தமிழர்" இயக்க மாநாட்டில் கூடினார்கள் என்ற செய்தி டெல்லி வரை எட்டியிருக்கிறது......

இது "நாம் தமிழர்" இயக்கத்திற்கு புதுதில்லியின் இந்திய மத்திய அரசாங்கம் வைத்த "செக்" என்று சொல்லலாம் என்று "பட்சி" சொல்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்ட விரோத அமைப்பு. 

சென்னை: இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு [^] அறிவித்துள்ளது. இது தொடர்பாக எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் புலிகளை ஆதரிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை [^] எடுப்பது மேலும் எளிதாகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;

2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,

ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.

இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 10, 2010

வக்கற்ற நிலையிலும் மானம் காத்த பார்வதியம்மாள்.!

எண்பது வயதிற்கும் மூத்த உயர்திரு தேசியத்தலைவரின் தாயார் இந்தியா வருவதற்கு மத்திய அரசாங்கம் போட்ட நிபந்தனைகளைப் பார்த்தால் , அது கோபாலபுரத்தில் எழுதித்தரப்பட்டு சொக்கத்தங்கம் சோனியாவின் ஒப்புதலை பெற்றுவந்த ஒன்றாகவே தோற்றமளிக்கிறது....



அந்த  நிபந்தனைகள்:

பார்வதி தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவமனையில் தான் தங்க வேண்டும், வேறெங்கும் அவர் தங்கக் கூடாது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் விரும்பினால், அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

எந்த அரசியல் கட்சியினருடனும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் அவர் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே, தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட  நிபந்தனைகளுடன் நண்பன்  கூப்பிட்டால் கூட போகத்தோன்றாது. இதில் எமது தேசியத்தலைவரைப் பெற்றெடுத்த பார்வதி அம்மையார் அவர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இருப்பினும் போக்கிடம் இல்லா ஒரு கேவலமான சூழலுக்கு அவரை நம்  தமிழினத்துரோகிகள் கொண்டு வந்து விட்டார்கள் என்ற உண்மை சுட்டதால் அமைதி காத்தோம்.

ஆனால் , அந்த வீரத்தாய் , இத்தகைய கேவலமான நிபந்தனைகளுடன் இந்தியா வரத்தேவையில்லை என்று இந்தியா அளித்த "விசா"வை தூக்கி எறிந்து இலங்கைக்கே சென்று விட்டார் அவ்வம்மையார்


NEW DELHI/CHENNAI: Parvathi Ammal, mother of slain LTTE chief V Prabhakaran, has rejected the conditions that the Centre has attached to her visit to Tamil Nadu, Home Ministry sources said on Monday.

Parvathi Ammal flew from Malaysia to Sri Lanka on Monday after rejecting the Centre’s conditions for her stay in India. Sources told Express that Parvathi has has gone back to her home in Valvettithurai in Jaffna, where she hopes to live the rest of her life.


இதுகாறும் எமக்கு பெரிதான கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஒருவேளை அப்படியொருவர் இருந்தால் இந்த தமிழகத்தின் ஈனப்பிறப்புக்களை கண்டிப்பாக மன்னிக்கவே மன்னிக்காதீர்கள்....அப்படி மன்னித்தால் , நாங்கள் உங்களின் நேர்மையைக்கூட சந்தேகிக்க நேரிடும்.

வக்கற்ற நிலையிலும் கூட வாய்மை காத்த , வீரம் காத்த , மானம் காத்த பார்வதி அம்மையார் இருக்கும் திசை நோக்கி மனம்  வருந்தி  வணங்குகிறோம்....நாங்கள் எல்லாம் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது.....!!!

நாடுபோற்றும் நல்லதொரு பிள்ளையை பெற்றெடுத்த தாயே , உமது இந்த வலிக்கு இந்த நயவஞ்சகர்கள் பதில் சொல்லும் காலம் வரும்...அதை உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்கள் என்று மட்டும் சொல்லி விடைபெறுகிறோம். 

Friday, February 19, 2010

இந்தியனாக இருப்பதில் உள்ள சிரமங்கள்.!

எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான். ஆனால் என்ன செய்வது? இந்தியனாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போகத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் நாமில்லை என்பதை எல்லா இந்தியர்களும் அறியவே செய்வார்கள்.!

சில தினங்களுக்கு முன்னால் , இந்தியர்களாகவே ஹைதராபாத் சென்று "பெல்" நிறுவனத் தேர்வினை எழுதி விட்டு வந்த தமிழக மாணவர்களைக் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள் ஆந்திர மாணவர்கள். அங்கே கைகலப்பில் ஈடுப்பட்டது ஆந்திரமும் , தமிழகமும் -இதில் இந்தியன் எங்கே வந்திருக்கிறது. 

மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் , உ.பி. மாநிலத்தாரை மகாராஷ்டிராவின் நவ் நிர்மாண் சேனாவினர் தாக்கிய போது வெகுண்டெழுந்த இந்திய மீடியாக்கள் , பத்திச் செய்தியாகக் கூட ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைச் செய்தியாக்க வில்லை. நாம் இந்தியர்களாகவே இருக்கிறோம். அவர்கள் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லை போலும்.!

தீவீரவாதத்திற்கெதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்மக்கள் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்று சொன்ன இந்தியர்கள் - குறிப்பாக சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் சேலையைப் பிடித்து அரசியல் பாடம் படித்துக்கொண்டிருந்த பிதாமகர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று "யாழ்ப்பாண தமிழர்கள் " என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு இந்திய ஏடு எடுத்துப் போட்டிருக்கிறது பாருங்கள்.....!!! அதை அப்படியே கீழே தருகிறேன். 
A Jaffna man blames India for the defeat of the LTTE. “India had failed to stop the last leg of the war between the Lankan forces and the LTTE and prevent the killing of thousands of Tamil civilians,” they complained.Tamil Nadu Chief Minister M Karunanidhi only enacted a “drama” in support of the Tamils here, they sneered.

source : The New Indian Express  

தமிழில் அதை மொழி பெயர்த்திருக்கிறேன். அது கீழே.



யாழ்ப்பாண தமிழர் ஒருவர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவையே குற்றஞ்சாட்டுகிறார். இறுதிக்கட்ட போரை நிறுத்துவதற்கு இந்தியா தவறிவிட்டது , அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதைத் தடுப்பதிலுமிருந்து தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போல நாடகம் மட்டுமே நடாத்திக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அந்த ஏடு பிரசுரித்திருக்கிறது.


அத்துடன் , யாழ்ப்பாண மக்களின் பொதுப்படையான கருத்தாக இருப்பதாக இன்னொரு பத்தியையும் பிரசுரித்திருக்கிறது.

The businessmen and others Express spoke to made it clear that they had fraternal feelings towards Indians. The issue was with the government in Delhi and the ruling party in Tamil Nadu, they stressed. The general feeling here is that Congress leader Sonia Gandhi had punished people for a crime they did not commit.
source :The New Indian Express , Date 18th Feb 2010

இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய வெகுபல யாழ்ப்பாண வாசிகளும் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். இந்திய அரசாங்கத்தின் மீதும் , தமிழக ஆளுங்கட்சியின் மீதுமே அவர்கள் வெகுவாக குற்றஞ்ச்சாட்டினார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி அவர்கள் தம்மைத் தண்டித்து விட்டதாக வேதனைப் பட்டார்கள் என்றும் அந்த ஏடு எழுதியிருக்கிறது. 

தமிழ்த்தேசியவாதிகள் கதறியபோதும் , தமிழினம் அழிகிறது என்று ஓலமிட்ட போதும் வாய்மூடி மெளனியாக இருந்த இந்திய அரசினையும் , இந்திய அரசிற்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனையொத்த தமிழக அரசினையும் , எவ்வாறு எமக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். எந்த அடிப்படையில் நாம் இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள முடியும் சொல்லுங்கள்.

தமிழர்களின் மன வேதனையை தீர்க்கத்தவறிய மன்னனை மக்கள் இரசிப்பதிலும் , போற்றுவதிலும் நியாயம் ஏதும் உண்டா சொல்லுங்கள்... அப்படி போற்றுவதிலிருந்து மக்கள் தவறுகின்ற போது மனவேதனையைத் தீர்க்கத் தவறியது மன்னனின் தவறுதானேயொழிய மக்களின் தவறாக முடியுமா?

ராஜிவ்காந்தி என்ற ஒரு உயிருக்காக ஈழத் தமிழர்களை கொன்றொழித்தீர்கள். இந்திராகாந்தியைக் கொன்றொழித்தவனை இன்னமும் சீக்கியர்கள் தேசபக்தனாக போற்றும் போது அமைதியாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்ற இளந்தமிழர் இயக்கத்தினரின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்வதற்கு துப்பிருக்கிறதா இந்திய காங்கிரஸ் காரர்களிடம்? 

இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங்கை தியாகியாக வருணித்து பொற்கோவிலில் புகைப்படத்தை வைத்து சீக்கியர்கள் வழிபடுவதை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர். இணைப்பு இதோ இங்கே.!

அதைப் பற்றி கேட்டதற்கு , பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது என்று பஜனை பாடியிருக்கிறார் இந்திய தேசிய வியாதி முத்திப்போனவர்களில் மூத்தவரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.  ( ஆதாரம் : குமுதம் ரிப்போர்ட்டர் )
பஞ்சாப் என்பது உலகமானால் , அதில் தலையிட மாட்டோம் என்றால் ஏன் இலங்கைக்கு மட்டும் ஆயுதம் கொடுத்து ஈழத்தமிழர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டால் , ஆயுதமெல்லாம் கொடுக்கவில்லை , சும்மா ரேடார் மட்டுமே கொடுத்தோம் என்றீர்கள் . பிறகு இலங்கை இராணுவச் சாயம் பூசி அனுப்பின இரண்டு போர்க்கப்பல்களின் குட்டு வெளிப்பட்டது. பொன்சேகாவிற்கும் - இராஜபக்சேவும் பிரச்சினை என்றவுடன் கடல் தாண்டிப் போய் பஞ்சாயத்து பண்ணி வைத்தீர்கள்.

இப்படி இந்தியர்களாக நாங்கள் இருப்பதில் ஏகப்பட்ட சிரமங்களை நீங்களே உருவாக்கி விட்டு , தேசப்பற்றுடன் பேசுங்கள் என்றால் எங்கிருந்து வரும் தேசப்பற்று. ? 
அதென்ன சுக்கா , மிளகா - கடையில் போய் கால் கிலோ வாங்கிவர....? இன்னமும் கூட எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான்...
அப்படியாவது இருக்க விடுவார்களா இந்த இந்திய தேசிய வியாதிகள்?

இப்படிக்கு,
இன்னமும் ஒரு இந்தியன். !

Tuesday, February 16, 2010

ஆறப்போடுவதில் ஆஸ்கார் வாங்கும் இந்திய அரசு.!

அன்று நாம் கதறினோம். கேட்கத் தயாராய் இல்லை இந்திய நடுவண் அரசு.

முத்துக்குமார் தொடங்கி இரட்டை இலக்கங்களை தமிழுக்காய் தன்னை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொட்டபிறகும் வாய்திறந்து எதுவுமே பேசாமல் தமிழ்நாட்டிற்கும் , தமக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போலவே பேசா மடந்தையாய் , தொலைநோக்கின்றி , அனேக தமிழர்களுக்குள் தாம் இந்தியர் என்னும் உணர்வையே கொஞ்சம் வெறுக்க/ மறக்கத் தூண்டியது இந்திய நடுவண் அரசின் செய்கைகள்.!

அதன் பின்னர் , கச்சத் தீவினையொட்டிய தமிழக அரசின் / தமிழக எதிர்க்கட்சிகளின் கருத்தினை முற்றிலும் புறந்தள்ளி கச்சத்தீவு முடிந்து போன கதை என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கேரள முல்லைப் பெரியார் பிரச்சினையில் கூட அனேக குழப்பங்கள்...கேரளாவிற்கு புது அணை கட்டும் ஆய்விற்கான அனுமதியினை வழங்கி முற்றிலும் கேரளாவிற்குச் சார்பான ஒரு முடிவினை எடுத்தார் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஒரு பொதுக்கூட்டம் மதுரையில் நடத்த முயன்ற போது , ஸ்பெக்ட்ரம் விசாரணையை கையிலெடுத்து திமுகவை மிரட்டிப் பணிய வைத்த சாதனையையும் செய்தது இந்திய நடுவண் அரசு.

தெலுங்கானா பிரச்சினையில் இந்திய நடுவண் அரசின் சொதப்பல் ஊரறிந்ததே. முதலில் தெலுங்கானாவை அங்கீகரிப்பதாகச் சொல்லிவிட்டு , பின்பு பின்வாங்கி , விசாரணைக் கமிஷன் அமைப்பதாகச் சொல்லி பிரச்சினையை ஆறப்போட்டு சூடு தணிக்கும் அபார வித்தையில் இறங்கி இருக்கிறது இந்திய அரசு. 

ராஜ் தாக்கரே மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழங்கி வந்த போதுஞ் சரி , மகாராஷ்டிரத்தில் மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை என்று வடமாநிலக் காரர்களைத் தாக்கிய போதும் சரி கொர் என்று குறட்டைவிட்டுத் தூங்கி விட்டு இன்று பால் தாக்கரே ஷாருக்கை விமர்சித்தவுடன் பொங்கியெழுந்த புதுவித்தையையும் செய்து காட்டியது இந்திய அரசு. 

இந்தியப்படைகளில் அதிக சதவீதம் பேர் பீகார் , உ.பிக் காரர்கள் தான் ...அதனால் இந்தியாவைக் காப்பவர்கள் அவர்கள்தான் என்று புதுமொழி சொன்னார் இந்திய நடுவண் அரசின் மவுத் பீஸான இராகுல் காந்தி.....இது அடுத்த மாநிலக்காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்ற அடிப்படை கூடப் புரியாமல்.!

கூர்க்காலாந்து , விதர்பா என்று தனித்தனி மாநிலக் கோரிக்கைகள் எழுவது எதனால் ? அதன் அடிப்படை என்ன என்று சிந்தித்து ஆராய வேண்டிய நடுவண் அரசோ எதைப்பற்றியும் சிந்திக்க மறுக்கிறது.....எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல தயங்குகிறது. 

முதுகெலும்பற்ற வகையில் எல்லா முடிவுகளையும் ஜவ்வு இழுப்பு இழுத்து மக்களைச் சோர்வடையச் செய்கிறது. அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வை குறைக்கச் செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே இந்திய அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கின்றன.

இந்திய மாநிலங்கள் தனித்தனி இனங்கள் , தனித்தனி கலாச்சாரம் கொண்டவை , அவர்களை இன்றைய அளவில் பிணைப்பது என்பது இந்திய நடுவண் அரசு மட்டுமே....ஏதேனும் பிணக்குகள் ஏற்படின் அதனை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டியதும் இந்திய நடுவண் அரசுதான்.

ஆனால் , தன் கடமையைச் சரிவரச் செய்கிறதா அது? எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஆனால் , கருத்து வேறுபாடற்ற முறையில் , மக்களுக்கான குரலாக , பழங்குடியின மக்களின் போராட்டங்களை , போராட்டங்களுக்கான விழுமியங்களை ஆராயாமலும் கிடப்பில் போட்டுக்கொண்டிருக்கிறது.


எல்லாவற்றையும் ஆறப்போட்டு காரியம் சாதிக்க நினைப்பது என்கிற நரசிம்மராவ் பார்முலா தான் , டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கு அடிப்படை என்பதுவும் , இந்து - முஸ்லீம் மக்களிடையே தீராப் பிணக்கை ஏற்படுத்திய அச்சம்பவமே இன்றைய நிறைய தீவிரவாதச் சம்பவங்களூக்கும் காரணம் என்பதுவும் யாராலும் மறைக்க முடியாதது. 

காவிரி , முல்லைப் பெரியார் , தெலுங்கானா என்று தொடங்கி நேற்று நடந்த மராட்டியப் பிரச்சினை வரைக்கும் எதற்குமே சரியான முடிவொன்றை கண்டு பிடிக்காமல் ஆட்சிக்காலத்தை தள்ளிக்கொண்டு போவதிலும் , கூட்டணித் தேரை வடம் பிடித்துப் போவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறதோ இந்திய நடுவண் அரசு என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை...!