திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் "ராகுல்" பார்முலாவால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது...
தமது தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் எப்போதும் வென்றதாக சரித்திரமில்லை....மாவட்டத்திற்கு ஒரு கோஷ்டியாக , ஊருக்கு ஒரு பிரிவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர் பலம் மிக்க கட்சியா என்று கேட்டால் இல்லை என்பதே வெகுபலரின் பதிலாக இருக்கலாம்...
இருப்பினும் குறிப்பிட்ட சத வாக்குவங்கியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால், அந்த வாக்குவங்கியும் கூட ஈழத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால் குறைந்திருக்கலாம் என்பதே உண்மை! அதுதான் கடந்த நாடாளுமன்றத்தேர்தல் சொல்லும் சேதி…பெருந்தலைகளே தோல்வி கண்டன என்பது வரலாறு!
இந்த முறை ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட திமுக நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் விழுமா என்பது சந்தேகம்தான்...அதேதான் திமுகவினரின் நிலையும்! யாரும் மனசளவில் காங்கிரஸுக்கு பல்லக்குத்தூக்க தயாரில்லை.
களநிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ கனவு காண்கிறது….90 தொகுதிகள் என்ற அபத்தமான கோரிக்கையை வைக்கிறது….ஆட்சியில் பங்கு என்பதை வேண்டுமானால் நியாயமான கோரிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்…அதைக்கூட தேர்தலுக்குப்பின்பு முடிவு செய்வதே சரியாக இருக்கமுடியும்?
காங்கிரசுக்கு கொடுக்கும் அதிக தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்லும் என்பதையே கடந்த நாடாளுமன்றத்தேர்தல் காட்டுகிறது…..காரணம் என்ன? அர்பணிப்பு ஏதுமற்ற அதன் கட்சிப்பணியாளர்களும் , எப்போது யாரை வாரிவிடலாம் என்று காத்துக்கிடக்கும் அதன் கோஷ்டிச்சண்டைகளும்தான்.! ஆக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி கொடுப்பதென்பது திமுகவைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை.!!
அப்படி ராகுல் பார்முலா தான் என்ன? அது இதுவரை சாதித்தது தான் என்ன?
காங்கிரஸ் வீழ்ந்துகிடக்கும் மாநிலங்களில் வெற்றிக்கொடி கட்டுவது!!! பீகாரில் லல்லுவைக் கழட்டிவிட்டு தனியே நின்று ஆட்சிக்கெதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் நிதிஷ்குமாரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றியதுதான் “ராகுல் பார்முலா” சாதித்த பாரிய சாதனை!! அதைத்தான் தமிழகத்திலும் செய்துகாட்டப்பார்க்கிறார் அவர்…….
களநிலை வேறாக இருக்கும் , காங்கிரஸ் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமற்ற பீகாரிலே அதுதான் நிலையென்றால் காங்கிரஸ் மீத் ஈழநிலையின்பால் இயல்பாகவே வெறுப்புற்றிருக்கும் தமிழகத்தில் என்ன நடக்கும்?
நமது கருத்தின் படி , கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒருதொகுதி கூட காங்கிரசுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது!! அறிவாலயம் வரை சிபிஐ வந்ததைக்க்காட்டிலும் வேறென்ன பெரிய அவமானத்தை காங்கிரஸ் தரக்கூடும்??
காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…ஏனென்றால் அந்தக்கட்சியையும் தூக்கிச்சுமக்கப்போவது எப்போதும் போல திமுக தொண்டர்கள்தான்..
ஒருவேளை காங்கிரஸ் தனியே வேறுசில சின்னக்கட்சிகளைச் சேர்த்து தனியே நின்றால் கிடைக்கப்போவது திமுகவிற்கு நிச்சய வெற்றியே…!!
ஏன்?
1. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். தனது சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பிட வழி பிறக்கும்!!!!
2. முறையற்ற,நேர்மையற்ற மீடியாக்களின் ஆட்சிக்கெதிரான பிரச்சாரங்களால் எழுந்திருக்கின்ற ஆட்சிக்கெதிரான வாக்குகள் இரண்டாகப்பிரியும்……..!!!1
3. சுருக்கமாகச் சொன்னால் கடந்த தேர்தலில் தேமுதிக செய்த வேலையை இம்முறை “காங்கிரஸ்’ செய்யும்!!
4. ஒருவேளை , காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையுமானால்..வைகோ+கம்யூனிஸ்டுகள் வெளியேறும் சூழல் உருவாகும்……திமுகவுடன் இணைய வாய்ப்பேதுமற்ற நிலையில் இவர்கள் தனியே நிற்பது அதிமுகவுக்குத்தான் பாதகமாகும்..
ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…
வெற்றியைவிட தோல்வியால் கிடைக்கும் லாபங்கள் அதைவிடப்பெரிது!!
1. சுயமரியாதையற்ற காங்கிரசுக்கூட்டணியில் இருப்பதால் சோர்ந்துகிடக்கும் திமுக தொண்டர்கள் புத்தெழுச்சி பெற வழிவகுக்கும்!!!
2. ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
3. காங்கிரஸ் என்ற தமிழர்களுக்கெதிரான கட்சி முகவரி ஏதுமற்று முடங்கிப்போகும்!!
ஆக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவது என்பது திமுகவிற்கு எவ்வகையில் பார்த்தாலும் நிச்சய வெற்றியையே அளிக்கப்போகிறது….
இனிமேலும் திமுகவின் முதுகிலேறி காங்கிரஸ் என்னும் நொண்டிக்குதிரை கரையைக்கடக்காமல் பார்த்துக்கொள்வதில் தான் கலைஞரின் இராஜதந்திரத்தின் வெற்றி இம்முறை இருக்கிறது!!!
வெல்வாரா? பார்ப்போம்!