Monday, May 03, 2010

மே 18 - அழிஞ்சுதான் போயினம்…ஆனா.........


தொப்பியும் , சீருடையும் , கவசமும் தரித்த அரசுப்படைகளுடன்,
பிய்ந்த ரப்பர் செருப்பினையும் , லுங்கிகளையும் தரித்துப் போரிட்ட
எமது புலிமறவக் கூட்டங்கள் சலிக்காமல் ரவையடித்தக் கதையதுகாண்.
எல்லாமும் கைமீறிப் போயிற்று…ஆம் , எல்லாமும் தான்.
எதிர்கால நம்பிக்கையாகவிருந்த  “கருணா”க்கள் குறிசொல்ல
அச்சமும் , பழியும் , பகையும் கொண்ட சிங்களன் சினம்கொண்டு வந்தனன்.
அதிர்வேட்டுக் கிளப்பி , அன்றாடம் அனல்காற்றென சுட்டெரித்த எம்
புலிக்கூட்டம் அந்தோ பரிதாபம் , விஷக்காற்றினால் வீழ்ந்தது காண்…!
வீரம் எம்மோடு விளைந்த தொன்றே….ஆனால் துரோகம் எமக்கு தூரமன்றோ?
சூழ்ச்சிக் களத்தில் சுருண்டு போயினர் எம் புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தில்!.
நந்திக்கடலொரு புறமாய் , இந்து மகா சமுத்திரமொரு புறமாய்
நச்சுத்திட்டமிதையிட்டு எம் தலைமையிதை முற்றுகை செய்த சதியெது?
ஆரேனும் வந்து எம் சனத்தை , புலியை , போராளியை மீட்டுச்செல்வரென
ஆகாத நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது யார்? எச்சக்தியது?
கரந்தடிப்புலியாகி , இந்திய வல்லரசை இமை மூடாவண்ணம்
காத தூரம் ஓட்டிய பிரபாகரனின் பிள்ளைகள் காசுக்கு குரைக்கும்
சிங்களத்து சிறுபிள்ளைகளிடம் வீழ்ந்த கதை எப்படி நம்ப?
சீனத்து வெடிமருந்தோ , சீமையின் தந்திரமோ , ஆரியத்தின் சூழ்ச்சிதானோ…
சினம் மிகுந்து கேட்டுக்கொண்டேன்…சிக்கவில்லை விடையின்னும்….
ஆறாத காயமுண்டு……ஆற்றாமை நெஞ்சிலுண்டு….
ஆரியக் கூட்டத்தின் மேல் அடங்காத கோபமுண்டு…….
அப்போது சொல்லிப்போட்டான் அருகிலுள்ள என் நண்பன்.
ஊரை வெய்தென்ன உபயோகம்…. ஊட்டுக்குள்ளே இருந்தது துரோகம்.
ஊமை போல் அது நின்னு அழித்துப்போட்டது தமிழ்ப்பிள்ளைகளை.!
ஆறாத காயத்துக்கு மருந்தின்னும் போடவில்லை.
அதுக்குள்ளே வந்து நிற்குது அடுத்த மே மாசம்….
ஆம் , கடந்து போன மே – 18 , அழிந்துதான் போயினம்…
அக்குவேறு ஆணிவேறா பிரிந்துதான் போயினம்……..
வீரப்பிள்ளைகளை பரிகொடுத்துத் தவிக்கினம். ஆனாலும்
வீரமொன்னும் போகவில்லே…….வீரியமும் குறையவில்லே.
தமிழீழ மண்ணைத்தான் கொஞ்சம் பையிலே முடிஞ்சிகிட்டு
தக்க சமயத்துக்கு காத்திருக்கோம் கண்ணுறங்கும் வீரர்களே….
தமிழால ஒண்ணு சேர்ந்தோம்..தமிழுக்கே செத்துப்போனோம்…..ஆமாம்
தக்க சமய்த்துக்கும் காத்திருக்கோம் கண்மணிகளாள்…….
கொஞ்சம் பொறுத்துக்குங்கோ….கூடவந்து சேந்துடுவோம்….
சுதந்திரக் காற்றக்கொஞ்சம் கொண்டு வந்து சேத்துடுவோம்….!
அதுக்கான சபதமொன்னை இப்போதான் எடுத்திடுவோம்….!
ஆம். மே – 18 அழிஞ்சுதான் போயினோம்…ஆனால்
உயிர்த்தெழுவோம்…அடங்காத காளைகளாய்………!

No comments: