Sunday, April 18, 2010

நேர்மையும் , வாய்மையும் அற்ற நிலைகெட்ட மனிதர்கள்.!

பிரபாகரனின் தாயார் அவர்களை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த விடயத்தில் இந்தியாவின் நாணயம் இன்னுமொருமுறை பல்லிளித்தை அனைவரும் அறிவோம். !

அஃதோடு சேர்ந்து இன்னமும் வெகுபலரின் நாணயமும் , நேர்மையும் , வாய்மையும் பல்லிளித்ததை அறிவீரோ? 

தெரிந்த செய்திதான்...அணுகிய கோணம் மட்டுமே வேறு. 

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி , மக்கள் தொலைக்காட்சியின் மூலம் தமிழ்வளர்க்கும் தமிழர் திரு.இராமதாஸ் "தமிழக அரசு " இதைச் செய்திருக்காது என்று கட்டியம் கூறிவிட்டார். உலக தமிழர்களே, இதுதான் உண்மை என்று ஒத்துக்கொள்வார்கள் இனி...

அடுத்த அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டாகிவிட்டது. நல்லது , 

இவரது அரசியல் அணுகுமுறைதான் பல்லிளித்து விட்டதெனில் , ஈழத்தாய் புர்ட்ச்சி தலைவி தமது கருத்தைக் கூட கூறுவதற்கு நேரமின்றி கொடநாட்டு அலுவல்கள் கொத்துக்கொத்தாய்க் காத்திருக்கின்றன....விட்டுவிடுவோம் பாவம் - அவரிடம் அதை எதிர்ப்பார்ப்பதும் நமது தவறே. 

மேட்டுமை தாங்கிய கேப்டன் தனது தொலைக்காட்சியின் முழக்கமாக "தமிழ்....தமிழ்" என்று முழங்கிவிட்டு "கேப்டன் டீவி" என்று அழகுத்தமிழில் பெயர் வைத்துக்கொண்டதைப் பற்றி நமக்கொன்றும் கவலையில்லை. ஆனால் வயதான ஒரு மூதாட்டியை / தமிழச்சியைத் திருப்பியனுப்பியது பற்றி கருத்துக்கூறாமல் விடுவதைப் பற்றி கவலைப்படுவதும் , அது குறித்த அரசியல் பார்வையைப் பற்றி கேள்வி எழுப்புவதும் தவறா என்ன? 

 திருமா அவர்களை விட்டுவிடுவோம். அவர் ஏதோ தர்மசங்கடத்தில் இருக்கிறார். பிழைப்புக்கு கூவியாக வேண்டும்....அப்புறம் மறந்து விடுவார். 

இதுகாறும் இதுபற்றி வாய்திறக்காததன் மூலம் , தமிழக அரசுதான் இக்காரியத்திற்கு மூல கர்த்தா என்று சொல்லாமல் சொல்லியாகிவிட்டது..

அடுத்து மிக முக்கிய தலைப்பிற்கு வருவோம்.

புலிகளின் தலைவரின் தாயார் இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வருவதை சிதம்ப்ர ரகசியமாக வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை வைகோவிற்கோ அல்லது நெடுமாறனுக்கோ எங்கிருந்து வந்தது என்பது கூர்ந்து நோக்கவேண்டிய கேள்வி..
அதற்கான பதிலாக அவர்களால் சொல்லப்படுவது " தாயாரின் பாதுகாப்பு...." 

இது சற்றும் சரியானதாகப் படவில்லை. வெகுபலருக்குச் சொல்வதன் மூலம் , அத்தாயாருக்கான ஆதரவு அதிகப்பட்டிருக்குமே ஒழிய , பாதுகாப்பு வலுப்பட்டிருக்குமே ஒழிய எவ்விதத்திலும் அதற்கு குறையிருக்காது.

ஏற்கெனவே , முத்துக்குமாரின் மரணத்தை , அதன் பின்னரான எழுச்சியை வீண்டித்த வைகோவும் , நெடுமாறனும் , திருமாவும் இப்பிரச்சினைக்கும் தக்கதொரு காரணத்தைக் கூறி அல்லது தெருமுக்கில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி தத்தமது கடமைகளை முடித்துக்கொள்வர்.

அத்தோடு நாமும் மறந்துவிடுவோம்.


சரி , தமிழகத்தை விடுங்கள்...

புலம்பெயர் தமிழீழ மக்களிடையே ஏதேனும் வலுவான எதிர்ப்புக்குரல் எழும்பியதா?

வட்டுக்கோட்டைத் தீர்மானம் , உலகத்தமிழர் பேரவை எனப்படும் குளோபல் தமிழ் போரம் , நாடுகடந்த தமிழீழ அரசு இப்படி ஏதேனும் ஒரு சில அமைப்புகளாவது இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தார்களா எனில் அதுவும் இல்லை.....ஏன் என்று ஆராயப்போனால் , எமது அறிவுக்குதந்த காரணமொன்றும் தென்படவில்லை.

ஏதோ சில பத்தி எழுத்தாளர்கள் தமிழ் ஊடகங்களில் எழுதுவதோடு அவர்களின் எதிர்ப்புக்குரலும் அடங்கிவிடுகிறது....

சரி , தாயக ஈழத்தமிழர்கள்?? முகாமிற்குள் முடங்கிக்கிடக்கும் தமிழர்களை விட்டுவிட்டாலும் கூட நமது பார்வை "தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை" நோக்கி நீள்வதில் தவறிருக்கவியலாது... குறைந்த பட்சம் இந்தியா தம் முடிவை மீள் பரிசீலனை செய்யவேண்டும்" என்ற அளவிற்காவது வலியுறுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை...!

எல்லோருக்கும் பயம் , இந்தியாவைக் கண்டு பயம்.....இந்தியாவை எதிர்க்கக் கூடாது , அதனால் தமது சொந்த நலனுக்கோ இல்லை புகலிட நலனுக்கோ பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பயம்...! 

ஆனால் எல்லோருக்கும் தமிழீழம் மேல் ஆசை , அதில் வாழ ஆசை...அதைப் பெற்றுக்கொள்ள ஆசை.....ஆனால் நமக்கு யாரேனும் வந்து பெற்றுத்தர வேண்டும்..........

இப்படிப்பட்ட ஒரு சுயநலச் சமூகத்திலிருந்துதான் அர்ப்பணிப்புள்ள 50 ஆயிரம் வீரர்களை உருவாக்கினார் தேசியத் தலைவர் பிரபாகரன்...........அதற்காக அவர் பட்ட கஷ்டமும் , தியாகமும் , உழைப்பும் இப்படி அணியணியாகப் பிறந்து கிடக்கும் தமிழர்களால் வீணடிக்கப்படுகின்றது..

நேர்மையும் , வாய்மையும் , உண்மையும் அற்ற சுயநல மனிதர்களால் இங்கே போராளிகளின் தியாகம் கானல் நீராகிப்போனது.

அத்தியாகம் மதிக்கப்பட வேண்டுமானால் , இளைஞர்களே , மாணவர்களே , நம்மால் மட்டுமே முடியும்...அரசியல் தலைமைகளைப் புறந்தள்ளி விட்டு நாமே முன் நிற்க வேண்டும்.....நாமே இனி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.......... அதுவே ஒரே வழி.

No comments: