இந்திய , தமிழக அரசாங்கத்தின் "துக்ளக்" கோட்பாட்டு அரசியலானது சீமானின் இருப்பையும் , தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு..
Necessity is the mother of innovation.
தமிழில் சொல்வதாயிருந்தால் ,தேவைகளே கண்டுபிடிப்புக்களுக்கு காரணமாகின்றன.
காங்கிரஸ் பேரியக்கத்தின் " தமிழ் - தமிழர் " விரோத செயல்பாடு தான் திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தை உருவாக்கியது...கடந்த ஒரீரு வருடங்களுக்கு முன்பு வரை நாமும் கூட அதே திமுக என்னும் கட்சிக்குக் கொடி பிடித்து நடை நடந்தவர்கள் தான்.
அன்று எங்கள் நெஞ்சில் அண்ணா மூட்டிய தீயை அணைத்து , எங்களையெல்லாம் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கத் தூண்டும் தமிழர் விரோத சக்தியாக இன்று அதே கருணாநிதி அவர்களின் , தமிழ்நாட்டு அரசின் "துக்ளக்" தனமான செயல்பாடுகள் எள்ளி நகையாடும் வண்ணம் இருக்கின்றன.
ஜாமீனில் விட இயலாத அளவுக்கு "சீமான்" என்ன குற்றஞ் செய்தார்?
உணர்ச்சி கெட்ட ஜென்மங்களாய் , சேற்றினில் விழுந்த எருமை மாடுகளைப் போல் - எங்கு எது நடப்பினும் கவலையற்றுக் கிடக்கும் "தமிழா...கொஞ்சம் எழடா" என்று உரத்துக் கூவினார்....
அது குற்றமா?
அப்படியெனில் "தேசிய" மொழியாம் இந்தி மொழியை ( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுவே அரியணையில் நிற்கும் மொழி...) திமுக எதிர்த்த போது இந்திய இறையாண்மை எங்கே போனது?
அந்த இறையாண்மைக்கு பங்கம் வகிக்கும் செயலுக்கு மூல காரணமே இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் "திமுக" தானே?
அந்தச் செயலுக்கு தண்டனை கொடுப்பது யார். ?
தண்ணிரில் பந்தைப் போட்டால் மிதக்கும். அதே பந்தை நீருக்குள் அமுக்கி அமுக்கி விட அது மேலும் எகிறும்...எகிறிக்குதிக்கும்...அதன் ஆட்டத்தை சுலபமாக அடக்கி விட முடியாது.
இது இயற்கையின் விதி....
அது போலத்தான் "சீமானும்", அவர் பின்னால் அணி வகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியும்... பந்து அமைதியாகவே மிதக்கிறது. மிதந்தது....ஆனால் "துக்ளக்" தனமான திமுக அரசின் செயல்பாடுகள் அந்த இளைஞர்களை அமைதி குன்றச் செய்கின்றன. அதன்மூலம் அவர்களை மேலும் எழுச்சியுறச் செய்கின்றன.
இவையெல்லாம் திமு கழகத்திற்குத் தெரியாதவை அல்ல.........60 களில் உணர்ச்சிப் பெருக்காய் கொந்தளித்த தமிழ் இளைஞர்களால் "காங்கிரஸ்" காணாமல் போனது. அப்போதைய எழுச்சி , அதற்கு முன்னர் "விடுதலை உணர்வாளர்கள் அல்லது இந்தியர் என்ற பேச்சில் கட்டுண்ட இளைஞர்களால் நிறைவேறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைவிட அன்று இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்தச் சூழலிலேயே இளைஞர்களின் எழுச்சியை ஏற்படுத்திட "அண்ணா" வால் முடிந்தது.
அதற்காக அவர் வெறும் ஒற்றைச் சொல்லையே ஆயுதமாக்கினார் ...
அது "தமிழ்" என்ற சொல்....
அதே "தமிழ்" என்ற ஆயுதம் தான் இந்த "துக்ளக்" ஆட்சியாளர்களை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்றது. அன்றைக்கு அண்ணாவிற்கும் , கருணாநிதிக்கும் இருந்த காரணங்களை விட பலமடங்கு போராட வேண்டிய தேவை தமிழ் இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கிறது...
அந்தத் தேவையே "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் , சீமானின் எழுச்சிக்கும் அடிப்படை.
உணமையாகவே தமிழர் மீது இந்த துக்ளக் அரசுக்கு அக்கறை இருக்குமானால் எம்மைத் தமிழராக மதியுங்கள்.....தமிழராக மதித்து போராட விளைகின்ற காரணங்களுக்கு தீர்வு காண முயற்சியுங்கள்...!!
அதை விடுத்து "உமது" அரசியல் இருப்புக்கு பங்கம் வருகிறதென தவறாக நினைத்து "நாம் தமிழர்" மீது அடக்குமுறையினை ஏவாதீர்கள்.....
ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை சீமானைக் கைது செய்யும் போதும் ஒரு சில ஆயிரம் இளைஞர்கள் " நாம் தமிழராய் " இணைத்துக் கொள்கிறார்கள்...எம்மைப் போல.
கைதுகளின் மூலம் , அந்த இளைஞர்களை பயப்படுத்த முனைவதாய் எண்ணிக்கொண்டு ஆத்திரமூட்டச் செய்யாதீர்கள்...அந்த ஆத்திரம் உம்மை அழித்துவிடும்..
உதாரணம் கேட்கிறீர்களா???
கண் முன்னே இருக்கிறது......
தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்ததும் , திமுக வென்றதுமான வரலாறே உதாரணம்...
நிறைகுடமாக நீங்கள் இருப்பீர்கள் எனில் குடத்தை நிரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. ஆனால் குறைகுடமாக குற்றத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு யாரும் நீர் நிரப்பக் கூடாது என்று சொல்வீர்களானால் , இப்போது போலவே "தமிழ்" உணர்வாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவீர்களானால்................ குறித்துக்கொள்ளுங்கள்...
உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது..திமுக , அதிமுக , தேமுதிக என்று நீளும் தமிழ் விரோத , தமிழர் விரோத சக்திகளே உங்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது.
காரணம் , நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்....காலடி பட்டதும் தூள் தூளாய்ச் சிதறி காணாமல் போவதற்கு...
நாம் மனிதர்கள் ....
ரத்தமும் , சதையுமாக உணர்வால் உந்தப் பட்டு கொதிக்கும் "நாம் தமிழர்கள்"..