Monday, September 21, 2009

ஆய்வு : உலகத் தமிழ்மாநாட்டை புறக்கணிப்போம் என்ற அறைகூவல் முறையா ?

நாம் முதன்முதலாக வெளியிட்டதொரு தலையங்கத்தில் ( உலகத்தமிழ் மாநாடு.) தோழர் டேவிட் என்பவர் இம்மாநாட்டை வாராது வந்த மாமணியாய் எண்ணி தமிழுணர்வு கொண்டவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

நாம் தமிழர் இயக்கத்தலைவர் தோழர். சீமானும் கூடவே இது உலகத்தமிழர்களை ஏமாற்ற நடக்கும் சதித்திட்டம் என்றே சொல்லியிருந்தார்.. மிகச்சமீபமாக , ஈழத்தமிழர்களிடையே மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாரிஸில் இருந்து வெளிவரும் ஈழ நாடு பத்திரிக்கை "உலகத் தமிழ் மாநாட்டை" புறக்கணிக்க அறைகூவல் விட்டிருந்தது. அதையொட்டிய விவாதங்கள் அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் குடிகொண்டிருப்பதாகவே அறிகிறோம்.

கடந்த தலையங்கத்தில் கூட , கலைஞர் அவர்கள் தமது இழந்து போன தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் முயற்சியாகவே இந்த உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கிறார் என்று உலகத் தமிழர்கள் சந்தேகம் கொள்வதாகவே நாம் சொல்லி வந்தோம்.. அந்த சந்தேகத்தின் பாலாக எழுந்த புறக்கணிப்பு அறைகூவல்கள் தான் இவை.

கலைஞர் தாம் இழந்துவிட்ட தமிழர்களின் நம்பிக்கையை மீளப்பெற்றாக வேண்டும் , அதன்பின்னர்தான் அனைவராலும் நடாத்தப்படுகின்ற வெற்றி மாநாடாக அமையும் என்பதே எம் உறுதிப்பாடு.

சரி , நம்பிக்கையை மீளப்பெற என்னதான் கலைஞர் செய்தாக வேண்டும்?

கொஞ்சம் எளிதான கேள்விதான். கலைஞர் செய்யவேண்டியது என்பதற்கான பதில் அவர் செய்யத் தவறியது என்ன என்ற ஆய்விலேயே இருக்கிறது.

அவர் என்ன செய்யத் தவறினார். ?

- முள்ளிவாய்க்காலில் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிந்த போது இவர் அண்ணா சமாதியில்  உண்ணாவிரதம் இருந்தார். இவரது உண்ணாவிரதத்தின் பின்னர் போர் நின்றுவிட்டதாக  தமிழக மக்களிடையே சொன்னார். அதன்பின்னர் போர் நிற்காமல் பிரபாகரனும் மற்ற தமிழ் மக்களும் மடிந்து போயினர். அதற்காக ,பொய்ப்பரப்புரைக்காக  அவர் தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது.

- வணங்கா மண் கப்பலில் இருந்து சென்ற பொருட்கள் இதுகாறும் இடம்பெயர் மக்களை சென்று சேரவில்லை என்ற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் , கடந்த இருவாரங்களுக்குமுன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போய்ச்சேர்ந்துவிட்டது என்று சொன்னார். அதை எப்படி ஏற்றுக்கொள்வது ?

- வதைமுகாம்களில் வாடுகின்ற மக்கள் மூன்று லட்சம் பேர் இருக்கிற சூழலில் இலங்கையில் சுமூக சூழல் நிலவுவதாக தொடர்ந்து  பரப்புரை செய்வது.

சரி , அவர் என்ன செய்யலாம்...?

- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் . நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் கோட்பாட்டிற்கு இணங்க , பழசை மறந்துவிட்டு இனியாவது வதைமுகாம்களில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை விடுவிக்கிற முயற்சியில் இறங்க வேண்டும்...டெல்லியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகபட்ச நெருக்கடியை தந்து சிறிலங்கா அரசை நெருக்கடிக்குள்ளாக்குவது.

- தமது  கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நடக்கும் ஈழநிலவரம் பற்றிய இருட்டடிப்பை நீக்குவது.

- வதைமுகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் , தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அறப்போராட்டங்களுக்கு பின்னணியாக , பின்புலமாக இருக்க முயல்வது.

- தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குகின்ற இலங்கைக்கடற்படையினரின் அட்டூழியத்தை நிறுத்த உறுதியான நடவடிக்கை , கடிதம் - தந்தி - தொலைநகல் இவைகளைத் தாண்டிய நடவடிக்கை எடுக்க முயல்வது.


இன்று கலைஞரைப் புறக்கணிக்கச் சொல்லும் ஈழநாடு பத்திரிக்கையாகட்டும் , தோழர் சீமான் , நெடுமாறன் ஆகட்டும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கலகக்குரல்களை விட இராஜதந்திரக்குரல்களே இன்றைய நிலைமையை மாற்றும் சக்தி வாய்ந்தது என்று புரிந்து கொள்ளுதல் இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவையாகிறது.

இராஜதந்திர நெருக்குதலை தமிழர்கள் இலங்கைக்குத் தரப்போவதாய்ச் சொல்லிக்கொண்டு நமக்குள்ள மிகப்பெரிய ஆதார சக்தியையும் எதிரி என்ற வகையில் மாற்றிக்கொள்வது எவ்வகையிலும் சரியாகாது.

கடந்த பொதுத்தேர்தலிலும் கூட , ஜெயலலிதாவை முழு மூச்சாக ஆதரித்து கலைஞரை எதிரியாக்கிக்கொண்டீர்கள். தனி ஈழம் , தனி ஈழம் என்று மேடைக்கு மேடை முழங்கினார் ஜெயலலிதா. அந்தக்குரல் கூட ஏதோ ஒருவகையில் புலிகளின் அழிவிற்கும் , பாரிய மக்கள் அழிவிற்கும் ஒரு காரணம் ஆகியிருக்கிறது என்ற உண்மை யாராலும் மறுக்கவியலாதது. இன்று அவர் அதீத அமைதிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.  ஆனால் , எந்தவிதக்குற்றச்சாட்டுகளும் அவரை நோக்கி எழவில்லை.

ஆக, எதிர்ப்புக்குரல் என்பது நம்பிக்கைத்துரோகத்தின் இருபக்கங்களிலும் போய்ச்சேருவதே ஆரோக்கியமான இராஜதந்திரமாக இருக்க முடியும். அடிக்கடி மாறும் நிலைப்பாட்டினால் தமிழர்களின் , ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்றுமே வலுவான முன்னேற்றத்தினைத் தரப் போவதில்லை.

உலகத் தமிழ் மாநாட்டினை புறக்கணிப்பது சரியா என்ற கேள்விக்கான பதிலை ஆராய முற்பட்டோம்.

- உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது. மிக அத்தியாவசியமான ஒரு மாநாடு இது என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

- கணினிப் புரட்சிக்குப்பின்னரான மாநாடு என்பதால் , தமிழை இன்னொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.


ஆனால் , நடத்துகின்ற காலச்சூழலும் , தமிழினம் ஒரு பாரிய அழிவைச் சந்திக்கிற வேளையில் அதற்கென காத்திர நடவடிக்கைகள் ஏதும் எடுக்காதவர்களின் (வெற்றுப் பேச்சளவில் தமிழ் என்று சொல்லிப் பிழைக்கப் பாக்கிறவர்களின்) முயற்சிக்கு துணை போவது தவறு என்ற அளவிலும் , உங்கள் செயல்பாட்டில் எமக்குத் திருப்தி இல்லை என்ற உலகத்தமிழர்களின் எண்ணத்தை ஏற்பாட்டாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முன்னெடுக்கப்படும் புறக்கணிப்பிற்கான அறைகூவல் எவ்வகையிலும் தவறானதல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது.

ழகரம் - ஆய்வு ( 22 செப்டம்பர் 2009 ) .

10 comments:

Anonymous said...

இன்று கலைஞரைப் புறக்கணிக்கச் சொல்லும் ஈழநாடு பத்திரிக்கையாகட்டும் , தோழர் சீமான் , நெடுமாறன் ஆகட்டும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கலகக்குரல்களை விட இராஜதந்திரக்குரல்களே இன்றைய நிலைமையை மாற்றும் சக்தி வாய்ந்தது என்று புரிந்து கொள்ளுதல் இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவையாகிறது.

:)

வான்முகிலன் said...

அய்யா மகான்களே, நீங்கள் இன்னுமா அதனை உலகத் தமி்ழ் மாநாடு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் அறியாமையை நினைத்து வெட்கப்பட வேண்டியதுதான். அது அவருடைய குடும்பங்கள் சங்கமிக்கும் குளிர்கால விழா!!!

தேசியன் said...

'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது நானாக , எனது குடும்பமாக இருக்கவேண்டும்'

என்ற அர்த்தத்தில் தமிழக முதல்வர் அடிக்கடி சொல்லும் வார்த்தையை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ் தாழ்ந்த அளவிற்கு கலைஞர் உயர்ந்துவிட்டார்.

'தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்' என்று கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விற்கப்படுகின்றது.

தமிழர்கள் ஏமாளிகளாக ஆக்கப்படுகின்றார்கள். சிங்களக் கொடும்பாவிகள் தமிழீழ மக்கள் மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில் 'மானாட மயிலாட' வழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றியவரல்லாவா எங்கள் கலைஞர்.

ஈழத் தமிழர்களின் வேதனைகளால் தமிழக மக்கள் துன்பப்பட்டு விடக்கூடாது என்ற அவாவினால்,

இன்றுவரை சண் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அத்தனை செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து தமிழ்ப் பணியாற்றியதை தமிழகத் தமிழர்கள் உணர்ந்திருப்பார்களோ தெரியாது,

ஆனால், ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள்.

தேசியன் said...

தமிழனுக்கு குரல் கொடுக்காதவன், உலகத்தமிழர்களுக்கு மாநாடு நடத்துகிறானாம்

ராசபக்சேக்கு போட்டியாக தமிழர்களை பற்றி எந்த நினைப்பும் இல்லாத ஒருவர், உலகத்தமிழர்களை காப்பாற்ற ஒரு மாநாட்டை எழுப்புகிறாராம். என்ன கொடுமை இது.

சீமானின் இது குறித்து தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எழுச்சிப் போராட்டங்களை திசைதிருப்பும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ஈடுபடுவதாக இயக்குனர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வதைமுகாம்களில் வாடும் மூன்று இலட்சம் வன்னி மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது, கோவையில் உலகத் தமிழ் மாநாட்டைக் கூட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தின் தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேசியன் said...

தமிழ் நாடு இந்தியாவின் ஒரு அங்கம் என்ற உரிமையையே இழந்து நிற்கிறது,அந்தோ முல்லைப்பெரியார் பகுதியில் கேரளம் புதிய ஆணை கட்ட முஸ்தீப்புடன் நிற்கிறது மத்திய அரசும் கய்கொரத்து விட்டது,தமிழன் மானம் இழந்து நிக்கிறான், இந்தப்பாவி நீரோ மன்னன் மாதிரி பிடில் வாசிப்பனாம்.வாயைப்பிளந்து நாம் அதை கேட்க வேண்டுமாம்.

ஏற்கனவே தமிழன் என்று சொல்லி 50௦ வருடமாக தமிழர்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து, பணம், டிவி அதனையும் குடும்பதிர்ர்க்கு மட்டும் சம்பாதித்துவிட்டு, இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று விட்டு, உன் கேவலத்தை மற்றைக்க தமிழர் மாநாடு வேறு உனக்கு கேடா?

உண்மையான தமிழன் எவனும் வரமாட்டம்.......அது உன் புகழ் பாடும் வெறும் கட்சி மாநாடு தாண்

Sadagopal Muralidharan said...

நாம் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும். இன்றைய நிலைமையில் கலைஞரைப்புறக்கணிப்பதில் எந்தத்தவறும் இருக்கமுடியாது. வேறு கருத்துக்கும் இட்மில்லை. ஆனல் அந்தப்பகட்டறிவுவாதியை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு தமிழை எதிர்ப்பது தவறு. தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு நாம் நமது உரிமைக்காக குரல் கொடுப்போமே? மேலும் நமக்கு இது ஒரு அரிய வாய்ப்பு இந்த வாய்ப்பேச்சு வீரர்களின் தோலை உரித்துக்காட்ட.

Anonymous said...

ஏமாற்ற கிளம்பியவர்களில் புது வரவு இந்த சீமான்....
ஈழ மக்களின் இரத்thaத்தை இன்னும் எத்துனை பேர் குடிக்க போகிரார்கலோ ...

Anonymous said...

கருணாநிதி ராஜதந்திரியா ? ஏன் உடலின் பின்புறம் சிரிக்கிறது.

Anonymous said...

தமிழகத்தில் இன்று ஈழத்தமிழருக்காய் ஒலிக்கும் ஒரு குரல் சீமானின் குரல் மட்டுமே. அவலப்பட்டு நிற்கும் தமிழனுக்கு இன்று தேவையானது மநாடுகள் அல்ல அவனது வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு வழியே.சிங்களனின் கொலைக்கூடத்தில் அடைபட்டிருக்கும் தமிழனுக்கு விடுதலையே. அதை விடுத்து இந்த கேலிக்கூத்துகள் ஏன்? நடக்கவிருக்கும் இந்த உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பிக்க கொலைஞன், சிங்கள இனவெறி கொலைஞன் ராஜபக்ஷையைக்கூட அழைக்கலாம். இவர்களுக்கு வேண்டியது நாட்காலி பதவி. தமிழ் அல்ல.

ஜனா

Anonymous said...

அய்யா மகான்களே, நீங்கள் இன்னுமா அதனை உலகத் தமி்ழ் மாநாடு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? உங்கள் அறியாமையை நினைத்து வெட்கப்பட வேண்டியதுதான். அது அவருடைய குடும்பங்கள் சங்கமிக்கும் குளிர்கால விழா!!!