Monday, September 28, 2009

ஸ்ரீ அனுமன் சாலிஸா - தமிழில்.!

ஸ்ரீ துளசிதாசர் இயற்றிய ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ் , ஆஞ்சநேய வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று நடந்த சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரம் அனுமன் வழிபாடு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள்.....ஆகவே உங்களின் பார்வைக்கு.......இதன் மூல வடிவத்தை தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினை அழுத்தவும்.


ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ்





குருவின் தாமரைப்பாதம் பணிவேன்..
உருவிலா மனதின் மாசு நீக்குவேன்.

ராமனின் அருளின் திறனை வியப்பேன்.
வீடுபேறினை அடைந்திடல் செய்வேன்.!

எத்துணை சின்னஞ்சிறியவன் நானே…
அத்துணை சான்றோர் ஆன்றோர் நடுவே.

அத்துணை திறனையும் எனக்களித்தருள்வாய்.
அகிலத்தின் துன்பம் அனைத்தும் நீக்குவாய்..

மூவுலகையும் நீ வென்றது சரித்திரம்……
உனை வணங்கிட நெருங்குமோ தரித்திரம்?

வாயு புதல்வனே…அஞ்சனை மைந்தனே..
உனை வென்றிட உலகினில் யாருளர்.

ரகுவரன் தூதனே , இராம பக்தனே
வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றாய்..!

தைரிய புருஷனே , அறிவின் அடக்கமே…
உன்னை நம்பியே பணிந்திங்கு வேண்டினோம்!

தீயவை எரிந்திட தீயிட்டுக்கொளுத்திடு..
நல்லவை செய்திட நாளும் துணைசெய்..

அல்லாதவைகளை அகற்றிட உதவு..
எல்லா மனிதரும் உயர்ந்திட உதவு.!

தங்கம் வார்த்த தகதக தோளினன்.
அங்கம் போர்த்திய அழகுநல் உடையினன்.

காதினில் தொங்கிடும் அழகுக்குண்டலம்.
காரிருள் ஒத்த உன் மேகக் கேசம்.

உன் வெற்றீயைச் சொல்வது கதாயுதம்தானே.
உன் வெற்றியால் பறப்பது கொடியது தானே.

உன் மார்பினில் நெளியும் முப்புரி நூலோ….
உன் புகழினைப் பாடி பூரிப்படையும்….

அழகுச்சிவனாரின் அம்சம் நீயே…
அறிவுக்கேசரியின் பெருமை  நீயே….

அண்டமெங்கிலும் உன் ஆட்சியைச்செலுத்தினாய்.
அதனால் உலகைச் சாந்தப்படுத்தினாய்…!

அறிவுக்கடலே , கல்வியின் பிறப்பே…
அடங்காப் புகழுடன் நீ இங்கு வாழ்ந்தாய்.

இராமன் உனைத் தன் சேவகன் ஆக்கினார்.
அவர் இட்ட கட்டளையை இசைவுடன் செய்தாய்.!

ராம , லஷ்மணர் சீதையைப் பணிந்தாய்.
அவர்களை உந்தன் நெஞ்சினில் கொண்டாய்.

ராமர் தம் புகழை பாடுதல்  கடனே…..
உன்னைப் பாடுதல் என் தவப் பயனே….

அளவற்ற சக்தியால் சிற்றுருவம் கொண்டாய்.
ஆக்ரோஷ சக்தியால் இலங்கை எரித்தாய்.

அடக்கம் மேலிட சீதையைக் கண்டாய்…
அன்புடன் இராமனின் சேதியை உரைத்தாய்…


உன் ஒப்பிலா வீரத்தால் அசுரரை அழித்தாய்
இராமனின் கட்டளை நிறைவேற்றி முடித்தாய்..

சஞ்சீவி பெயர்த்து சரித்திரம் ஆனாய்.
இலஷ்மணின் உயிரை மீட்கவே செய்தாய்.

இராமனின் தம்பியை மீட்டுக் கொடுத்ததால்
பரதனை யொத்தவன் நீயெனச் சொல்லி மகிழ்ந்தார்…

அனுமனைத் தொழுதல் இராமனைத் தொழுதலே..
அனுமனின் ஆசிதான் இராமனின் அருளே…!

சிவனும் , பிரம்மனும் , நாரதமுனியும்..
உன் புகழ் அளக்கவே அனுதினம் முயன்றார்..

யமன் , குபேரன் சரஸ்வதி தேவியும்
உன்புகழ் காணாது இயலாது நின்றார்…..

சுக்ரீவன் , இராமன் இருவரை இணைத்தாய்…
சுகப்பட்ட இராஜ்யம் உன் அரசனுக்களித்தாய்..

வீர விபிஷணன் உன் சொல் கேட்டான்…
அதனால் அவனோ இலங்கையை மீட்டான்.

இராமனின் மோதிரம் சுமந்தவன் நீயே…
சூரியன் சாட்சியாய் கடல் கடந்தவன் நீயே…

அரிய வித்தைகளின் இருப்பிடம் நீயே…
அதனால் வியந்தவர் பலகோடிப் பேரே…


உன் அருள் இருப்பின் துயரம் போகும்.
என் கடின இலக்கது பனியாய் விலகும்.

இராம இராஜ்யத்தைக் காத்தவன் நீயே…
எனையும் காப்பாய் காற்றின் சேயே..

என்னைக் காப்பதால் கவலை தீரும்…
எனக்கருள்வதால் மகிழ்ச்சியும் சேரும்…

உனை நான் வணங்கிட அச்சம் அகலும்..
உனை நான் தொழுதிட இன்பம் பெருகும்..


மூவுலகுமே உன் ஒரு சொல் கேட்கும்…..
நவ கோள்களும் உன் அசைவுக்குப் பணியும்…

பூதம் , பிசாசு , பலவகை முனிகளூம்
உன் நாமம் சொல்லிட தூரவே விலகும்…

வலிகள் , நோய்கள் , பலவகை பிணிகள்
வாயு புதல்வனின் பேருக்கு அஞ்சும்…!

வாயு புத்திரா , அஞ்சனை மைந்தா……
உன் பெயரது சொல்லிட பிணியது தீரும்…

மனதில் , கருத்தில்  அனுமனை வைத்தோர்…
மகிழ்வுடன் அவனது பாதம் பணிந்தோர்….
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பார்…
வாழ்வின் துயரங்கள் வாராது களிப்பார்..!

இராஜன் இராமனின் பாதம் வணங்கிட…
உண்மை உணர்வுடன் தொழுது பணிந்திட…
உலகக்காரியங்கள் வெல்வது சத்தியம்…
ஊமைத் துயரங்கள் கடப்பது நிச்சயம்….

நால்வகை காலமுன் பெயரது சொல்லும்…
அண்டமனைத்தும் உன் புகழது உரைக்கும்…

இராமனின் விருப்ப தேவதை ஆனாய்….
இராஜ்யம் , முனிகள்  , மக்களைக் காத்தாய்…

சீதாப்பிராட்டியின் மகனென ஆனாய்….
அட்டமா சித்திகளை அதனால் பெற்றாய்…

நவ நிதிகளை ஒருங்கே பெற்றாய்…
நல்லவர் வாழ தீயவை ஒழித்தாய்…..

இராமனை வணங்கி பக்தனாய் ஆனாய்….
இராமநாதத்தை பணிவுடன் சொல்வாய்…

இனிவரும் பிறப்பிலும் இசைவுடன் செய்வாய்…
உன்னை தொழுதால் இராமன் மகிழ்வார்…

மரணச் சமயத்தில் இராமனை வணங்குவோர்…
வரும்பல பிறப்பிலும் பக்தனாய் பிறப்பார்..

முக்தியின் திறவுகோல் ஆஞ்சநேயன் அவனே…
அவனை வணங்குதல் மோக்சத்தின் கடனே…

அனுமனின் பக்தனாய் ஆனவன் எவனோ
அடுத்த  பிறப்பிலும் துயரது விலக்குவான்…

வெல்க வெல்க அனுமனே வெல்க…
வெல்க வெல்க ஆஞ்சநேயனே வெல்க…

உணர்ச்சியின் கடவுளே உண்மை வெல்க..
உன்னை வணங்கினேன் உன் அருளது வெல்ல..

உன்னை வணங்கிட அணுகுமோ திது?
என் குரு நீயே இனி கவலை ஏது….?

அனுதினம் அனுமனை வணங்கிக் களித்தோர்..
அனுமன் சாலிஸா இதை பக்தியாய் படித்தோர்….
அனுமனின் ஆசியை அன்புடன் பெறுவார்….
சிவனார் அருள்வார்…..சித்திகள் புரிவார்…!

காற்றின் கடவுளே , அஞ்சனை சேயே…
தெய்வீகப் பிறப்பாய் தீயவை அழித்தாய்….

துளசிதாசர் போல் உன் சேவகன் ஆனேன்.
துன்பம் விலக உன் அடியேன் ஆனேன்….

இறைக்கு இறையே , இன்முகக் கடவுளே..
இராமனும் , நீயும் எம் நெஞ்சில் உறைவீர்.

போற்றி போற்றி ஆஞ்சநேயா போற்றி.
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி வாயுபுத்ரா போற்றி..
போற்றி போற்றி அறிவே போற்றி.
போற்றி போற்றி அருளே போற்றி.



இந்த மொழிபெயர்ப்பை முடிந்தளவு சரியாகவே செய்திருப்பதாக நம்புகிறேன். எங்கேனும் தவறு இருப்பின்  தாயுள்ளத்தோடு சுட்டிக்காட்டவும். 



மொழி பெயர்த்தவர் - பாலசுப்பிரமணியன்

இதற்கான உழைப்பும் , செலவிட்ட நேரத்தையும் நீங்கள் மதீப்பீர்களானால் , இதை பிரதியெடுத்து வேறு தளத்தில் பதியும் போது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் , யாரால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறோம்.

'ழ'கரம்

No comments: