Monday, September 28, 2009

தமிழ்த்தேசியமும் , இந்திய - இலங்கைக் கூட்டுச்சதியும் !


நேற்று மெனிக் பார்ம் முகாமில் நிகழ்ந்த ஒரு சம்பவம் , வேதனையை மேலும் கிளப்புகிறது. அருகிலிருக்கும் முகாமொன்றில் சுள்ளி பொருக்கப் போன ஏழைத் தமிழர்களை சுட்டிருக்கிறது. காயம் பட்டவர்களின் எண்ணிக்கையோ , இறந்தவர்களின் எண்ணிக்கையோ சரியாகத் தெரியாத அளவிற்கு அங்கே ஊடகங்களின் பிரசன்னம் இல்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் உதய நாணயக்காரா கூட்டத்தினர் கையெறி குண்டுகளை வீசியதாகச் சொல்லியிருக்கிறார். இதை இந்தச் செய்தியை நாம் உன்னித்துப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

கடந்த வாரம் யாழ்ப்பாண முகாமொன்றிற்கருகில் மூன்று இளைஞர்கள் இலங்கை இராணுவம் அமைத்திருந்த கண்ணீ வெடியில் சிக்கினார்கள். யுத்தம் நிறைவுற்ற சூழலில் உலக நாடுகள் பலவும் மீள் குடியேற்றத்தை வலியுறுத்துகின்ற சூழலில் தான் கையிலெடுத்திருக்கிற கண்ணி வெடி அகற்றுதல் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்க நடந்த ஒரு சதி வேலையாகவே இதைக்கருதுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவமும் கூட அதன் தொடர்ச்சியாகவே இருக்கலாம்.

அல்லது தொடர்ச்சியாக மக்களை அடைத்துவைப்பதால் விரக்தியுற்ற மக்கள் வெளியேற முயற்சித்திருக்கலாம். அவர்களை எச்சரிக்கும் முகமாக இதுபோன்ற கடும் எதிர்ப்பினை இராணுவம் காட்டியிருக்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும் , போரினால் அவதியுற்று நிராயுதபாணிகளாய் இருக்கும் மக்களை நாயைச் சுடுவது போல சுடும் அதிகாரம் (உலக நாடுகள் கடும் நெருக்குதலை கொடுக்கின்ற சூழலில் , உலகநாடுகள் அனைத்தும் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கையில் ) இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்குமானால் போர்க்கால சமயங்களில் அவர்கள் எவ்வளவு வெறித்தனத்துடன் நடந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறது.

ஆனால் உலக நாடுகளோ குற்றத்திற்கு முழுப் பொருப்பாளியான இராஜபக்சேவையே அவரது இராணுவத்தைப் பற்றி விசாரிக்கச்சொல்கிறது. அதற்கும் கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறார் அவர். மூன்றாம் தரப்பின் சுதந்திரமான விசாரணை ஒன்று மிக நிச்சயமாகத் தேவை என்பதையே போருக்குப்பின்னரான இலங்கை அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நிருபிக்கின்றன.

உலகநாடுகளின் நேரடிப்பார்வைக்கு முற்றுமுழுதாக தடை ஏற்படுத்துவது இந்தியாதான் என்பதை நிச்சயமாக தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். அது மட்டுமின்றி , புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லும் நாராயண்கள் இலங்கையும் , பாகிஸ்தானும் கொண்டுள்ள உறவு அச்சுறுத்தல் என்று சொல்லாதது ஏன்? அத்தோடு நிற்காமல் இராகுல் காந்தி உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்று "ரோ" செய்தி பரப்புகிறதே அது ஏன்?

இந்தியாவும் , இலங்கையும் சேர்ந்து தமிழ்த்தேசிய இறையாண்மையை ஒழிக்கப் பார்க்கின்றன என்பதே நேரடிப் பதில். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்கள் அறிவித்த சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே வெளிப்படையான ஒரு நிலைப்பாடு. மற்றபடி ஈழத்தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க உதவுவோம் என்றெல்லாம் இந்தியா சொல்வது சும்மா பேச்சளவிற்கு மட்டுமே.

தோற்றுப் போனாயே இனி உனக்கென்ன சுதந்திரம் ? சும்மா கிட....என்று உதறிவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் அவர்கள் ஒரு சேதியை தெளிவாக உலகுக்குச் சொல்கிறார்கள் , புலிகளைத் தீவிரவாதிகள் என்று சொன்னாலும் , அவர்கள்தான் தமிழர்களின் ஒரே குரலாக இருந்தார்கள் என்ற செய்திதான் அது.

புலியெதிர்ப்புக்குரல்களும் , சித்தாந்தம் பேசும் வறட்டு கொள்கைவாதிகளும் இனியாவது மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு சும்மா இருப்பதே சிறந்தது. இவர்களால் இழந்தது கோடி....

மேற்குலகம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளத் துவங்கும் இவ்வேளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பொன்னான வேளை.

இந்தியாவை நோக்கியும் , இலங்கையை கண்டித்தும் எதிர்ப்புக்கணைகளாக நமது குரல் விண்முட்டி உள்ளத்தில் தீ மூட்டவேண்டும்...அந்தத்தீ தான் தீயவர்களின் கூடாரமான தென்னிலங்கையைச் சுட்டெரிக்கும்...! அதன் மூலமே நாம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்தும் இயங்க வைத்திருக்க இயலும்.

உரக்கச் சொல்லுங்கள் உண்மையை....

இந்தியாவும் , இலங்கையுமே ஈழத்தமிழினத்தின் எதிரி.

அப்படியானால் தமிழகச் சகோதரர்கள் ?

"ழகரத்துக்காக" ரங்கன் - விருந்தினர் பக்கம்

5 comments:

மாதவன் said...

போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்கய்யா.

தமிழ்த்தேசியமாவது , எழவாவது...

மாதவன் said...

அவனவன் அவனவன் வேலையப் பாத்துகிட்டு இருக்காம அரிப்புக்கு சொரிஞ்சிக்க இலங்கைதான் கெடச்சதா?

மைக் மாமா said...

டேய் புண்ணாக்கு உன்னால் முடிந்தால் இலைங்கைக்கு போய் சண்டை போடு. சும்மா ஏத்தி உட்டு ஏத்தி உட்டு காமேடி பீஸாக ஆவாதே
தமிழ் தேசியம் இங்கிலீஸ் தேசியம்ன்னு பிலிம் காட்டி மக்களை ஏமாற்றாதே

South-Side said...

அன்புள்ள திரு.மாதவன் மற்றும் மைக் மாமா.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்துக்களுக்கான விளக்கத்தை திரு.ரங்கன் அவர்கள் விரைவிலேயே பிரிதொரு பதிவாகவோ இல்லை பின்னூட்ட வாயிலாகவோ தருவதாக உறுதியளித்திருக்கிறார்.

நன்றி.

ஆனால் திரு மைக் மாமா புண்ணாக்கு என்று சொல்வதன் மூலம் தன்னைத் தானே கேவலப்படுத்திக்கொள்வது நியாயமா?

ரங்கன் - ழகரம் said...

தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கூட புரியாதவர்கள் இங்கு எமது கட்டுரையின் உட்கருத்தின் பாலான விமர்சனங்களை வைக்காமல் , தமிழ்த்தேசியம் பற்றிய விமர்சனங்களாக வைக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்...தமிழ்த்தேசியமற்ற வேரெந்த காரணத்தைக்கொண்டும் எம் மக்களின் ஒற்றுமையை வென்றெடுத்தல் இயலாது.

தமிழ்த்தேசிய முன்னெடுப்பு அற்ற எந்தப்போராட்டத்தையும் எமது மக்கள் அங்கீகரித்ததில்லை.

தமிழ்த்தேசிய கோடபாடே எமக்கு ஒரு இராணுவத்தைத் தந்தது.

தமிழ்த்தேசிய கோட்பாடே சிங்கள இனவெறிக்கு சரியான எதிர்ப்புக்களம்....

இல்லையெண்று சொல்பவர்கள் மாற்றூக்கருத்துடன் , மாற்று செயல்திட்டத்துடன் விவாதிக்கத் தயாரா?

உங்களுக்கான விரிவான பதில் இந்த இணைப்பில் உள்ளது...

http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm