Sunday, September 20, 2009

ழகரம்:உள்ளதைச் சொல்வோம்! : வாரிசு அரசியல்.

தமிழக அளவில் வாரிசு அரசியல் என்பது பாரிய விவாதப் பொருளாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் உயர்திரு.வைகோ அவர்கள் திமுகவை விட்டுப் பிரிந்ததற்கும் , தனிக்கட்சி தொடங்கியதற்கும் வாரிசு அரசியலே காரணம்.

மன்னராட்சியில் மன்னர் இறந்தபிறகு அவரது மகன் அரசனாக பதவியேற்பார். மக்களாட்சி , மக்களுக்காக நடத்தப் படுவது என்றாலும் மன்னராட்சியின் வாரிசுகளுக்கு பட்டம் சூடுவது போன்றே இங்கேயும் அதுதான் நடக்கிறது.

சரி வாரிசு அரசியலுக்கு என்னதான் அடிப்படை?. ஒருசில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை கட்சிக்குள் திணிப்பதில் ஈடுபாடு காட்டினாலும் , பெரும்பாலான அரசியல் வாரிசுகள் மக்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே மக்கள் என்பவர்களில் மக்களின் பிரதிநிதிகளும் அடங்குவார்கள்.

சமீபத்திய உதாரணம் , ஆந்திர முதல்வர் வொய்.எஸ்.ஆர் அவர்களின் அகால மரணத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று அடம் பிடித்த/ பிடிக்கும் ஆந்திர காங்கிரசார்......

திமுகவிலும் கூட கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களைத் தவிர ஸ்டாலின் மற்றும் அழகிரி அவர்கள் திணிக்கப்பட்டவர்கள் அல்லர்.

அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு தத்தமது சுயலாபங்களுக்காக சிலர் எம்.ஜி.ஆரின் மனைவியார் திருமதி ஜானகி அவர்களின் தலைமையிலும் , இன்னுஞ்சிலர் ஜெயலலிதா தலைமையிலும் கொடி பிடித்தனர். திறமை , தகுதி என்ற எந்தவித அடிப்படையையும் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசுகளாகப் பார்க்கப்பட்டார்கள்.  ஒருவேளை திறமையின் அடிப்படையில் பார்த்தால் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே எவ்வகையிலும் தகுதியானவர்.

இந்திய அளவில் பார்த்தோமானால் , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக திரு.சீதாராம் கேசரி இருந்தபோது கட்சி சிதிலப்பட்டுப் போனதாகச் சொல்லி சோனியாவைத் தலைமையேற்கச் சொல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தியதால் விருப்பமேதுமின்றி காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்றார் சோனியா காந்தி. ஒரு மாநிலத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தாலும் கூட வேறெந்த தலைவரும் பெறாத முக்கியத்துவத்தைப் பெற்று விடுகிறது.

மற்ற மாநிலங்களின் அளவில் பார்த்தால் , கேரளாவில் கருணாகரனின் புதல்வர் முரளிதரன் , கருநாடகாவில் தேவகவுடாவின் புதல்வர் குமாரசாமி , லட்சத்திவுகளில் சையத்தின் புதல்வர் , ஆந்திராவில் என்.டி.ஆரின் துணைவியார் சிவபார்வதி , சந்திரபாபு நாயுடு , மராட்டியத்தில் பால் தாக்கரேவின் புதல்வர் உத்தவ் தாக்கரே , ஒரிசாவில் பிஜு பட் நாயக்கின் புதல்வர் நவீன் பட்நாயக் ....இப்படி போய்க்கொண்டே இருக்கலாம்.

அடிப்படையில், ஒரு அரசியல் தலைவரின் வாரிசு இயல்பாகவே எல்லா மக்களிடத்தும் நன்றாகவே அறிமுகமாகிவிடுகிறார். ஒவ்வொரு மாவட்ட / மாநில அளவிலான தலைவர்களும் மாநிலத்தின் / தேசத்தின் முழுமையான மக்களுக்கும் அறிமுகமானவர்கள் அல்லர்.

முழு மாநிலத்திற்கும் அறிமுகமான  ஒருவர் மக்கள் மன்றத்தின் முன் நிற்கும்போது இயல்பாகவே சற்று எளிதாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார். அதனாலேயே அரசியல் கட்சிகள் வாரிசுகளை முன் நிறுத்துகிறார்கள்.

இன்னொன்று தலைமையின் கீழ் தமக்குள்ள விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள இரண்டாம் மட்டத்தலைமைகள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் வாரிசுகளை புகழ்ந்துரைப்பதும் , அவர்களிடம் தமது இருப்பைக் காட்டிக்கொள்ள செய்யும் அதீத விளம்பரமும் துதிபாடலும். அதற்கான சரியான உதாரணங்கள் அழகிரியும் , காங்கிரஸ் தலைவர் ஜி.கே . வாசனும். இருவருமே கீழ்மட்டத்தொண்டர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு தலைமைக்கு இழுத்து வரப்பட்டவர்கள்.

மேற்கண்ட இரண்டு காரணங்களைத் தவிர மூன்றாவது முக்கியக் காரணம் மக்களின் மனப்பாங்கு....

இங்கே நேற்றுவரை , துரை துரை என்று ஆங்கிலேயர்களைத் துதிபாடிய அனேக மக்கள் தங்களை ஆள்பவர்களையும் அந்த துரை ஸ்தானத்தில் வைத்தே பார்க்கிறார்கள்.....முடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்கிலிருந்து குடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்குக்கு இந்திய மக்கள் மாறவே இல்லை. அதனால் எப்படி மன்னரின் மகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வாரிசாக அங்கீகரிக்கப்படுகிறாரோ அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது.

சரி இந்திய அளவில் தான் இப்படி . உலக அளவில்?

உலக அளவிலும் கூட வாரிசு அரசியல் கணிசமாக இருந்தாலும் இந்திய அளவிற்கு இல்லை. அமெரிக்காவின் ஜூனியர் ஜார்ஜ் புஷ் , இந்தோனேசியாவின் மேகவதி சுகர்னோ , சிறிலங்காவின் சந்திரிகா குமாரதுங்க , பாகிஸ்தானின் பெனாசீர் பூட்டோ , பங்களாதேஷின் ஷேக் ஹஸினா  என்று நீள்கிறது பட்டியல்.

வாரிசு அரசியலானது நிலையான அரசுகளுக்கு ஒரளவு உதவினாலும் , திறமையான தலைவர்கள் நாட்டை ஆள்வதற்கும் , தகுதியுள்ளவர்கள் பொறுப்பிற்கு வருவதற்கும் ஒரு பெரும் தடைக்கல்லாகவே இருந்து வருகிறது.

என்றைக்கு  தனிமனித துதிப்பாட்டில் இருந்து விலகி , நேர்மையானவர்களையும் , தகுதியுள்ளவர்களையும் தங்களது வழிகாட்டிகளாக , தலைமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மக்கள் அடைகிறார்களோ அன்றே வாரிசு அரசியலிலிருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.

வாரிசு அரசியலில் இருந்து விடுபடுவதே நேர்மையான மக்களாட்சியாகும். அரசியலில் நேர்மையையும் , தன்னலமின்மையையும் , வெளிப்படையான நிர்வாகத்தையும் நாமே தொலைத்து  விட்டு யாராவது வந்து மீட்டுத்தருவார்களா என்று காத்திருக்கிறோம்...

நம்மால் மட்டுமே நாம் தொலைத்ததை மீளப்பெற முடியும் என்ற அடிப்படையைக் கூட அறிந்து கொள்ளாமல்........! ஆக , நம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.!


படைப்பு.-

"ழ"கரம் - "உள்ளதைச் சொல்வோம்" குழு.

No comments: