Saturday, September 19, 2009

ழகரம் - தலையங்கம்(19.09.09) - உலகத் தமிழ் மாநாடு

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் அடுத்த ஆண்டு நடத்துவதாக பெருமதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

முதன்முதலில் மொழியால் இணைந்தவர்கள் அம்மொழிக்காக விழா எடுத்த பெருமை தமிழ் மொழியையே சாரும்.அத்தகைய மொழிக்காக ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த முயல்பவர்களை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டவே முயல்வார்கள்.

அத்தகைய நன்முயற்சியில் அரசியலைக் கலப்பதில் யாருக்கும் விருப்பமிருக்கவியலாது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தாய்த்தமிழகத்திலும் , அதற்கடுத்தாற்போல் மலேசியாவிலும் , ஈழத்திலும் மற்றெல்லா நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இன்றைய அளவில் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை , ஈழ வதை முகாம்களில் வாடுகின்ற ஒரு சூழலே….

உலகம் முழுமையும் ( தத்தமது சுயநல நோக்களுக்காக என்றாலும் ) அப்பிரச்சினையை தீவிரமாக அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழலில் , உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கும் கலைஞர் அவர்களின் செயல்பாடு என்ன என்பதை நடுநிலைத் தமிழர்கள் நன்றாகவே உணர்கிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் கலைஞரின் செயல்பாடு பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்படியொரு நிலையில் இன்றைக்கு உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய நடுவண் அரசினை வலியுறுத்தி முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்கவும் , அதன் பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினையும் பெற்றுத் தர கலைஞர் முயற்சிப்பாரானால் உலகத் தமிழ் மாநாட்டை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றி மாநாடாக்கி அந்த வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்பார்கள்.


அப்போதுதான் மாநாட்டின் நோக்கம் முழுமையாக வெற்றி பெரும். அதைவிடுத்து இந்த மாநாட்டையும் ஒரு அரசியல் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமோ என்ற இயல்பான சந்தேகம் தமிழர்களிடையே மிகுந்து கிடக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கலைஞரின் கடமை…

காரணம் உலகத்தமிழ் மாநாடு திமுகவின் மாநாடு அல்ல.
தமிழர்களின் மாநாடு…

அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை…! அக்கடமையை சரிவர தமிழர்கள் செய்ய கலைஞர் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீளப்பெறுதல் மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கு அடிப்படையானது.

2 comments:

டேவிட் said...

தலையங்கம் நன்று.

நீங்கள் மென்மையாக எழுதியிருந்தாலும் , உண்மையில் உலகத் தமிழ் அமைப்புக்கள் செருப்பிலிடித்தாற் போன்று கலந்து கொள்ளவியலாது என்று அழைப்பிற்கு பதிலனுப்ப வேண்டும்.

அதுதான் கருணாநிதிக்கு தக்க பாடமாக அமையும்.

அதற்கான பொன்னான வாய்ப்பை அவரே வலிய வந்து ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

தவறவிட்டுவிடக் கூடாது

Anonymous said...

புதுக்கோட்டை: ஈழப் போராட்டங்களை திசை திருப்பவே உலகத் தமிழ் மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான்.

புதுக்கோட்டையில், இன்றும் நாம் தமிழர் இயக்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.

அப்போது அவர் பேசியதாவது...

கோவையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சிதான். ஆனால் இந்த மாநாடு ஏன் காலம் கடந்து நடக்கிறது. ஒன்று மட்டும் புரிகிறது. ஈழ போராட்டங்களை திசை திருப்பத்தான்....மக்களின் போராட்ட குணங்களை மாற்றத்தான் உலகத்தமிழ் மாநாடு நடக்கிறது. ஆனால் என்ன செய்தாலும் எங்கள் போராட்ட குணத்தை மாற்ற முடியாது.

தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தைத்தான் பிரபாகரன் நடத்திவந்தார். அதைத்தான் நாங்களும் செய்து வருகிறோம்.

இனி போராடி பலனில்லை என்று சில அமைப்புகள் கொஞ்சம் அமைதி காக்கின்றன. ஆனால் நாம் தமிழர் இயக்கம் அமைதியாக இருக்காது.

பொதுவாக நேற்று வரை நடந்து வந்த ஈழ போராட்டத்தில் இப்போது சிறிது இடைவெளி இருக்கு. இன்னும் நான்கு மாதங்கள் அல்லது நான்கு வருடங்களில் ஈழ போராட்டம் முன்பை விட பெரிய அளவில் வெடிக்கும்.

தனித்தமிழ் ஈழம் தான் தீர்வு;அந்த தீர்வை நோக்கி போராட்டம் தொடரும்.

இனி நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ரத்தம், கண்ணீர், மண்ணையும் இழந்துவிட்டோம். அதனால் எங்களால் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இனி இழக்கப்போவது சிங்களன் தான். சிங்களன் தான் இழக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தான் எதிரி நாடாகிவிட்டது இந்தியாவுக்கு. அதனால் அங்கே கிரிகெட் விளையாட வீரர்களை அனுப்பவில்லை.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தார்கள் சிங்களர்கள். அதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட இந்தியா வீரர்களை அனுப்புகிறது.

பாகிஸ்தான் எதிரி நாடு; இலங்கை மட்டும் நட்பு நாடா? ஏன் இந்த பிரிவிணை என்றார் சீமான்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சீமான் பதிலளிக்கையில், வரும் மே-17ல் இந்த இயக்கத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில் நாம் தமிழர் இயக்க கட்சியின் சின்னம் மற்றும் கொடி அறிமுகப்படுத்தபடும் என்றார்.

பாரதிராஜா ஏன் உங்கள் ஈழ ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, பாரதிராஜாவிற்கு சில வேலைகள் இருப்பதால் அவர் நாம் தமிழர் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு இருக்கும் பணிகள் முடிவடைந்ததும் பங்கேற்பார் என்று நம்புகிறேன் என்றார்.

முன்னதாக, இன்று கலந்துரையாடல் நடைபெற்ற புதுக்கோட்டை மதுரை சாலையில் உள்ள எஸ்.எஸ்.மகால் முன்பு பிரபாகரன் -சீமான் இணைந்திருப்பது மாதிரியான படம் வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை அகற்றுமாறு போலீஸாருக்கு டி.எஸ்.பி.சாமிநாதன் உத்தரவிட்டார். கலந்துரையாடலுக்கு வந்த சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்தினர் படத்தை அகற்றினால் தீக்குளிப்போம் என்று ஆவேசமாக கூறினர்.

இதையடுத்து படம் இங்கே மட்டும் இருக்கட்டும் என்று கூறி விட்டு டி.எஸ்.பி. கிளம்பிச் சென்றார்.

நிரந்தர தீர்வு - ஈழம் மட்டுமே...

முன்னதாக தூத்துக்குடி [^] கத்தோலிக்க மறை மாவட்ட இளைஞர் பணிக்குழு மற்றும் கிறிஸ்துவ வாழ்வுரி்மை இயக்கம் சார்பில் கருத்தரங்கம் தூத்துக்குடி சின்னகோவில் வாளகத்தில் உள்ள ரோச் மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,

உலகத்தில் எங்கும் நடக்காத இனபடுகொலை இலங்கையில் நடந்து வருகிறது. தற்போது கிறிஸ்துவ மத தலைவர்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் உலக நாடுகள் திரும்பி பார்க்க தொடங்கியுள்ளன.

இலங்கையில் புலிகளை அழித்து விட்டோம் என்று உலக நாடுகளிடம் தெரிவித்து வரும் ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு சம உரிமை, அதிகார பகிர்வு அளிக்கப்படும் என கூறி வருகிறார். ஆனால் அது ஓருபோதும் நடக்காது.

தற்போது புலிகள் மீது சில நாடுகள் பயங்கரவாத இயக்கம் என கூறி ஆதரிக்கவில்லை. விரைவில் இலங்கை அரசின் உண்மை நிலையை உலக நாடுகள் உணர்ந்து தமிழர்களுக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வு என்ற முடிவுக்கு வரும்.

இதற்கு உலகில் வாழும் தமிழர்கள் [^] அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அவர்களை ஒன்றுபடுத்தும் பணியில் நாம் தமிழர் இயக்கம் ஈடுபடும் என்றார் சீமான்.