Tuesday, February 16, 2010

ஆறப்போடுவதில் ஆஸ்கார் வாங்கும் இந்திய அரசு.!

அன்று நாம் கதறினோம். கேட்கத் தயாராய் இல்லை இந்திய நடுவண் அரசு.

முத்துக்குமார் தொடங்கி இரட்டை இலக்கங்களை தமிழுக்காய் தன்னை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொட்டபிறகும் வாய்திறந்து எதுவுமே பேசாமல் தமிழ்நாட்டிற்கும் , தமக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போலவே பேசா மடந்தையாய் , தொலைநோக்கின்றி , அனேக தமிழர்களுக்குள் தாம் இந்தியர் என்னும் உணர்வையே கொஞ்சம் வெறுக்க/ மறக்கத் தூண்டியது இந்திய நடுவண் அரசின் செய்கைகள்.!

அதன் பின்னர் , கச்சத் தீவினையொட்டிய தமிழக அரசின் / தமிழக எதிர்க்கட்சிகளின் கருத்தினை முற்றிலும் புறந்தள்ளி கச்சத்தீவு முடிந்து போன கதை என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கேரள முல்லைப் பெரியார் பிரச்சினையில் கூட அனேக குழப்பங்கள்...கேரளாவிற்கு புது அணை கட்டும் ஆய்விற்கான அனுமதியினை வழங்கி முற்றிலும் கேரளாவிற்குச் சார்பான ஒரு முடிவினை எடுத்தார் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஒரு பொதுக்கூட்டம் மதுரையில் நடத்த முயன்ற போது , ஸ்பெக்ட்ரம் விசாரணையை கையிலெடுத்து திமுகவை மிரட்டிப் பணிய வைத்த சாதனையையும் செய்தது இந்திய நடுவண் அரசு.

தெலுங்கானா பிரச்சினையில் இந்திய நடுவண் அரசின் சொதப்பல் ஊரறிந்ததே. முதலில் தெலுங்கானாவை அங்கீகரிப்பதாகச் சொல்லிவிட்டு , பின்பு பின்வாங்கி , விசாரணைக் கமிஷன் அமைப்பதாகச் சொல்லி பிரச்சினையை ஆறப்போட்டு சூடு தணிக்கும் அபார வித்தையில் இறங்கி இருக்கிறது இந்திய அரசு. 

ராஜ் தாக்கரே மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழங்கி வந்த போதுஞ் சரி , மகாராஷ்டிரத்தில் மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை என்று வடமாநிலக் காரர்களைத் தாக்கிய போதும் சரி கொர் என்று குறட்டைவிட்டுத் தூங்கி விட்டு இன்று பால் தாக்கரே ஷாருக்கை விமர்சித்தவுடன் பொங்கியெழுந்த புதுவித்தையையும் செய்து காட்டியது இந்திய அரசு. 

இந்தியப்படைகளில் அதிக சதவீதம் பேர் பீகார் , உ.பிக் காரர்கள் தான் ...அதனால் இந்தியாவைக் காப்பவர்கள் அவர்கள்தான் என்று புதுமொழி சொன்னார் இந்திய நடுவண் அரசின் மவுத் பீஸான இராகுல் காந்தி.....இது அடுத்த மாநிலக்காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்ற அடிப்படை கூடப் புரியாமல்.!

கூர்க்காலாந்து , விதர்பா என்று தனித்தனி மாநிலக் கோரிக்கைகள் எழுவது எதனால் ? அதன் அடிப்படை என்ன என்று சிந்தித்து ஆராய வேண்டிய நடுவண் அரசோ எதைப்பற்றியும் சிந்திக்க மறுக்கிறது.....எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல தயங்குகிறது. 

முதுகெலும்பற்ற வகையில் எல்லா முடிவுகளையும் ஜவ்வு இழுப்பு இழுத்து மக்களைச் சோர்வடையச் செய்கிறது. அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வை குறைக்கச் செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே இந்திய அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கின்றன.

இந்திய மாநிலங்கள் தனித்தனி இனங்கள் , தனித்தனி கலாச்சாரம் கொண்டவை , அவர்களை இன்றைய அளவில் பிணைப்பது என்பது இந்திய நடுவண் அரசு மட்டுமே....ஏதேனும் பிணக்குகள் ஏற்படின் அதனை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டியதும் இந்திய நடுவண் அரசுதான்.

ஆனால் , தன் கடமையைச் சரிவரச் செய்கிறதா அது? எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஆனால் , கருத்து வேறுபாடற்ற முறையில் , மக்களுக்கான குரலாக , பழங்குடியின மக்களின் போராட்டங்களை , போராட்டங்களுக்கான விழுமியங்களை ஆராயாமலும் கிடப்பில் போட்டுக்கொண்டிருக்கிறது.


எல்லாவற்றையும் ஆறப்போட்டு காரியம் சாதிக்க நினைப்பது என்கிற நரசிம்மராவ் பார்முலா தான் , டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கு அடிப்படை என்பதுவும் , இந்து - முஸ்லீம் மக்களிடையே தீராப் பிணக்கை ஏற்படுத்திய அச்சம்பவமே இன்றைய நிறைய தீவிரவாதச் சம்பவங்களூக்கும் காரணம் என்பதுவும் யாராலும் மறைக்க முடியாதது. 

காவிரி , முல்லைப் பெரியார் , தெலுங்கானா என்று தொடங்கி நேற்று நடந்த மராட்டியப் பிரச்சினை வரைக்கும் எதற்குமே சரியான முடிவொன்றை கண்டு பிடிக்காமல் ஆட்சிக்காலத்தை தள்ளிக்கொண்டு போவதிலும் , கூட்டணித் தேரை வடம் பிடித்துப் போவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறதோ இந்திய நடுவண் அரசு என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை...!

2 comments:

மதன் said...

கட்டுரையின் முதல் பத்தியில் ஆரம்பித்து கடைசி வார்த்தையில் முடித்தேன்.

இலகுவான மொழி நடை.
இயல்பான ஆதங்கம்.

உண்மையில் 'இந்தியர்'களாக இருப்பது எப்படி என்ற க்ளாஸை எடுக்க வேண்டிய நிலைக்கே இந்திய அரசாங்கம் நம்மை கூட்டிச் செல்கிறது.

Shan Nalliah / GANDHIYIST said...

Great article!Please continue!Greetings from Norway!