Saturday, April 03, 2010

தமிழில் பொறியியல் கல்வி : வாழ்த்துவோம்..!

அகம் , புறம் அனைத்திலும் , ஒரு மனிதனின் சிந்தனை முழுக்கவும் நிரம்பியிருப்பது தாய்மொழி. அது ஆங்கிலம் ஆனாலும் , பிரெஞ்ச் ஆனாலும் , தெலுங்கு ஆனாலும் , தமிழ் ஆனாலும் ஒரு மனிதன் சிறு வயது முதல் சிந்திக்க ஆரம்பிக்கும் பருவம் வரையும் ஒவ்வொன்றையும் தனது தாய் புகட்டிய மொழி மூலமாகவே கற்கிறான்.

சிந்தனை ஊறுவதும் , செழிப்புற வாழ்வதும் ஒரு விடயத்தை எவ்வாறு அவன் கிரகித்துக்கொள்கிறான் அல்லது புரிந்து கொள்கிறான் என்பதை ஒட்டியுமே ஆகும்!

அப்படி புரிந்து கொள்வதற்கு , சரியான முறையிலான கல்வி அவசியமும் , அடிப்படையும் ஆகும். ஆனால் தமிழ்த் தேசத்தில்  , பத்தாவது , பனிரெண்டாவது வரை எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்கும் ஒருவன் கல்லூரி சென்றதும் ஆங்கில வழியிலேயே கல்வி கற்கும் விநோதமான , வேடிக்கையான , நகைப்புக்குரிய செயல் நிகழ்கிறது. அதற்கு கூறப்படும் காரணமோ அதைவிட நகைப்புக்குரியது. உலகளாவிய முறையில் ஆங்கிலம் தான் சிறந்தது என்ற குருட்டுத்தனமான , பிற்போக்கான நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை.

உலகில் சிறந்த சாதனைகளைப் படைத்து வரும் ஜப்பானியர்களும் , ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , தத்தமது தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள். அவர்கள் சாதிக்கின்ற போது தமிழர்கள் மட்டும் சாதிக்கவியலாது , போட்டியில் முன்னேறவியலாது என்ற நம்பிக்கையை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று நான் விளிப்பது சரிதானே நண்பர்களே?

அடுத்து ஆங்கிலமே உலக மூலம் என்ற கருத்தும் மிகத் தவறானது. உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சீனாவாகட்டும் , லத்தீன் அமெரிக்காவாகட்டும் , ஐரோப்பாவாகட்டும் ஆங்கிலத்தை ஒரு வணிக மொழியாகக் கூட அவர்கள் கையாள்வதில்லை.


இத்தகைய சூழலில் தான் நாகர்கோவில் அண்ணா பல்கலையில் இயந்திரவியல் படிப்பும் , கட்டிடவியல் படிப்பும் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழில் கற்பிக்கப்படும் என்ற தேனான அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. இதைவிட இனிப்பான சேதியொன்று சமீப காலத்தில் இருக்க முடியுமா? நாம் பேசுகின்ற மொழியில் , நாம் புரிந்து கொள்கின்ற மொழியில் கல்வியைக் கற்பதன் மூலமே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என்ற பாரிய உண்மை வெளிப்படப் போகிற வேளையிது.

இதன் மூலம் தமிழில் டெக்னிக்கல் புக்ஸ் என்கின்ற தொழில்நுட்ப நூல்கள் பெருகும் , அங்கு கல்வி கற்கின்ற மாணாக்கர்களின் அறிவுத்திறன் பெருகும். அந்த முயற்சிக்கான ஆதரவை வழங்க வேண்டியது தமிழ்ப்பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சர்வ நிச்சயமாக அந்த முயற்சி தமிழகம் முழுமைக்கும் பரவும்.....

இனி தமிழகம் செழிக்கும் .........கண்டுபிடிப்புக்களில் தலை நிமிரும் ....விரைவில் !

1 comment:

சரண் said...

மிக அருமையான செய்தி.. பகிர்ந்தமைக்கு நன்றி.

தமிழில் கற்பிப்பதோடு மட்டுமில்லாமல் நன்றாகப் படித்து முடிப்பவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் இம்மாணாக்கர்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சி தொடர வாய்ப்பிருக்கிறது.