Monday, February 08, 2010

"பொன்சேகா கைது!"....காலம் கனிகிறது...!

இலங்கை இராணுவத்தால் நேற்று நடுநிசியில் முன்னாள் இராணுவத் தலைமையதிகாரியும் , கடந்த இலங்கை பொதுத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் வென்றவருமான திரு.பொன்சேகா அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதுவும் எப்போது?

நேற்றைய மதியம் திரு.பொன்சேகா அவர்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் தப்பிக்கக் கூடாது , விடமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறிய பிறகு.
தமிழர்கள் "பொன்சேகா" வின் கைதுக்கு வருந்துமளவிற்கு எதுவும் நடந்துவிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த வேட்பாளர் அவர் என்பதைத் தவிர வேறொன்றும் பந்தமோ , பாசமோ தமிழர் தரப்பிற்கும் முன்னாள் ஜெனரலுக்கும் இல்லை என்பதே அதற்கான காரணம்.

பொன்சேகா ஒன்றும் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசியலுக்கு வந்தவரல்லர். தமது பதவியாசையால் அரசியலுக்கு வந்து , அப்பதவியைப் பெற தமிழர் உதவி தேவை என்றவொரு சூழலில் அதைத் தருகிறேன் , இதைத் தருகிறேன் என்ற ஆசை வார்த்தைகளால் தமிழர் வாக்குகளை வெல்ல முயன்றவர் என்பதைத் தாண்டி நாம் அவரது கைதுக்கு வருத்தப்பட வேண்டியதில்லை.

ஆனாலும் இதையுந்தாண்டி, நாம் வருத்தப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. ஒரு அமெரிக்கக் குடிமகனான , நாடறிந்த அதிபர் வேட்பாளராக , உலக நாடுகள் உன்னித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிற ஜென்ரலுக்கே இந்நிலை என்றால் , வாய்பேச இயலாத தமிழ் மக்களின் கதி என்ன? , போராளிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நமது இளைஞர்களின் கதி என்ன ? என்ற விடயமே இனி நமது பாரிய கவனத்துக்கு வரவேண்டிய விடயமாகும்.

அந்த விடயத்துக்கு இலங்கைக்கு வெளியிலிருக்கும் நம்மால் என்ன செய்யவியலும் என்று ஆராய்வதே மிகவும் இயல்பானதாக இருக்க முடியும்....

பாரிய மனித உரிமை மீறல்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் நடந்தது என்று நாம் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த நிலை மாறி....இன்று சிங்களத் தலைமையொன்று சொல்லி இருக்கிற சேதி உலக நாடுகளைக் கண்டிப்பாக எட்டியிருப்பினும் , சீனா / ரஷ்யா / இந்தியா இவற்றின் அரவணைப்பில் இருக்கும் ராஜபக்சே கம்பெனிக்கு மேற்குலகத்தின் பத்தி எழுத்தாளர்கள் கொடுக்கும் கண்டனம் கால்காசுக்கும் பெறாது. அதையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்திருக்கிறது.

புலம்பெயர் தமிழர்களின் தணியாத போராட்டம் ஜி.எஸ்.பி சலுகை விலக்கிற்கு உதவியதென்றால் அடுத்து நாம் போக வேண்டிய களம் காமன்வெல்த் அமைப்பே......

இலங்கைத் தீவின் ராஜபக்சே கம்பெனியை மேற்குலகிலிருந்து ஐசோலேட் அல்லது தனிமைப்படுத்துவதே அதன் மூலம் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதே தமிழர்கள் செய்விக்கக் கூடிய மிகச்சிறந்த இராஜதந்திரமாகும்.

அதற்கான காலம் கனிகிறது......

ஆம் , தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப்படி இனி இலங்கைக்கு வெளியே வாழ்கிற தமிழர்கள் தான் சுதந்திரப்போரை வழிநடத்துபவர்கள்..........

மேற்குலக வர்த்தகத்திற்கு இணையென சர்வநிச்சயமாக இலங்கையால் வெறெங்கும் வாணிபத்தை பெருக்கிக்கொள்வது இயலாது. உலகளாவிய முறையில் சீனா ஊர் ஊராகக் கூவி துணி விற்றுக்கொண்டிருக்கும் போது , இலங்கை சீனாவில் போய் துணி விற்க முடியுமா? வேறெந்த தொழில்களும் அவ்வாறே.

இலங்கைக்கு பொருளாதார ரீதியில் தடையேற்படும் போதுதான் தென்னிலங்கை மக்கள் மூன்று தசாப்தங்களாக தமிழர்கள் பட்ட வேதனையை உணர்ந்து கொள்வார்கள்.

தென்னிலங்கை மக்களுக்கான வாழ்வதாரம் பாதிக்கப்படும் போது தான் அவர்கள் அதைத் தீர்க்கும் வழி என்ன வென்பதை சிந்திக்கத் தலைப்படுவார்கள்...!!!


அவ்வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது தான் புலம்பெயர் தமிழர்களின் டாலர்கள் இலங்கை அரசுக்குத் தேவைப்படும்...அந்த டாலர்களால் மட்டும் தான் மீண்டும் குறைந்தபட்சம் சமஷ்டி என்கிற அளவிற்காவது பேச்சு நடத்த இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும்!!

அதுபோன்ற பொருண்மியத்தடைகள் வடகிழக்கு வாழ் தமிழ்மக்களையும் என்பதும் உண்மைதான். ...

வடகிழக்கு மக்களுக்கு பொருண்மியத் தடைகளொன்றும் புதிதல்ல. முப்பது வருடங்களாக இதையும்தாண்டிய கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்....இனவுரிமைப் போராட்டத்திற்காக அவர்கள் இழந்தது மிகவும் அதிகம்...இனியும் இழக்க எதுவுமே இல்லை என்றாலும் அவர்கள் உணர்வை இழக்கவில்லை என்ற உண்மையத் தான் கடந்த அதிபர் தேர்தல் காட்டி நிற்கிறது.


பழியுணர்ச்சி மேலிட இக்கருத்து வைக்கப்படுகிறது என்ற சொல்லாடலும் உண்மைதான்..

இதை நாம் மறுக்கவேயில்லை. ஒரு லட்சம் மக்கள் எமது மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட போது நாம் சிங்களர்களீன் மீது பழியுணர்ச்சி காட்டாமல்,  பாசத்தையா பொழிவது? இருப்பினும் சிங்கள மக்கள் எமது எதிரிகளில்லை. அவர்களுக்கு சிங்கள இனவாதத்தை ஊட்டி தமிழர்களை வதைக்கத் துடிக்கும் சிங்களத் தலைமைகள் தான் நமது எதிரி...

எதிரியைப் பணிய வைக்க வேறெந்த மார்க்கமும் இல்லாத சூழலில் , தமிழர்களுக்கான தீர்வுகளைப் பெற்றெடுக்க நாம் வேறு வழிகளைச் சிந்தித்தாக வேண்டும்...
இலங்கையில் சனநாயகம் என்ற எதிர்க்கட்சிகளின் கூக்குரலில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும்....சனநாயகத்தை வேண்டி உலகத்தின் மனசாட்சியை உலுக்குவதன் மூலம் இலங்கையின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை அவசரப்படுத்தும் நிர்பந்தங்களைச் செய்தல் வேண்டும்...

எதிர்க்கட்சிகளும், இராஜபக்சேவும் மோதிக்கொண்டு அழியட்டும்...நாம் வெறுமனே கிடப்போம் என்று நாம் வாளாவிருந்துவிட இயலாது.  எதிர்க்கட்சிகளை விட பன்மடங்கு கோபமும் , வெறுப்பும் தணியாத நெருப்பென தமிழர்கள் நெஞ்சில் எரிகிறது......!!
- கதிரவன்.

No comments: