Monday, September 28, 2009

ஸ்ரீ அனுமன் சாலிஸா - தமிழில்.!

ஸ்ரீ துளசிதாசர் இயற்றிய ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ் , ஆஞ்சநேய வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று நடந்த சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரம் அனுமன் வழிபாடு என்றே பெரியவர்கள் சொல்கிறார்கள்.....ஆகவே உங்களின் பார்வைக்கு.......இதன் மூல வடிவத்தை தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பினை அழுத்தவும்.


ஸ்ரீ அனுமன் சாலிஸா என்கிற அனுமன் புகழ்





குருவின் தாமரைப்பாதம் பணிவேன்..
உருவிலா மனதின் மாசு நீக்குவேன்.

ராமனின் அருளின் திறனை வியப்பேன்.
வீடுபேறினை அடைந்திடல் செய்வேன்.!

எத்துணை சின்னஞ்சிறியவன் நானே…
அத்துணை சான்றோர் ஆன்றோர் நடுவே.

அத்துணை திறனையும் எனக்களித்தருள்வாய்.
அகிலத்தின் துன்பம் அனைத்தும் நீக்குவாய்..

மூவுலகையும் நீ வென்றது சரித்திரம்……
உனை வணங்கிட நெருங்குமோ தரித்திரம்?

வாயு புதல்வனே…அஞ்சனை மைந்தனே..
உனை வென்றிட உலகினில் யாருளர்.

ரகுவரன் தூதனே , இராம பக்தனே
வஜ்ராயுதத்தின் வலிமை பெற்றாய்..!

தைரிய புருஷனே , அறிவின் அடக்கமே…
உன்னை நம்பியே பணிந்திங்கு வேண்டினோம்!

தீயவை எரிந்திட தீயிட்டுக்கொளுத்திடு..
நல்லவை செய்திட நாளும் துணைசெய்..

அல்லாதவைகளை அகற்றிட உதவு..
எல்லா மனிதரும் உயர்ந்திட உதவு.!

தங்கம் வார்த்த தகதக தோளினன்.
அங்கம் போர்த்திய அழகுநல் உடையினன்.

காதினில் தொங்கிடும் அழகுக்குண்டலம்.
காரிருள் ஒத்த உன் மேகக் கேசம்.

உன் வெற்றீயைச் சொல்வது கதாயுதம்தானே.
உன் வெற்றியால் பறப்பது கொடியது தானே.

உன் மார்பினில் நெளியும் முப்புரி நூலோ….
உன் புகழினைப் பாடி பூரிப்படையும்….

அழகுச்சிவனாரின் அம்சம் நீயே…
அறிவுக்கேசரியின் பெருமை  நீயே….

அண்டமெங்கிலும் உன் ஆட்சியைச்செலுத்தினாய்.
அதனால் உலகைச் சாந்தப்படுத்தினாய்…!

அறிவுக்கடலே , கல்வியின் பிறப்பே…
அடங்காப் புகழுடன் நீ இங்கு வாழ்ந்தாய்.

இராமன் உனைத் தன் சேவகன் ஆக்கினார்.
அவர் இட்ட கட்டளையை இசைவுடன் செய்தாய்.!

ராம , லஷ்மணர் சீதையைப் பணிந்தாய்.
அவர்களை உந்தன் நெஞ்சினில் கொண்டாய்.

ராமர் தம் புகழை பாடுதல்  கடனே…..
உன்னைப் பாடுதல் என் தவப் பயனே….

அளவற்ற சக்தியால் சிற்றுருவம் கொண்டாய்.
ஆக்ரோஷ சக்தியால் இலங்கை எரித்தாய்.

அடக்கம் மேலிட சீதையைக் கண்டாய்…
அன்புடன் இராமனின் சேதியை உரைத்தாய்…


உன் ஒப்பிலா வீரத்தால் அசுரரை அழித்தாய்
இராமனின் கட்டளை நிறைவேற்றி முடித்தாய்..

சஞ்சீவி பெயர்த்து சரித்திரம் ஆனாய்.
இலஷ்மணின் உயிரை மீட்கவே செய்தாய்.

இராமனின் தம்பியை மீட்டுக் கொடுத்ததால்
பரதனை யொத்தவன் நீயெனச் சொல்லி மகிழ்ந்தார்…

அனுமனைத் தொழுதல் இராமனைத் தொழுதலே..
அனுமனின் ஆசிதான் இராமனின் அருளே…!

சிவனும் , பிரம்மனும் , நாரதமுனியும்..
உன் புகழ் அளக்கவே அனுதினம் முயன்றார்..

யமன் , குபேரன் சரஸ்வதி தேவியும்
உன்புகழ் காணாது இயலாது நின்றார்…..

சுக்ரீவன் , இராமன் இருவரை இணைத்தாய்…
சுகப்பட்ட இராஜ்யம் உன் அரசனுக்களித்தாய்..

வீர விபிஷணன் உன் சொல் கேட்டான்…
அதனால் அவனோ இலங்கையை மீட்டான்.

இராமனின் மோதிரம் சுமந்தவன் நீயே…
சூரியன் சாட்சியாய் கடல் கடந்தவன் நீயே…

அரிய வித்தைகளின் இருப்பிடம் நீயே…
அதனால் வியந்தவர் பலகோடிப் பேரே…


உன் அருள் இருப்பின் துயரம் போகும்.
என் கடின இலக்கது பனியாய் விலகும்.

இராம இராஜ்யத்தைக் காத்தவன் நீயே…
எனையும் காப்பாய் காற்றின் சேயே..

என்னைக் காப்பதால் கவலை தீரும்…
எனக்கருள்வதால் மகிழ்ச்சியும் சேரும்…

உனை நான் வணங்கிட அச்சம் அகலும்..
உனை நான் தொழுதிட இன்பம் பெருகும்..


மூவுலகுமே உன் ஒரு சொல் கேட்கும்…..
நவ கோள்களும் உன் அசைவுக்குப் பணியும்…

பூதம் , பிசாசு , பலவகை முனிகளூம்
உன் நாமம் சொல்லிட தூரவே விலகும்…

வலிகள் , நோய்கள் , பலவகை பிணிகள்
வாயு புதல்வனின் பேருக்கு அஞ்சும்…!

வாயு புத்திரா , அஞ்சனை மைந்தா……
உன் பெயரது சொல்லிட பிணியது தீரும்…

மனதில் , கருத்தில்  அனுமனை வைத்தோர்…
மகிழ்வுடன் அவனது பாதம் பணிந்தோர்….
பிறவிப்பெருங்கடல் நீந்திக் கடப்பார்…
வாழ்வின் துயரங்கள் வாராது களிப்பார்..!

இராஜன் இராமனின் பாதம் வணங்கிட…
உண்மை உணர்வுடன் தொழுது பணிந்திட…
உலகக்காரியங்கள் வெல்வது சத்தியம்…
ஊமைத் துயரங்கள் கடப்பது நிச்சயம்….

நால்வகை காலமுன் பெயரது சொல்லும்…
அண்டமனைத்தும் உன் புகழது உரைக்கும்…

இராமனின் விருப்ப தேவதை ஆனாய்….
இராஜ்யம் , முனிகள்  , மக்களைக் காத்தாய்…

சீதாப்பிராட்டியின் மகனென ஆனாய்….
அட்டமா சித்திகளை அதனால் பெற்றாய்…

நவ நிதிகளை ஒருங்கே பெற்றாய்…
நல்லவர் வாழ தீயவை ஒழித்தாய்…..

இராமனை வணங்கி பக்தனாய் ஆனாய்….
இராமநாதத்தை பணிவுடன் சொல்வாய்…

இனிவரும் பிறப்பிலும் இசைவுடன் செய்வாய்…
உன்னை தொழுதால் இராமன் மகிழ்வார்…

மரணச் சமயத்தில் இராமனை வணங்குவோர்…
வரும்பல பிறப்பிலும் பக்தனாய் பிறப்பார்..

முக்தியின் திறவுகோல் ஆஞ்சநேயன் அவனே…
அவனை வணங்குதல் மோக்சத்தின் கடனே…

அனுமனின் பக்தனாய் ஆனவன் எவனோ
அடுத்த  பிறப்பிலும் துயரது விலக்குவான்…

வெல்க வெல்க அனுமனே வெல்க…
வெல்க வெல்க ஆஞ்சநேயனே வெல்க…

உணர்ச்சியின் கடவுளே உண்மை வெல்க..
உன்னை வணங்கினேன் உன் அருளது வெல்ல..

உன்னை வணங்கிட அணுகுமோ திது?
என் குரு நீயே இனி கவலை ஏது….?

அனுதினம் அனுமனை வணங்கிக் களித்தோர்..
அனுமன் சாலிஸா இதை பக்தியாய் படித்தோர்….
அனுமனின் ஆசியை அன்புடன் பெறுவார்….
சிவனார் அருள்வார்…..சித்திகள் புரிவார்…!

காற்றின் கடவுளே , அஞ்சனை சேயே…
தெய்வீகப் பிறப்பாய் தீயவை அழித்தாய்….

துளசிதாசர் போல் உன் சேவகன் ஆனேன்.
துன்பம் விலக உன் அடியேன் ஆனேன்….

இறைக்கு இறையே , இன்முகக் கடவுளே..
இராமனும் , நீயும் எம் நெஞ்சில் உறைவீர்.

போற்றி போற்றி ஆஞ்சநேயா போற்றி.
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி வாயுபுத்ரா போற்றி..
போற்றி போற்றி அறிவே போற்றி.
போற்றி போற்றி அருளே போற்றி.



இந்த மொழிபெயர்ப்பை முடிந்தளவு சரியாகவே செய்திருப்பதாக நம்புகிறேன். எங்கேனும் தவறு இருப்பின்  தாயுள்ளத்தோடு சுட்டிக்காட்டவும். 



மொழி பெயர்த்தவர் - பாலசுப்பிரமணியன்

இதற்கான உழைப்பும் , செலவிட்ட நேரத்தையும் நீங்கள் மதீப்பீர்களானால் , இதை பிரதியெடுத்து வேறு தளத்தில் பதியும் போது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் , யாரால் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் குறிப்பிடுவீர்கள் என்று நம்புகிறோம்.

'ழ'கரம்

தமிழ்த்தேசியமும் , இந்திய - இலங்கைக் கூட்டுச்சதியும் !


நேற்று மெனிக் பார்ம் முகாமில் நிகழ்ந்த ஒரு சம்பவம் , வேதனையை மேலும் கிளப்புகிறது. அருகிலிருக்கும் முகாமொன்றில் சுள்ளி பொருக்கப் போன ஏழைத் தமிழர்களை சுட்டிருக்கிறது. காயம் பட்டவர்களின் எண்ணிக்கையோ , இறந்தவர்களின் எண்ணிக்கையோ சரியாகத் தெரியாத அளவிற்கு அங்கே ஊடகங்களின் பிரசன்னம் இல்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் உதய நாணயக்காரா கூட்டத்தினர் கையெறி குண்டுகளை வீசியதாகச் சொல்லியிருக்கிறார். இதை இந்தச் செய்தியை நாம் உன்னித்துப் பார்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

கடந்த வாரம் யாழ்ப்பாண முகாமொன்றிற்கருகில் மூன்று இளைஞர்கள் இலங்கை இராணுவம் அமைத்திருந்த கண்ணீ வெடியில் சிக்கினார்கள். யுத்தம் நிறைவுற்ற சூழலில் உலக நாடுகள் பலவும் மீள் குடியேற்றத்தை வலியுறுத்துகின்ற சூழலில் தான் கையிலெடுத்திருக்கிற கண்ணி வெடி அகற்றுதல் என்ற வாதத்திற்கு வலுச் சேர்க்க நடந்த ஒரு சதி வேலையாகவே இதைக்கருதுவதற்கான வாய்ப்பிருக்கிறது. மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவமும் கூட அதன் தொடர்ச்சியாகவே இருக்கலாம்.

அல்லது தொடர்ச்சியாக மக்களை அடைத்துவைப்பதால் விரக்தியுற்ற மக்கள் வெளியேற முயற்சித்திருக்கலாம். அவர்களை எச்சரிக்கும் முகமாக இதுபோன்ற கடும் எதிர்ப்பினை இராணுவம் காட்டியிருக்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும் , போரினால் அவதியுற்று நிராயுதபாணிகளாய் இருக்கும் மக்களை நாயைச் சுடுவது போல சுடும் அதிகாரம் (உலக நாடுகள் கடும் நெருக்குதலை கொடுக்கின்ற சூழலில் , உலகநாடுகள் அனைத்தும் விழிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கையில் ) இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்குமானால் போர்க்கால சமயங்களில் அவர்கள் எவ்வளவு வெறித்தனத்துடன் நடந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறது.

ஆனால் உலக நாடுகளோ குற்றத்திற்கு முழுப் பொருப்பாளியான இராஜபக்சேவையே அவரது இராணுவத்தைப் பற்றி விசாரிக்கச்சொல்கிறது. அதற்கும் கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறார் அவர். மூன்றாம் தரப்பின் சுதந்திரமான விசாரணை ஒன்று மிக நிச்சயமாகத் தேவை என்பதையே போருக்குப்பின்னரான இலங்கை அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நிருபிக்கின்றன.

உலகநாடுகளின் நேரடிப்பார்வைக்கு முற்றுமுழுதாக தடை ஏற்படுத்துவது இந்தியாதான் என்பதை நிச்சயமாக தமிழர்கள் உணர்ந்துள்ளார்கள். அது மட்டுமின்றி , புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்லும் நாராயண்கள் இலங்கையும் , பாகிஸ்தானும் கொண்டுள்ள உறவு அச்சுறுத்தல் என்று சொல்லாதது ஏன்? அத்தோடு நிற்காமல் இராகுல் காந்தி உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்று "ரோ" செய்தி பரப்புகிறதே அது ஏன்?

இந்தியாவும் , இலங்கையும் சேர்ந்து தமிழ்த்தேசிய இறையாண்மையை ஒழிக்கப் பார்க்கின்றன என்பதே நேரடிப் பதில். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்கள் அறிவித்த சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே வெளிப்படையான ஒரு நிலைப்பாடு. மற்றபடி ஈழத்தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க உதவுவோம் என்றெல்லாம் இந்தியா சொல்வது சும்மா பேச்சளவிற்கு மட்டுமே.

தோற்றுப் போனாயே இனி உனக்கென்ன சுதந்திரம் ? சும்மா கிட....என்று உதறிவிடப் பார்க்கின்றன. அதன் மூலம் அவர்கள் ஒரு சேதியை தெளிவாக உலகுக்குச் சொல்கிறார்கள் , புலிகளைத் தீவிரவாதிகள் என்று சொன்னாலும் , அவர்கள்தான் தமிழர்களின் ஒரே குரலாக இருந்தார்கள் என்ற செய்திதான் அது.

புலியெதிர்ப்புக்குரல்களும் , சித்தாந்தம் பேசும் வறட்டு கொள்கைவாதிகளும் இனியாவது மக்களை திசைதிருப்புவதை விட்டுவிட்டு சும்மா இருப்பதே சிறந்தது. இவர்களால் இழந்தது கோடி....

மேற்குலகம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளத் துவங்கும் இவ்வேளை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பொன்னான வேளை.

இந்தியாவை நோக்கியும் , இலங்கையை கண்டித்தும் எதிர்ப்புக்கணைகளாக நமது குரல் விண்முட்டி உள்ளத்தில் தீ மூட்டவேண்டும்...அந்தத்தீ தான் தீயவர்களின் கூடாரமான தென்னிலங்கையைச் சுட்டெரிக்கும்...! அதன் மூலமே நாம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்தும் இயங்க வைத்திருக்க இயலும்.

உரக்கச் சொல்லுங்கள் உண்மையை....

இந்தியாவும் , இலங்கையுமே ஈழத்தமிழினத்தின் எதிரி.

அப்படியானால் தமிழகச் சகோதரர்கள் ?

"ழகரத்துக்காக" ரங்கன் - விருந்தினர் பக்கம்

Thursday, September 24, 2009

இன அழித்தலின் சாட்சியாக இருக்கிறான் இவன்.!

17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற
தமிழ்நாட்டு உறவுகளே!


vaநான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள் ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.


கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.
வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.


நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.


தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை.

பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள்.

சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்
.
அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன்.


நன்றி - ஈழத் தமிழ் ஊடகங்கள்.

Monday, September 21, 2009

ஆய்வு : உலகத் தமிழ்மாநாட்டை புறக்கணிப்போம் என்ற அறைகூவல் முறையா ?

நாம் முதன்முதலாக வெளியிட்டதொரு தலையங்கத்தில் ( உலகத்தமிழ் மாநாடு.) தோழர் டேவிட் என்பவர் இம்மாநாட்டை வாராது வந்த மாமணியாய் எண்ணி தமிழுணர்வு கொண்டவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

நாம் தமிழர் இயக்கத்தலைவர் தோழர். சீமானும் கூடவே இது உலகத்தமிழர்களை ஏமாற்ற நடக்கும் சதித்திட்டம் என்றே சொல்லியிருந்தார்.. மிகச்சமீபமாக , ஈழத்தமிழர்களிடையே மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாரிஸில் இருந்து வெளிவரும் ஈழ நாடு பத்திரிக்கை "உலகத் தமிழ் மாநாட்டை" புறக்கணிக்க அறைகூவல் விட்டிருந்தது. அதையொட்டிய விவாதங்கள் அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் குடிகொண்டிருப்பதாகவே அறிகிறோம்.

கடந்த தலையங்கத்தில் கூட , கலைஞர் அவர்கள் தமது இழந்து போன தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் முயற்சியாகவே இந்த உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கிறார் என்று உலகத் தமிழர்கள் சந்தேகம் கொள்வதாகவே நாம் சொல்லி வந்தோம்.. அந்த சந்தேகத்தின் பாலாக எழுந்த புறக்கணிப்பு அறைகூவல்கள் தான் இவை.

கலைஞர் தாம் இழந்துவிட்ட தமிழர்களின் நம்பிக்கையை மீளப்பெற்றாக வேண்டும் , அதன்பின்னர்தான் அனைவராலும் நடாத்தப்படுகின்ற வெற்றி மாநாடாக அமையும் என்பதே எம் உறுதிப்பாடு.

சரி , நம்பிக்கையை மீளப்பெற என்னதான் கலைஞர் செய்தாக வேண்டும்?

கொஞ்சம் எளிதான கேள்விதான். கலைஞர் செய்யவேண்டியது என்பதற்கான பதில் அவர் செய்யத் தவறியது என்ன என்ற ஆய்விலேயே இருக்கிறது.

அவர் என்ன செய்யத் தவறினார். ?

- முள்ளிவாய்க்காலில் மக்கள் ஆயிரக்கணக்கில் மடிந்த போது இவர் அண்ணா சமாதியில்  உண்ணாவிரதம் இருந்தார். இவரது உண்ணாவிரதத்தின் பின்னர் போர் நின்றுவிட்டதாக  தமிழக மக்களிடையே சொன்னார். அதன்பின்னர் போர் நிற்காமல் பிரபாகரனும் மற்ற தமிழ் மக்களும் மடிந்து போயினர். அதற்காக ,பொய்ப்பரப்புரைக்காக  அவர் தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது.

- வணங்கா மண் கப்பலில் இருந்து சென்ற பொருட்கள் இதுகாறும் இடம்பெயர் மக்களை சென்று சேரவில்லை என்ற உண்மை வெளிப்படையாக தெரிந்த போதும் , கடந்த இருவாரங்களுக்குமுன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் போய்ச்சேர்ந்துவிட்டது என்று சொன்னார். அதை எப்படி ஏற்றுக்கொள்வது ?

- வதைமுகாம்களில் வாடுகின்ற மக்கள் மூன்று லட்சம் பேர் இருக்கிற சூழலில் இலங்கையில் சுமூக சூழல் நிலவுவதாக தொடர்ந்து  பரப்புரை செய்வது.

சரி , அவர் என்ன செய்யலாம்...?

- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் . நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற மறப்போம் மன்னிப்போம் என்ற அண்ணாவின் கோட்பாட்டிற்கு இணங்க , பழசை மறந்துவிட்டு இனியாவது வதைமுகாம்களில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களை விடுவிக்கிற முயற்சியில் இறங்க வேண்டும்...டெல்லியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகபட்ச நெருக்கடியை தந்து சிறிலங்கா அரசை நெருக்கடிக்குள்ளாக்குவது.

- தமது  கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நடக்கும் ஈழநிலவரம் பற்றிய இருட்டடிப்பை நீக்குவது.

- வதைமுகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் , தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் அறப்போராட்டங்களுக்கு பின்னணியாக , பின்புலமாக இருக்க முயல்வது.

- தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குகின்ற இலங்கைக்கடற்படையினரின் அட்டூழியத்தை நிறுத்த உறுதியான நடவடிக்கை , கடிதம் - தந்தி - தொலைநகல் இவைகளைத் தாண்டிய நடவடிக்கை எடுக்க முயல்வது.


இன்று கலைஞரைப் புறக்கணிக்கச் சொல்லும் ஈழநாடு பத்திரிக்கையாகட்டும் , தோழர் சீமான் , நெடுமாறன் ஆகட்டும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கலகக்குரல்களை விட இராஜதந்திரக்குரல்களே இன்றைய நிலைமையை மாற்றும் சக்தி வாய்ந்தது என்று புரிந்து கொள்ளுதல் இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவையாகிறது.

இராஜதந்திர நெருக்குதலை தமிழர்கள் இலங்கைக்குத் தரப்போவதாய்ச் சொல்லிக்கொண்டு நமக்குள்ள மிகப்பெரிய ஆதார சக்தியையும் எதிரி என்ற வகையில் மாற்றிக்கொள்வது எவ்வகையிலும் சரியாகாது.

கடந்த பொதுத்தேர்தலிலும் கூட , ஜெயலலிதாவை முழு மூச்சாக ஆதரித்து கலைஞரை எதிரியாக்கிக்கொண்டீர்கள். தனி ஈழம் , தனி ஈழம் என்று மேடைக்கு மேடை முழங்கினார் ஜெயலலிதா. அந்தக்குரல் கூட ஏதோ ஒருவகையில் புலிகளின் அழிவிற்கும் , பாரிய மக்கள் அழிவிற்கும் ஒரு காரணம் ஆகியிருக்கிறது என்ற உண்மை யாராலும் மறுக்கவியலாதது. இன்று அவர் அதீத அமைதிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.  ஆனால் , எந்தவிதக்குற்றச்சாட்டுகளும் அவரை நோக்கி எழவில்லை.

ஆக, எதிர்ப்புக்குரல் என்பது நம்பிக்கைத்துரோகத்தின் இருபக்கங்களிலும் போய்ச்சேருவதே ஆரோக்கியமான இராஜதந்திரமாக இருக்க முடியும். அடிக்கடி மாறும் நிலைப்பாட்டினால் தமிழர்களின் , ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்றுமே வலுவான முன்னேற்றத்தினைத் தரப் போவதில்லை.

உலகத் தமிழ் மாநாட்டினை புறக்கணிப்பது சரியா என்ற கேள்விக்கான பதிலை ஆராய முற்பட்டோம்.

- உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது. மிக அத்தியாவசியமான ஒரு மாநாடு இது என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை.

- கணினிப் புரட்சிக்குப்பின்னரான மாநாடு என்பதால் , தமிழை இன்னொரு உச்சத்திற்குக் கொண்டு செல்வது என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.


ஆனால் , நடத்துகின்ற காலச்சூழலும் , தமிழினம் ஒரு பாரிய அழிவைச் சந்திக்கிற வேளையில் அதற்கென காத்திர நடவடிக்கைகள் ஏதும் எடுக்காதவர்களின் (வெற்றுப் பேச்சளவில் தமிழ் என்று சொல்லிப் பிழைக்கப் பாக்கிறவர்களின்) முயற்சிக்கு துணை போவது தவறு என்ற அளவிலும் , உங்கள் செயல்பாட்டில் எமக்குத் திருப்தி இல்லை என்ற உலகத்தமிழர்களின் எண்ணத்தை ஏற்பாட்டாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முன்னெடுக்கப்படும் புறக்கணிப்பிற்கான அறைகூவல் எவ்வகையிலும் தவறானதல்ல என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது.

ழகரம் - ஆய்வு ( 22 செப்டம்பர் 2009 ) .

Sunday, September 20, 2009

ழகரம்:உள்ளதைச் சொல்வோம்! : வாரிசு அரசியல்.

தமிழக அளவில் வாரிசு அரசியல் என்பது பாரிய விவாதப் பொருளாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் உயர்திரு.வைகோ அவர்கள் திமுகவை விட்டுப் பிரிந்ததற்கும் , தனிக்கட்சி தொடங்கியதற்கும் வாரிசு அரசியலே காரணம்.

மன்னராட்சியில் மன்னர் இறந்தபிறகு அவரது மகன் அரசனாக பதவியேற்பார். மக்களாட்சி , மக்களுக்காக நடத்தப் படுவது என்றாலும் மன்னராட்சியின் வாரிசுகளுக்கு பட்டம் சூடுவது போன்றே இங்கேயும் அதுதான் நடக்கிறது.

சரி வாரிசு அரசியலுக்கு என்னதான் அடிப்படை?. ஒருசில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை கட்சிக்குள் திணிப்பதில் ஈடுபாடு காட்டினாலும் , பெரும்பாலான அரசியல் வாரிசுகள் மக்களால் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே மக்கள் என்பவர்களில் மக்களின் பிரதிநிதிகளும் அடங்குவார்கள்.

சமீபத்திய உதாரணம் , ஆந்திர முதல்வர் வொய்.எஸ்.ஆர் அவர்களின் அகால மரணத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியைத் தான் முதல்வராக்க வேண்டும் என்று அடம் பிடித்த/ பிடிக்கும் ஆந்திர காங்கிரசார்......

திமுகவிலும் கூட கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களைத் தவிர ஸ்டாலின் மற்றும் அழகிரி அவர்கள் திணிக்கப்பட்டவர்கள் அல்லர்.

அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு தத்தமது சுயலாபங்களுக்காக சிலர் எம்.ஜி.ஆரின் மனைவியார் திருமதி ஜானகி அவர்களின் தலைமையிலும் , இன்னுஞ்சிலர் ஜெயலலிதா தலைமையிலும் கொடி பிடித்தனர். திறமை , தகுதி என்ற எந்தவித அடிப்படையையும் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் அவர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசுகளாகப் பார்க்கப்பட்டார்கள்.  ஒருவேளை திறமையின் அடிப்படையில் பார்த்தால் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே எவ்வகையிலும் தகுதியானவர்.

இந்திய அளவில் பார்த்தோமானால் , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக திரு.சீதாராம் கேசரி இருந்தபோது கட்சி சிதிலப்பட்டுப் போனதாகச் சொல்லி சோனியாவைத் தலைமையேற்கச் சொல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தியதால் விருப்பமேதுமின்றி காங்கிரசின் தலைமைப் பொறுப்பேற்றார் சோனியா காந்தி. ஒரு மாநிலத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தாலும் கூட வேறெந்த தலைவரும் பெறாத முக்கியத்துவத்தைப் பெற்று விடுகிறது.

மற்ற மாநிலங்களின் அளவில் பார்த்தால் , கேரளாவில் கருணாகரனின் புதல்வர் முரளிதரன் , கருநாடகாவில் தேவகவுடாவின் புதல்வர் குமாரசாமி , லட்சத்திவுகளில் சையத்தின் புதல்வர் , ஆந்திராவில் என்.டி.ஆரின் துணைவியார் சிவபார்வதி , சந்திரபாபு நாயுடு , மராட்டியத்தில் பால் தாக்கரேவின் புதல்வர் உத்தவ் தாக்கரே , ஒரிசாவில் பிஜு பட் நாயக்கின் புதல்வர் நவீன் பட்நாயக் ....இப்படி போய்க்கொண்டே இருக்கலாம்.

அடிப்படையில், ஒரு அரசியல் தலைவரின் வாரிசு இயல்பாகவே எல்லா மக்களிடத்தும் நன்றாகவே அறிமுகமாகிவிடுகிறார். ஒவ்வொரு மாவட்ட / மாநில அளவிலான தலைவர்களும் மாநிலத்தின் / தேசத்தின் முழுமையான மக்களுக்கும் அறிமுகமானவர்கள் அல்லர்.

முழு மாநிலத்திற்கும் அறிமுகமான  ஒருவர் மக்கள் மன்றத்தின் முன் நிற்கும்போது இயல்பாகவே சற்று எளிதாக மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார். அதனாலேயே அரசியல் கட்சிகள் வாரிசுகளை முன் நிறுத்துகிறார்கள்.

இன்னொன்று தலைமையின் கீழ் தமக்குள்ள விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள இரண்டாம் மட்டத்தலைமைகள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் வாரிசுகளை புகழ்ந்துரைப்பதும் , அவர்களிடம் தமது இருப்பைக் காட்டிக்கொள்ள செய்யும் அதீத விளம்பரமும் துதிபாடலும். அதற்கான சரியான உதாரணங்கள் அழகிரியும் , காங்கிரஸ் தலைவர் ஜி.கே . வாசனும். இருவருமே கீழ்மட்டத்தொண்டர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு தலைமைக்கு இழுத்து வரப்பட்டவர்கள்.

மேற்கண்ட இரண்டு காரணங்களைத் தவிர மூன்றாவது முக்கியக் காரணம் மக்களின் மனப்பாங்கு....

இங்கே நேற்றுவரை , துரை துரை என்று ஆங்கிலேயர்களைத் துதிபாடிய அனேக மக்கள் தங்களை ஆள்பவர்களையும் அந்த துரை ஸ்தானத்தில் வைத்தே பார்க்கிறார்கள்.....முடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்கிலிருந்து குடியாட்சிக்குட்பட்ட மக்களின் மனப்பாங்குக்கு இந்திய மக்கள் மாறவே இல்லை. அதனால் எப்படி மன்னரின் மகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வாரிசாக அங்கீகரிக்கப்படுகிறாரோ அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது.

சரி இந்திய அளவில் தான் இப்படி . உலக அளவில்?

உலக அளவிலும் கூட வாரிசு அரசியல் கணிசமாக இருந்தாலும் இந்திய அளவிற்கு இல்லை. அமெரிக்காவின் ஜூனியர் ஜார்ஜ் புஷ் , இந்தோனேசியாவின் மேகவதி சுகர்னோ , சிறிலங்காவின் சந்திரிகா குமாரதுங்க , பாகிஸ்தானின் பெனாசீர் பூட்டோ , பங்களாதேஷின் ஷேக் ஹஸினா  என்று நீள்கிறது பட்டியல்.

வாரிசு அரசியலானது நிலையான அரசுகளுக்கு ஒரளவு உதவினாலும் , திறமையான தலைவர்கள் நாட்டை ஆள்வதற்கும் , தகுதியுள்ளவர்கள் பொறுப்பிற்கு வருவதற்கும் ஒரு பெரும் தடைக்கல்லாகவே இருந்து வருகிறது.

என்றைக்கு  தனிமனித துதிப்பாட்டில் இருந்து விலகி , நேர்மையானவர்களையும் , தகுதியுள்ளவர்களையும் தங்களது வழிகாட்டிகளாக , தலைமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மக்கள் அடைகிறார்களோ அன்றே வாரிசு அரசியலிலிருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.

வாரிசு அரசியலில் இருந்து விடுபடுவதே நேர்மையான மக்களாட்சியாகும். அரசியலில் நேர்மையையும் , தன்னலமின்மையையும் , வெளிப்படையான நிர்வாகத்தையும் நாமே தொலைத்து  விட்டு யாராவது வந்து மீட்டுத்தருவார்களா என்று காத்திருக்கிறோம்...

நம்மால் மட்டுமே நாம் தொலைத்ததை மீளப்பெற முடியும் என்ற அடிப்படையைக் கூட அறிந்து கொள்ளாமல்........! ஆக , நம்மைச் சுயபரிசோதனை செய்து கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.!


படைப்பு.-

"ழ"கரம் - "உள்ளதைச் சொல்வோம்" குழு.

Saturday, September 19, 2009

ழகரம் - தலையங்கம்(19.09.09) - உலகத் தமிழ் மாநாடு

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் அடுத்த ஆண்டு நடத்துவதாக பெருமதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

முதன்முதலில் மொழியால் இணைந்தவர்கள் அம்மொழிக்காக விழா எடுத்த பெருமை தமிழ் மொழியையே சாரும்.அத்தகைய மொழிக்காக ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த முயல்பவர்களை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டவே முயல்வார்கள்.

அத்தகைய நன்முயற்சியில் அரசியலைக் கலப்பதில் யாருக்கும் விருப்பமிருக்கவியலாது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தாய்த்தமிழகத்திலும் , அதற்கடுத்தாற்போல் மலேசியாவிலும் , ஈழத்திலும் மற்றெல்லா நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இன்றைய அளவில் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை , ஈழ வதை முகாம்களில் வாடுகின்ற ஒரு சூழலே….

உலகம் முழுமையும் ( தத்தமது சுயநல நோக்களுக்காக என்றாலும் ) அப்பிரச்சினையை தீவிரமாக அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழலில் , உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கும் கலைஞர் அவர்களின் செயல்பாடு என்ன என்பதை நடுநிலைத் தமிழர்கள் நன்றாகவே உணர்கிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் கலைஞரின் செயல்பாடு பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்படியொரு நிலையில் இன்றைக்கு உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய நடுவண் அரசினை வலியுறுத்தி முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்கவும் , அதன் பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினையும் பெற்றுத் தர கலைஞர் முயற்சிப்பாரானால் உலகத் தமிழ் மாநாட்டை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றி மாநாடாக்கி அந்த வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்பார்கள்.


அப்போதுதான் மாநாட்டின் நோக்கம் முழுமையாக வெற்றி பெரும். அதைவிடுத்து இந்த மாநாட்டையும் ஒரு அரசியல் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமோ என்ற இயல்பான சந்தேகம் தமிழர்களிடையே மிகுந்து கிடக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கலைஞரின் கடமை…

காரணம் உலகத்தமிழ் மாநாடு திமுகவின் மாநாடு அல்ல.
தமிழர்களின் மாநாடு…

அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை…! அக்கடமையை சரிவர தமிழர்கள் செய்ய கலைஞர் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீளப்பெறுதல் மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கு அடிப்படையானது.

Wednesday, September 09, 2009

"ழ"கரம் - வேராய் நம் தமிழ்.விழுதுகளாய் நாம்!

முதல் வணக்கம்….!

தமிழால் தமிழராய் இணைவோம்!

முதன் முதலில் இவ்வலையுலகில் தனது காலடியைப் பதித்து உங்கள் கணினித்திரையில் தவழும் இந்த ‘ழ’கரம் வலையிதழ் சில சமுதாய நோக்கம் கொண்ட இளைஞர்களின் தவம் என்றால் அது மிகையன்று.

சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தாங்கவொணா துன்பங்கள் நிறைந்து கிடக்கின்றன. சமுதாயத்தை திருத்த வேண்டிய கடமையும் , பொருப்பும் உள்ள தலைமைத்துவங்களோ ஏனோ அப்பொருப்பை உணர்ந்தவர்களாயில்லை.

அத்தகைய தலைமைத்துவங்களை இடித்துரைத்து திருத்தும் வண்ணம் மக்களாட்சியின் நான்காம் தூண்களான பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இன்னபல ஊடகங்களும் இருந்திருக்க வேண்டும். அப்படியொரு கனவுடன் தான் இன்றைக்கு ‘ழ’கரம் உங்கள் கண்முன் காட்சியளிக்கிறது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ழகரம் தழுவிச்செல்வாள். நீங்களும், நாங்களும் , இணைந்துதான் இந்த வலையிதழை , மின்னிதழை நடத்தப் போகிறோம்.

‘ழ’ என்பது தமிழின் சிறப்பு. தமிழின் சிறப்பே தமிழனின் சிறப்பு. ஆகவேதான் இந்த வலைப்பூவின் பெயர் ‘ழ’கரமாயிற்று. இது இப்போதைக்கு வலைப்பூ.....ஆனாலும் கூடிய விரைவில் இதை மின்னிதழாகவும் , அச்சிதழாகவும் வெளிப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. அதுவரை அவ்வப்போது சில பதிவுகளுடன் உங்களோடு தொடர்பிலிருப்பாள் ழகரம்.!