சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையில் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்த் தரப்பானது துவண்டுபோக வேண்டியதில்லை எனக் கூறியிருந்ததுடன் எங்களது இறைமை தொடர்பான விடயத்தில் நாம் ஒரு தேசம்,.....
....எமக்கென ஒரு தனித்துவம் உள்ளது, நாம் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்ற விடயத்தை முன்னிறுத்தியிருந்தோம். நாம் இவற்றின் அடிப்படையிலேயே தீர்வுக்குப் போகவேண்டியவர்கள் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.
இக் கட்டுரையில் அதிகாரப்பகிர்வு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை எட்டிவிடலாம் என சிலர் நம்பிக்கை வெளியிட்டு வருவதனால் அதிகாரப் பகிர்வானது எமது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றி பார்வையைச் செலுத்துகின்றோம்.
சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் போசி தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியில் இருந்து சமஷ்டி ஆட்சியை நோக்கிய ஓர் தீர்வினை அடையலாம் என்ற ஓர் நம்பிக்கை ஒருசிலரிடம் உள்ளதாகத் தெரிகின்றது.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறானதோர் தீர்வினை அடையத்தக்கதாக அரசியலமைப்பினை மாற்றியமைக்க முடியுமா எனவும் அதற்கான மனநிலை சிங்கள பௌத்தர்களிடம் உள்ளதா எனவும் கேள்வியெழுகின்றது.
தீர்வு பற்றி நாம் கவனம் செலுத்துகையில் எமது முரண்பாட்டுக்கு உரிய தரப்பான சிங்களத் தரப்புக்களுடன் பேசியே ஓர் முடிவுக்கு வரமுடியும். இப்படியான ஓர் சூழ்நிலையில் தான் சிங்களத் தரப்பின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ்த் தரப்பிற்கு உள்ளது.
முரண்பாட்டில் மற்றொரு தரப்பாக உள்ள சிங்களத் தரப்பினை நாம் நன்கு புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் நாம் எமது நகர்வுகளை உரியவகையில் மேற்கொள்ள முடியும்.
சிங்களத் தரப்புக்களை நாம் விளங்கிக் கொள்ளும் அதேவேளை எம்மவர்களிடத்தில் உள்ள சில கருத்துக்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இன்றைக்கும் கூட தமிழ் மக்களில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் சிங்களத் தரப்புக்களுடன் நியாயம் பேசி அவர்களுக்கு எமது பிரச்சினைகளைத் தெளிவு படுத்த முடியும் என முனைகின்றனர்.
இதன்வாயிலாக சிங்கள பௌத்த அரசாக இருக்கின்ற இலங்கை அரசை மாற்றியமைத்து ஓர் தீர்வுக்கு வரமுடியும் எனவும் நம்புகின்றனர்.
இப்படியாக நிலைமைகள் தொடர்கையில் சிங்கள தேசம் எது என்பதை விளங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அல்லது பாதையை வகுத்துக்கொள்வது பற்றி வரலாற்று ரீதியான விடயங்களை முன்னிறுத்தி நாம் இக் கட்டுரையில் அவதானத்தினைச் செலுத்த வேண்டியுள்ளது.
சோல்பரி அரசியலமைப்பு
இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய போது தீவில் இருக்கின்ற பல்வேறு இனக்குழுக்களிடத்திலும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவகையில் ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் தீவில் இடமளிக்கும் வகையில் இலங்கை அரசு அமைய வேண்டும் என்ற நோக்குடன் சோல்பரி யாப்பானது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இனங்களிடையே பன்மைவாதம் (pluralism) ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவும் சோல்பரி அரசியலமைப்பில் 29 (2) சரத்தானது ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது இனங்களிடையே இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு ஆணிவேர் போன்றாக அமையும் என்றும் கூறப்பட்டது.
இது நாட்டில் உள்ள ஒரு மக்கள் குழுவுக்கு மேம்பட்ட உரித்துக்கள் வழங்கப்படுவதை தடைசெய்கிறது. ஒரு இனம் சமயம் மொழி சாதி பாதிக்கப்படாத வகையில் சட்டங்கள் அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றது.
இதனை மேலுமொரு வகையில் கூறுவதாயின் பல தேசங்கள் கொண்ட இலங்கைத் தீவானது தேசிய இனங்களிடையே ஒரு புரிந்துணர்வை கொண்ட நாடாக உருவாக்குவதற்கு இந்த 29(2) சரத்து மிக முக்கியமானதாகுமெனவும் இனங்கிடையே சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கானதெனவும் நம்பினார்கள்.
இந்த சரத்தானது இனங்களுக்கிடையே சமத்துவத்தினை பேணும் ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் வரையிலேயே ஒரு நாட்டிற்குள் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழமுடியும் எனக் கருதப்பட்டது.
இவ்வாறாக முக்கியத்துவமுடைய இந்தச் சரத்து மீறப்படுமானால் இலங்கை அரசின் அத்திபாரமே சிதறத்தக்கதாக அமைந்திருந்த போதும் இச் சரத்தினை மீறும் வகையில் சிங்களத் தரப்புக்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு.
அரசியலமைப்பில் இவ் ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாகவே மீறல்கள் பலசந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில் 1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பிரஜாவுரிமைச் சட்டம் அதனைத் தொடர்ந்து மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையை பறித்த நிகழ்வு, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கருமமொழிச்சட்டம் எனக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் போன்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால் உண்மையில் அரசை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கையினை சிங்களத்தரப்பு ஆரம்பித்துள்ளது என்பதையேயாகும்.
இந்த இடத்தில் சிங்களத் தரப்புக்களிடத்தில் சிங்கள பௌத்த மனநிலை என்பது காணப்படும் வரை சோல்பரி யாப்பில் கூறப்பட்ட 29(2) போன்ற சமத்துவத்திற்கான எவ்வாறான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லை என்பதனையும் தமிழர் தரப்பு படிப்பினை ரீதியாக கண்டுகொண்டுவிட்டது. கட்டுரையில் மேற் சொன்ன உதாரணங்கள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.
முதலாம் குடியரசு அரசியலமைப்பு-1972
அடுத்து 1972 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முதலாவது குடியரசு யாப்பின் நோக்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறப்பட்டபோதும் அது இலங்கை அரசினை சிங்கள பௌத்த மயப்படுத்துவதனை முழுமைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
இந்தவகையில் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்பது உத்தியோகபூர்வமாகவே சேர்க்கப்பட்டுள்ளது. ஓற்றையாட்சி என்று குறிப்பிட்டதன் மூலம் அரசின் ஆட்சி அதிகாரமானது ஒருமையத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறாக ஒருமையத்தினுள் ஆட்சி அதிகாரம் அமைகையில் பல்லினங்கள் வாழ்கின்ற தேர்தல் முறை ஜனநாயகத்தில் 75 சதவீதமாக வாழ்கின்ற சிங்களவர்கள் தான் முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள்.
அதுவே எமது விடயத்தில் நடந்தது. இலங்கை அரசு ஒரு சிங்கள அரசாகச் செயற்படுவதற்கான அத்திபாரமே மீண்டும் மீண்டும் சகலவகையிலும் போடப்பட்டது என்பதனை நாம் கண்டுகொள்ள முடிகின்றது.
இதேவேளை சோல்பரி அரசியலமைப்பில் காணப்பட்ட 29(2) ஆவது சரத்து முதலாவது குடியரசு யாப்பில் இருந்து அகற்றப்பட்ட போதும் அதற்கு ஈடான எந்தவொரு சரத்தும் மீண்டும் அவ்யாப்பில் உள்ளடக்கப்பட இல்லை என்பது கூட அவதானிக்கத்தக்கது.
மேலதிகமாக பௌத்த சமயத்திற்கு நடைமுறையிலும் யாப்பு ரீதியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சிங்களம் அரச கரும மொழி என்பதை அரசியலமைப்பில் கொண்டுவந்தனர். இது சாதாரண சட்டமாக இருந்த ஓர் விடயத்திற்கு நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் வழங்கப்பட்ட நிலைமையாகும்.
இவ்வாறாக 1972 ஆம் ஆண்டு யாப்பு வழியாக இலங்கைத் தீவு முழுவதும் சிங்களத் தேசமாக மாற்றப்பட்டு அரசானது சிங்கள பௌத்த அரசாக மாற்றியமைக்கப்பட்டது. அடிப்படையில் சிங்கள பௌத்த மக்கள் மட்டுமே சிறிலங்கா அரசை ஆள்பவர்கள் என்ற நிலைமையும் 1972 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக உருவாக்கப்பட்டது.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு-1978
சிங்கள தேசத்தால் கொண்டு வரப்பட்ட 1978 ஆம் ஆண்டு யாப்பின் வாயிலாகவும் தமிழ்தரப்புக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சந்தர்ப்பமளிக்கப்படவில்லை. அன்றைய காலத்திற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பலமான தலைமைத்துவத்திற்காக நிறைவேற்று அதிகாரத்தினை ஏற்படுத்துகின்றோம் எனக்கூறினர்.
இக்கூற்றை சாட்டாகக் கூறிக்கொண்டு முதலாவது குடியரசு யாப்பினைப் போன்றே இவ் இரண்டாம் குடியரசு யாப்பிலும் சிங்கள பௌத்த அரசிற்கான மாற்றங்களையே நிரந்தரமாகப் புகுத்தினர்.
இவ்வாறாக நடைபெற்ற விடயங்களை ஒற்றை ஆட்சியினைப் பிரகடனப்படுத்துவதற்கானது என்று மட்டும் நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை வழங்குவதையும் நோக்காக் கொண்டது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் யாப்பில் இவ்விடயங்கள் தொடர்பான மாற்றங்கள் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊடாகவும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவுமே கொண்டுவரப்படமுடியும் எனக்கூறப்பட்டு பௌத்த சிங்களக் கட்டமைப்பு நிரந்தரமாக்கப்பட்டதும் பாதுகாக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவேண்டிய உண்மைகளாகும்.
மேலும் அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தத்தின் வாயிலாக இந்த நிலைமைகளை எதிர்த்து மாற்றுத்திட்டங்களை முன்வைக்கத்தக்க சூழலும் இல்லாமல் செய்யப்பட்டது.
இவ்வாறாக பிரித்தானியர் ஆட்சிக்குப் பின்பான கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடந்தேறிய விடயங்கள்; சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையே தீவிரப்படுத்தி முன்னெடுத்துவருகின்றனர் என்பதையே காட்டுகின்றது.
இலங்கை அரசினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றதாயின் அது மேலும் மேலும் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டமாகவேயுள்ளது. இதனை நாம் கடந்த கால அனுபவங்கள் ஊடு தெளிவாகக் கண்டுள்ளோம்.
இப்படியானதோர் அபாயமிக்க சூழலில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்க வகையில் இலங்கை அரசு தன்னைத்தானே மாற்றியமைக்கும் என யாரும் நினைக்கின்றார்கள் ஆயின் அது நடைமுறையில் இலங்கையில் இருக்கின்ற பௌத்த சிங்கள மயமாக்கல் என்ற போக்கிற்கு நேர் எதிரான பாதையாகவே அமைகின்றது.
இந்த இடத்தில் எழுப்பப்படும் கேள்வி யாதெனில் இலங்கை அரசு பயணிக்கின்ற பாதைக்கு நேர் எதிரான விடயமாகவுள்ள அதிகாரப் பகிர்வுக்கு சாத்தியம் உள்ளதா என்பதாகும். இந்தக் கேள்விக்கான பதிலை சிங்கள தேசம் கடந்த அண்மைக்காலமாக நடந்துகொண்ட நடத்தையினை வைத்து நாம் ஆராய்ந்து பார்க்கத்தக்கதாகவுள்ளது.
அதாவது புலிகள் இருக்கும் வரையில் அவர்களுடன் சமரசத்திற்கு வந்தால் சிங்கள பௌத்த தேசம் என்ற இலக்கினை இழக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக சமரசம் என்பதைத் தவிர்த்து போரை அரசு நடத்தியது.
இவ்வாறாக சிங்கள பௌத்தம் என்ற பெயரை நிலை நாட்டுவதற்கான போரை அரசு நடத்தி இனப்படுகொலையாளர்கள் போர்க்குற்றவாளிகள் என்பதற்கு முகங்கொடுத்துள்ளது. உலக அரங்கில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் மிக வெறுக்கத்தக்க கீழ் நிலைச் செயலாகப் பார்க்கப்படுகின்ற போது சிங்கள பௌத்தம் என்பதை நிலைநிறுத்துவதற்காக எதற்கும் முகங்கொடுக்கத்தக்க நிலையில் தான் இலங்கை அரசு உள்ளது.
இதிலிருந்து எவ்வளவு தூரம் சிங்கள பௌத்தம் என்கின்ற கொள்கையில் ஆட்சியாளர் உறுதியாக உள்ளனர் என்பது எமக்குத் தெளிவாகிறது.
இப்படியான அவதானிப்புக்களிலும் அனுபவங்களிலும் தமிழர் தரப்பு நின்றுகொண்டு யதார்த்தத்தில் இலங்கை அரசானது தானாகவே தன்னை மாற்றியமைத்து ஓர் அதிகாரப் பகிர்வினை வழங்கும் என்று கருதினால் பகல் கனவாகவே அமையும்.
இவ்வாறாக நினைப்பவர்கள் அதனை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற ஓர் விடயமாக மட்டும் பார்க்கமுடியாது. மாறாக அது தமிழினத்தையே மிக மோசமாக ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தினை அணுகுகின்ற போது அதிகாரப்பகிர்வு என்ற அரசியல் பாதை நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.
இவ்விடத்தில் அதிகாரப்பகிர்வு பற்றி அதிக கரிசனை செலுத்தி பாடுபட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் கூட 1972 ஆம் ஆண்டிலேயே அதிகாரப் பகிர்வு வாயிலாக இனநெருக்கடிக்குத் தீர்வு பெறுவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து செயலாற்றியமை நோக்கத்தக்கது.
நன்றி : உயர்வு.காம் , தமிழ்வின் மற்றும் உயர்திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.