Sunday, October 25, 2009

யாழ்ப்பாணத்தில் கலைஞர் கொடும்பாவி எரிக்கும் நிலை வரலாம்!- வலம்புரி நாளிதழ்!

இலங்கைக்கு வருகை தந்த தமிழக நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

எனினும் இலங்கைக்கு விஜயம் செய்த தமிழகக் குழுவில் இடம்பெற்றிருந்த தொல்.திருமாவளவன் பிரதமருடனான சந்திப்பில் இடம்பெற்றிருக்கவில்லை.
பிரதமருடனான சந்திப்பில் திருமாவளவனை வெட்டிவிட்டார் கலைஞர் கருணாநிதி. ஆக தமிழக நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தமை,  தடுப்பு முகாம்களில் உள்ள மக்களைச் சென்று பார்வையிட்டமை போன்றவற்றால் ஏதேனும் நடந்ததோ இல்லையோ தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகக் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதால் எதனை அடையக் கலைஞர் முயன்றாரோ அது நடைபெறவில்லை. ஈழத்தமிழர் விடையத்தில் அண்மைக்காலமாக கலைஞரின் நட்டுவாங்கம் சுருதிமாறி நடனத்தைக் குழப்புகின்றது.

உண்ணாவிரதம் இருந்ததில் தொட்ட நாசம் இன்னமும் முடியவில்லை. ஈழத்தமிழர் தொடர்பில் அவர் சுருதி பிழைப்பதற்கான காரணம் எதுவெனில் யாரோ செய்ய கலைஞர் உரிமை கோர முற்படுவதுதான் எனலாம்.

தமிழகக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய கலைஞர் அதனுடாக ஈழத் தமிழருக்கு உதவ இம்மியும் நினைத்தாரில்லை. மாறாக முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் பரிதாப நிலைகண்டு மேற்குலகமும் ஐ.நா சபையும் கலங்கிப் போயுள்ளது.

உலகம் முழுவதும் அந்த நாடுகள் பிரசாரம் செய்கின்றன. இப்பிரசாரம் உச்சமடையும் தறுவாயில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகும்.

அவ்வாறு நடவடிக்கை எடுப்பது இருவேறு தாக்கத்தை இந்தியாவிற்கு தோற்றுவிக்கும். அதில் ஒன்று ஈழத் தமிழர்களின் இந்நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். எனவே குற்றக் கூண்டில் ஆளும் இந்திய மத்திய அரசை ஏற்றவேண்டி வரும்.

இதனால் இந்திய மத்திய அரசுக்கு துணைபோன தமிழக முதல்வர் கலைஞரின் தமிழ் என் மூச்சு என்ற போலிப் பேச்சும் உடைபட்டுப் போகும். அடுத்து ஈழத் தமிழரின் அவலத்தைப் போக்க மேற்குலகம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அண்டை நாட்டின் மீதான தன் செல்வாக்கு சிதைவடையும் என்பது இந்திய நிலைப்பாடு.

எனவே முதல்வர் கருணாநிதி ஊடாகத் தமிழரின் வாயால் தமிழருக்கு எத்துன்பமும் இல்லை எனறு கூறவைத்தால் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு எட்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கலைஞர் நிறைவேற்ற முற்பட்டார்.

ஆனால் தொடர்ந்தும் பேய்க்கூத்தாடினால் அவரின் கொடும்பாவி யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்டதென்ற செய்தியை அவர் கேட்க,  அதுவே அவரின் ஆயுளுக்கு வினையாக மாறும் நிலையும் உருவாகலாம்.



இப்போதாவது உலகத்தமிழர்கள் கலைஞரின் நாடகத்தினையொட்டி எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதை கலைஞர் புரிந்து கொண்டு செயலாற்றுவாரானால் நல்லது. இல்லாவிடில் உலகத் தமிழர்கள் முதலில் கலைஞருக்கு எதிராக கிளர்ந்தெழுவதை தவிர்க்கவியலாது....அத்தகைய கிளர்ச்சிக்குக் காரணமும் அவரே என்பதை யாரும் மறுக்கவியலாது. !


1 comment:

Anonymous said...

இப்போதாவது உலகத்தமிழர்கள் கலைஞரின் நாடகத்தினையொட்டி எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதை கலைஞர் புரிந்து கொண்டு செயலாற்றுவாரானால் நல்லது. இல்லாவிடில் உலகத் தமிழர்கள் முதலில் கலைஞருக்கு எதிராக கிளர்ந்தெழுவதை தவிர்க்கவியலாது....அத்தகைய கிளர்ச்சிக்குக் காரணமும் அவரே என்பதை யாரும் மறுக்கவியலாது. !