Wednesday, February 23, 2011

சொத்துக்குவிப்பு வழக்கில் தப்பிக்க அதிமுக நீதிபதியிடம் பேரம்?

மக்கள் திமுக  ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் , இன்னபல வலையுலகப் புரட்சியாளர்களும் , பத்திரிக்கைகளும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்...

அவர்களுக்கெல்லாம் "டான்சி" நிலம் பற்றியோ இல்லை பிற ஊழல்களைப்  பற்றியோ நாம் சொல்லி அப்பழுக்கற்ற  புரட்சித்தலைவியை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல..

அத்தகைய ஊழல்களிலிருந்து வெளியே வர  அம்மாவின்  தொண்டர் திரு.மைத்ரேயன் அவர்கள் ஒருவரிடம் அவர் தான் நீதிபதி  என்று நினைத்து பேரம் பேசியிருக்கிறாராம்....அந்தப் போலி நீதிபதியை  பிடித்துவிட்டார்களாம்...இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.....


மதுரை: பெங்களூருவில் நடக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மைத்ரேயன் எம்.பி.,யிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் (52) மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த இவர், மேலூர் கோர்ட்டில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றுகிறார். கடந்த 2006ல், எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். இவரை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜேசுஜெயபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்ட போது, வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், கார் "சைரன்' இருந்தது. அவரை தீவிரமாக விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், கமிஷனர் பாரி உத்தரவிட்டனர்.

எம்.பி.,யிடம் பேச்சுவார்த்தை: கடந்த ஜனவரியில், அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, "நான் நீதிபதி தினகரன் பேசுகிறேன். ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருகிறேன்' என முத்து விஜயகுமார் பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து 10 நாட்களில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.நன்றி : தினமலர்

அவர் பேசியதாலேயே ஜெயலலிதா புழக்கடை  வழியாக வெளியே வர முயற்சிக்கிறார் என்று  நாம் சொல்லவில்லை...ஆனால், அத்தகைய பேர்வழியிடம் தொடர்ந்து நான்கு முறை திரு.மைத்ரேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ( தெரிந்து இவ்வளவு...தெரியாதது???) என்றால் அதுபோன்ற முயற்சிகளில் அம்மாவின் ஆதரவின்றி எப்படி முடியும் என்பதே நமது கேள்வி!!!!

சிக்கிக்கொண்டது போலி நீதிபதி மட்டும்தானா?

Monday, February 21, 2011

உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்....!

ரொம்ப நாளாவே மனச அரிச்சிகிட்டுக் கீற விஷயமுங்கோ , அதுனால கேட்டுப்புடலாம்னு இருக்கேன்.!

ஸ்பெக்டரமை  சி.பி.ஐ. ஆராய்ஞ்சதை விட அதிகமா ஆராய்ஞ்சி கிழித்திருக்கும் உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்!!

அடிப்படையான கேள்விகள் என்பதால் ஒதுக்கிவிடாமல் என்னைப் போன்ற பாமரனுக்கு புரியும் படி விளக்கிச் ( ஸபீனா பவுடர் போட்டாலும் ஓக்கே...விம் பார் போட்டாலும் ஓக்கே.!!!) சொன்னால் நலம்!

2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?

நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது?  இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?

ஜி.எஸ்.எம் ந்னா இன்னா? சி.டி.எம்.ஏன்னா இன்னா? அதுக்கும் 2ஜிக்கும் தொடர்ப்பிருக்கா?

இப்ப 3ஜின்னு ஒரு டெக்னாலஜி வந்திருக்கே , இத வச்சி இன்னா பண்ணலாம்.....? 

பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா...அதுமூலமா வருசா வருசம் வந்த லட்சக்கணக்கான கோடி ரூவா வருமானத்தை இந்தியா கவுருமெண்டு எந்த பேங்க்க்குல போட்டிச்சி? அதுக்கெல்லாம் எங்க கணக்கு? ( நன்றி , பட்டாபட்டியோட பதிவுல வந்த பின்னூட்டம்!)

ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா ,   பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?


கடேசியா ஒரு கேள்வி......"ராசாவை" ஒரு கருவியா உபயோகப்படுத்தினாங்கன்னே வச்சிக்கிடலாம்....அவரை உங்களால் தண்டிக்க முடியும்? ஆனா அதுமூலமா பலனடைஞ்ச கார்ப்பரேட் கனவான்களை என்ன செய்யலாம்? ஏன்னா அவுங்களுக்குத்தான் இதில் பெரும்பங்கு.....ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் "ராசா"வை மட்டுமே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பது உண்மையிலேயே சமூகத்தின் மீதான அக்கறையா இல்லை உங்கள் காழ்ப்புணர்வா?

பதில்  சொல்ல் விருப்பமிருந்தா நீங்க சொல்லலாம்....இங்கேயே பின்னூட்டத்திலும் சொல்லலாம்..இல்லை தனிப்பதிவிட்டும் சொல்லலாம்....உங்களை பதிலையொட்டியே நாம் மீண்டும் பேசமுடியும்!!

பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!!

ஹிஹிஹி....

ஆவலுடன்

உங்கள் அன்புத்தம்பி...

Friday, February 18, 2011

அரசியற்களம்! முந்தும் திமுக!

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

நன்று...தமிழகம் மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறது.....தேர்தல் சூழலில் பெரிதான  விவாதக்களமோ இல்லை விடயங்களே இல்லாமல் வித்தியாசமான தேர்தலாகவே இருக்கிறது...

திமுக, காங்கிரஸ் , பாமக , விடுதலைச்சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஓரணியாக நிற்கின்றன.

இந்த அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி இன்னபல சின்னச்சின்ன கட்சிகள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டு.....

அதிமுக அணி இன்றைய சூழலில் குழப்பத்தில் தத்தளிப்பதாகவே தெரிகிறது....பொதுவாக அந்த அணி இப்படி அமையலாம்...

அதிமுக , தேமுதிக , மதிமுக,மூ.மு.க., ம.ம.க,நா.ம.கட்சி,இந்திய குடியரசுக்கட்சி  ,புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள்...!!

திமுகவிற்கு தனது இலவசத்திட்டங்களும் , அங்கிங்கெனாதபடி எங்கும் சீர்திருத்தப்பட்ட கிராமச்சாலைகளும் ,விவசாயக்கடன் தள்ளுபடியும் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.........

காங்கிரஸுக்கோ ராகுலின் வருகையால் உத்வேகம் பெற்றிருக்கும் இளைஞர் காங்கிரஸூம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.....

பாமகவோ பெண்ணாகரம் தேர்தலில் இரண்டாம் இடம்   பெற்ற நம்பிக்கையில் திமுகவுடன் இணைந்து களம் காண்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி வடமாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுக கணிசமான மாவட்டத்தலைவர்களை திமுகவிடம் இழந்திருந்தாலும் இன்னமும் கூட தனித்துவத்தை  இழந்துவிடவில்லை......இரட்டை இலைக்கான குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியுடன் ஆட்சிக்கெதிரான வாக்குக்களும் நிச்சயமாக கூடுதல் பலமே.

வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் கேப்டன்....ஒருவேளை விஜயகாந்த் அதிமுக அணியில் சேருவாரானால் அவருக்கு தற்போது கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறிப்போகும் என்பது என் கணிப்பு.....எப்போதுமே இரு கட்சிகளையும் விமர்சித்து "எனக்கு ஒரு வாய்ப்புக்க்கொடுங்க" என்று ஓட்டுக்கேட்கும் விஜயகாந்த் இப்போது இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தால் மக்கள் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்வார்கள் என்பது  ஆய்வுக்குரியது.!


இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் களம் காணும் கட்சி வைகோவின் மதிமுக.....அதிகம் பேசவேண்டிய  நிலையில் அவரும் இல்லை...அவரது கட்சியும்  இல்லை...


எப்போதுமே  அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது  என்   வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

ஆக , தமிழகத்தை மூன்று மண்டலமாகப் பிரித்தால்  ஒருவேளை முடிவு எப்படி இருக்கலாம் என்பதற்கான என் கணிப்பு...


சென்னை + வடமாவட்டங்கள்.......

பாமக, வி.சி. பலத்துடன் பாரம்பரிய திமுக வாக்குகளுடன் இலவசத்திட்டங்களும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கப்போகிறது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும்  திமுகவிற்கே செல்லும்!

தென்மாவட்டங்கள்...

என்னதான் மூவேந்தர் முன்னேற்றக்கழகமும் , கார்த்திக்கும்,  புதிய  தமிழகமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் , தலித்களும் முக்குலத்தோரும் ஒரணிக்கு  வாக்களிப்பதில் சிரமம் இருக்கிறது....ஆனாலும் , அழகிரியின் சமிபத்திய அதிருப்தியும், சரத்குமார்  இணைந்தால் கொண்டுவரும் நாடார் ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பிலிருப்பதாக கணிக்க வைக்கிறது.....

ஒருவேளை அழகிரி பார்முலா முழுவீச்சில் வேலை செய்தால் சரிசமமான போட்டி இருக்கலாம்.......கிராமங்கள் நிறைந்த இந்த பெல்ட்டில் ஸ்பெக்டரமோ ஊழலோ தேர்தல் விடயமாக இருக்கப்போவதில்லை என்பதுவும்  ஒரு கூடுதல்  பாயிண்ட்.

கொங்குமண்டலம்...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவான இந்த மண்டலம் இம்முறை எப்படி இருக்கப்போகிறது...

அதற்குமுன் செல்லுமுன் கடந்த தேர்தலைவிட மாறுபட்ட காட்சியொன்று இங்கே இருக்கிறது...இப்போது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியொன்று வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது....ஆரம்பித்த ஒரே வருடத்தில் அனேக பாராளுமனறத்தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளை வாங்கிக்குவித்த கட்சியான இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமுகமாகவும் , பொருளாதார வளம் மிக்கவர்களாகவும் கருதப்படும் கவுண்டர்களின் கடசி எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்பதையிட்டு முடிவுகள் மாற வாய்ப்புண்டு...

ஒருவேளை கொமுக ,  திமுக கூட்டணியில் இடம்பெறுமானால் சரிசமமான போட்டியே  நிலவும்.....தனித்து நிற்குமானால் அது ஆட்சிக்கெதிரான வாக்குக்களைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கே  சாதகமாக இருக்கும்.......கொங்குமண்டலத்தின் அனேக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் என்பதும் அவர்களின் பாலான  அதிருப்தியும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ் ஆக அமையும்...கொங்கு மண்டலத்தின் தலித்களின் பெருமபாலானவர்கள் அருந்ததியர் என்பதுவும் அனேகர் அதிமுக ஆதரவாளர்கள் என்பதுவும் தெரிந்த ஒன்றே. அவர்களுக்கான உள் ஒதுக்கீடு ம், செம்மொழி மாநாடும் திமுகவிற்கு கணிசமாக வாக்குக்களை பெற்றுத்தரும் என்பதுவும் என் கணிப்பு!

ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிய பெரிதான அரசியல் அறிவு எனக்கு இல்லை.

வடமாவட்டங்களில் திமுக முந்துவதும், தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில்  சரிசமமான போட்டியும் தற்சமய நிலவரமே...

கூட்டணிக்கணக்குகள் மாறும்போது கணிப்பும் மாறும்..அணிகள் இறுதியாகும்போது இன்னொருமுறை அலசுவோம்...