Friday, April 16, 2010

தமிழனுக்கு இதைவிட அவமானம் இனியேது?

ஆம்.

இதைவிட அவமானம் இனியொன்றுமில்லை. இதற்குப்பின் பொறுத்திருப்பின் இனி தமிழன் மானங்கெட்டுச் சாவதிலும் தவறில்லை..!!!

தேசியத் தலைவரின் தாயார் என்ற முறையில் அல்ல , தமிழச்சி என்ற முறையில் அல்ல , பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாய் திரிகிற ஒரு வயதான மூதாட்டியை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது இந்தியா.

தொடர்புபட்ட செய்திகள்....




இதற்கு மன்னிப்பே கிடையாது...மன்னிக்கவும் முடியாது....!!!! 

ஏன்?

இந்தியாவின் எதிரி நாட்டின் மட்டைப்பந்து விளையாட்டு வீரர் வாசிம் அகரமின் மனைவிக்கு வைத்தியம் பார்க்க விசா ஏதும் இல்லாமலே சென்னையில் இறங்க அனுமதித்த இந்திய அரசு , தகுந்த காரணம் எதுவுமின்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது என்றால் என்ன அர்த்தம்..?

தமிழ்நாட்டுத் தமிழனே , நீ சொரணை கெட்டவன்..
பிரியாணிக்கும் , நூறு ரூபாய் பணத்துக்கும் விலை போனவன்.....
 உன்னால் ஒரு "மசுரும்" புடுங்க முடியாது என்று சொல்வதாகத்தானே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது????????????

செம்மொழி மாநாடு கூட்டும் நம்ம தாத்தா என்ன சொல்லப்போகிறார்.? மனிதாபிமானம் சிறிதுமற்ற இந்தச் செயலைக் கூட காங்கிரஸ் கூட்டணிக்காக கண்டிக்காமல் விடப்போகிறாரா?

அய்யா , அரசியல்வியாதிகளே...

கொஞ்சமேனும் மனசாட்சியுடன் இருப்பீர்களானால் கட்சி வேறுபாடின்றி இந்த ஈனச்செயலை , தமிழ்நாட்டுக்கு தீராத அவமானத்தையும் , பழியையும் ஏற்படுத்திய இந்த வேதனைச் செயலை கண்டித்தே ஆகவேண்டும்..!

இந்தியாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றால் என்ன எழவுக்கய்யா , விசா தருகிறீர்கள்???

ஏனய்யா அவர்களைச் சென்னை வரை வரவிட்டு திருப்பி அனுப்புகிறீர்கள்???

மானங்கெட்ட , சொரணை கெட்ட தமிழர்களைச் சீண்டிப்பார்க்கவா???

ஊடகதர்மங்களைக் கடைப்பிடிக்கும் வணிக நோக்குள்ள பார்ப்பனீய ஊடகங்களின் நிலைமையும் என்ன?நான் சொல்லும் பார்ப்பனீய ஊடகங்களில் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அடக்கமே...!!!

வழக்கம் போலவே , இருட்டடிப்பு செய்யப் போகின்றனவா????


கேள்விகள் நிறைய உண்டு......ஆனால் பதில் யாரிடம்?

Saturday, April 03, 2010

தமிழில் பொறியியல் கல்வி : வாழ்த்துவோம்..!

அகம் , புறம் அனைத்திலும் , ஒரு மனிதனின் சிந்தனை முழுக்கவும் நிரம்பியிருப்பது தாய்மொழி. அது ஆங்கிலம் ஆனாலும் , பிரெஞ்ச் ஆனாலும் , தெலுங்கு ஆனாலும் , தமிழ் ஆனாலும் ஒரு மனிதன் சிறு வயது முதல் சிந்திக்க ஆரம்பிக்கும் பருவம் வரையும் ஒவ்வொன்றையும் தனது தாய் புகட்டிய மொழி மூலமாகவே கற்கிறான்.

சிந்தனை ஊறுவதும் , செழிப்புற வாழ்வதும் ஒரு விடயத்தை எவ்வாறு அவன் கிரகித்துக்கொள்கிறான் அல்லது புரிந்து கொள்கிறான் என்பதை ஒட்டியுமே ஆகும்!

அப்படி புரிந்து கொள்வதற்கு , சரியான முறையிலான கல்வி அவசியமும் , அடிப்படையும் ஆகும். ஆனால் தமிழ்த் தேசத்தில்  , பத்தாவது , பனிரெண்டாவது வரை எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்கும் ஒருவன் கல்லூரி சென்றதும் ஆங்கில வழியிலேயே கல்வி கற்கும் விநோதமான , வேடிக்கையான , நகைப்புக்குரிய செயல் நிகழ்கிறது. அதற்கு கூறப்படும் காரணமோ அதைவிட நகைப்புக்குரியது. உலகளாவிய முறையில் ஆங்கிலம் தான் சிறந்தது என்ற குருட்டுத்தனமான , பிற்போக்கான நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை.

உலகில் சிறந்த சாதனைகளைப் படைத்து வரும் ஜப்பானியர்களும் , ஜெர்மானியர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , தத்தமது தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள். அவர்கள் சாதிக்கின்ற போது தமிழர்கள் மட்டும் சாதிக்கவியலாது , போட்டியில் முன்னேறவியலாது என்ற நம்பிக்கையை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று நான் விளிப்பது சரிதானே நண்பர்களே?

அடுத்து ஆங்கிலமே உலக மூலம் என்ற கருத்தும் மிகத் தவறானது. உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் சீனாவாகட்டும் , லத்தீன் அமெரிக்காவாகட்டும் , ஐரோப்பாவாகட்டும் ஆங்கிலத்தை ஒரு வணிக மொழியாகக் கூட அவர்கள் கையாள்வதில்லை.


இத்தகைய சூழலில் தான் நாகர்கோவில் அண்ணா பல்கலையில் இயந்திரவியல் படிப்பும் , கட்டிடவியல் படிப்பும் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழில் கற்பிக்கப்படும் என்ற தேனான அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. இதைவிட இனிப்பான சேதியொன்று சமீப காலத்தில் இருக்க முடியுமா? நாம் பேசுகின்ற மொழியில் , நாம் புரிந்து கொள்கின்ற மொழியில் கல்வியைக் கற்பதன் மூலமே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என்ற பாரிய உண்மை வெளிப்படப் போகிற வேளையிது.

இதன் மூலம் தமிழில் டெக்னிக்கல் புக்ஸ் என்கின்ற தொழில்நுட்ப நூல்கள் பெருகும் , அங்கு கல்வி கற்கின்ற மாணாக்கர்களின் அறிவுத்திறன் பெருகும். அந்த முயற்சிக்கான ஆதரவை வழங்க வேண்டியது தமிழ்ப்பெற்றோர்களின் கடமையாகும். மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சர்வ நிச்சயமாக அந்த முயற்சி தமிழகம் முழுமைக்கும் பரவும்.....

இனி தமிழகம் செழிக்கும் .........கண்டுபிடிப்புக்களில் தலை நிமிரும் ....விரைவில் !

Friday, March 19, 2010

தமிழக பட்ஜெட்...வாக்குச்சீட்டுக்களுக்கு வந்த மவுசு.!

பொதுவாகவே , தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டுகள் எப்படி இருக்குமோ , அப்படியே இருக்கிறது தமிழக பட்ஜெட்.!

கடன் வாங்கி சோறு போடலாம்....பாலம் கட்டலாம்.....விவசாயிகளுக்கு கடன் கொடுக்கலாம்...வேலை வாய்ப்பை ஊக்குவிக்கலாம்..........ஆனால் கடன் வாங்கி கலர் டீவி சும்மா கொடுக்கலாம் என்பதை  உலகுக்கு அறிவித்து உயர்ந்த நாகரீகமொன்றை ஏற்படுத்தியது தமிழகமே என்பதை நினைத்து எல்லோரும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.! 

மற்றபடி , மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு கவனம் , மாநில பட்ஜெட்டில் செம்மொழி மாநாடு வாயிலாக கோவைக்கு கவனம் என்பதில் கொங்கு மாவட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுகவும் , காங்கிரசும் தீவிரமாக முயல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் , கொங்குச் சீமைக்காரர்கள் , தங்களுக்கு இலவசத்திலோ , வார்த்தை ஜாலங்களிலோ அக்கறையில்லை என்பதை தொடர்ந்து சொல்கிறார்கள்....

சீரான மின்சாரம் , கள் இறக்க அனுமதி , சுயதொழிலுக்கான ஊக்கம் மற்றும் கடன்  இவையிருந்தால் நாங்களே எங்களை சீர்படுத்திக்கொள்வோம் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறார்கள். 

குறிப்பாக , கள் இறக்க அனுமதி கேட்கும் விவசாயிகள் , இந்திய நிதி நிலை அறிக்கையின் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைப் பார்த்தால் , தமது போராட்டம் எந்தவித பலனையும் தராது என்று புரிந்து கொள்ளலாம்.!

துரதிஷ்டவசமாக , இந்தியாவில் பதவியில் இருக்கும் எந்த அரசும் அடுத்த தேர்தலைத் தாண்டி சிந்திப்பது இல்லை. அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குக்களை பெறுவது எப்படி என்ற கவனமே பெரும்பாலும் இருக்கிறது. அதனால் தான் தொலைநோக்குள்ள திட்டங்கள் எதுவுமே எந்த நிதி நிலை அறிக்கையிலும் இடம்பெறுவதில்லை. 

அரசு நிர்வாகம் என்பது மக்களின் அமைப்பு..............அந்த நிர்வாகம் புரிகிறவர்கள் மக்களால் தமக்காக உழைக்கும்படி பணிக்கப்பட்டவர்கள். ஏதோ சில இலவசங்களைக் கொடுத்து விட்டு உடனே தம்மை மக்களைக் காப்பாற்ற வந்த இரட்சகர்கள் போல விளம்பரம் தேடிக்கொள்வதென்பது தமிழகத்தில் புதிதல்ல.! 

அத்தகைய விளம்பரங்களின் முன் , உண்மையான மக்கள் சேவை புரியும் குழுக்களோ , மனிதர்களோ மறைந்து போகிறார்கள். இன்றைய அரசியல் சூழல் , நல்லவர்களை அரசியலுக்கு வர விடாமலும் , வந்தாலும் அவர்களை அடக்கியும் வைத்திருக்கிறது. ! 


அப்படி அடக்குவதற்கான கருவியாகவே அரசின் இலவசத் திட்டங்கள் இருக்கின்றன. தமது சுயநலனுக்காக , தாம் மக்களீடத்தே ஓட்டுக்களைப் பெறுவதற்காக , விளம்பரங்களைத் தேடிக்கொள்வதற்காக இலவசத் திட்டங்களைப் உபயோகிப்பதும் ஒரு அதிகாரத் துஷ்பிரயோகமே.!

கழிவரைகளில்லாத வீடுகள் இன்னமும் இருக்கின்றன.  அவர்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன். சராசரியாக ஒரு வீட்டிற்கு 2500 ருபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. சுகாதாரத்தைப் பேணும் வகையில் சிறிய அளவிலான கழிவறைகளை இந்தக் காசுக்கு அமைத்துக்கொடுத்திருந்தால் , அக்கம் பக்கம் ஆள் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு அமரும் துர்பாக்கிய நிலை தாய்மார்களுக்கு நீங்கியிருக்கும்.!

மற்றபடி ஒருசில பாராட்ட வேண்டிய அம்சங்களும் இருக்கின்றன.....சென்னை அண்ணாசாலை மேம்பாட்டுக்கு 500 கோடி , சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இன்னும் பலகோடி , சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம் , சென்னையைச் சுற்றியே மேம்பாலங்களைப் பற்றீ சிந்திக்கிற தமிழக அரசாகவே இன்னும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. 


தமிழக பட்ஜெட் : 

புதிய மொந்தையில் பழைய கள்....
மாற்றமடைந்த கட்டிடத்தின் வடிவமைப்பு , பட்ஜெட்டின் மனப்பாங்கை மாற்றவில்லை.!