Monday, December 05, 2011

அந்நிய முதலீடும்…அழிந்துபோகும் விவசாயமும்!


 அலங்கியம் அருகிருக்கும் வானம் பார்த்த கிணறு இருக்கும் ஒரு சின்ன ஊர் பெருமாவலசு….உழவோட்டி உழவோட்டியே திமில் தேய்ந்த காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேப்பமர நிழலில் சாய்ந்திருந்தார் ராமசாமி…..காலமெல்லாம் உழைத்து உழைத்து தேய்ந்த கால்களில் செருப்புக் கூட போடுவதில்லை அவர்…

மேடென்பதால் ஓட்ட முடியாத மக்காச்சோளத்தட்டு வைத்துக்கட்டிய சைக்கிளை மூச்சிறைக்க தள்ளிக்கொண்டே வந்தார் பழனியப்பன்…..

‘ ஏம் பழனீப்பா, செத்த வெய்யச்சாஞ்சதுக்கப்புறந்தான் மேவெடுக்கறது….உச்சி வெய்யில்ல இப்பிடி கஷ்டப்படாட்டி என்னப்பா? ‘ என்றார் ராமசாமி…

‘ இல்லீங்கப்புச்சி , மேவெறக்கிப்போட்டுட்டு மறுக்கா ஒருக்கா வரோணுமுங்க………ஊட்டுக்கு போயி ஒருவா கஞ்சி குடுச்சுட்டு வந்து தட்டு வெட்டுணும்னா பொழுது சாஞ்சுரும்…’  காரணத்தை விளக்கினார் பழனியப்பன்…

‘ தட்டு நீயா வெட்டற?ஆள் போட்டு வெட்டற பன்னயமல்லய்யா உன்னுது? ‘

‘இதென்னமோ தெரியாத மாரியே கேக்குறீங்கப்புச்சி..இன்னிக்கெல்லாம் ஆளெங்க கெடைக்குது…ஆறுமணியாப்புல வந்தா ரெண்டு மணியப்புல கெள்ம்பிர்றாங்க…இதுல டீக்குடிக்க , சோறுங்கன்ணு ஆளு வச்சி வேல வாங்கறாப்பலயா இருக்கு? ‘

‘அதுஞ்செரித்தான்…இந்த காட்டுக்குள்ள அருகம்புல்லு மம்மேனியா வளர்ந்து கெடக்கே…இந்த செல்வனக்க்கூப்புட்டு அகந்து புடலாம்னு காலைல ஊட்டுக்குப் போனா , ‘ சாமி , நான் வரலீங்க…..அங்க வந்து நாள் பூராம் கஷ்டப்படறதுக்கு  ,குட்ட வேலைக்கு போனா சுளுவா இருக்குமுங்கோன்றான்…

‘இந்தக் குட்ட வேலை ( கிராமப்புற  வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்) வந்தாலும்வந்துச்சி தக்காளி பொறிக்ககூட ஆளுக்கெடைக்கலை….நேத்து இருந்து பொறிச்சி இருவத்தாறு பொட்டி ஆச்சி…போன வாரம் பொட்டி அருவதுக்கு போச்சி……..இந்த வாரம் இருவதுக்கு கூட எடுக்க ஆளில்லை..’

‘ ஆமாம்ப்பா பழனீப்பா , ஆனா கடைல எல்லாம் கிலோ பத்து பதினைஞ்சுக்குத்தான் விக்குறான்….நம்மகிட்டதான் அடிமாட்டு விலைக்கு வாங்கறான் இந்த வேவாரி…”
‘அது நெசந்தேன் அப்புச்சி…என்றகிட்டயே இருவதுக்கு பொட்டி வாங்கி அப்புடியே அம்பதுக்கு கைமாத்தறான் வேவாரி……புரோக்கருக்கு கமிசன் வேற…….கடசீலே கைல மிஞ்சுறது வெறும் கூலிக்காசு கூட இல்லை…இந்த வெவசாயம் பாக்குறதுக்கு வெறெதாச்சும் பண்ணலாம் போல’.

இது கற்பனை உரையாடல்தான்.. கற்பனை பழனியப்பனும் , ராமசாமியும்தான்…. ஆனால் , இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் அனேக இடங்களில் நிகழ்பவையே…விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கும் இடைத்தரகர்களின் அட்டூழியம் என்பது காலங்காலமாகவே நிகழ்கிறது……கடைநிலை சில்லறை வியாபாரிகளுக்கோ அந்த லாபத்தின் பெரும்பங்கு கிடைப்பதில்லை…இடையிலிருக்கும் பணமுதலைகளான இடைத்தரகர்களுக்கே பெரும்பாலான லாபத்தின் பங்கு செல்கிறது….

நாட்பட்ட நாட்பட்ட இந்திய விவசாயம் லாபமற்ற தொழிலாய் தவிக்கிறது……இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இந்திய விவசாயம் அழிந்துபோகும்…இந்திய விவசாயத்திறக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்துப்படவேண்டியது அவசியம்…இல்லாவிடில் , நாளை உணவினை இறக்குமதி செய்யும் அவலநிலைக்கு ஆளாவோம்…
.
இன்றைக்கு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் யார்? இத்தகைய இடைத்தரகர்கள் தான்……இவர்கள் சில்லறை வணிகர்கள்  முடங்குவார்கள் என்று ஒன்றும் கவலைப்படவில்லை….தமது பிழைப்பு போய்விடுமோ என்றே கவலைப்படுகிறார்கள்…
விவசாயிகளே நேரடியாக தமது பொருட்களை விற்றுக்கொள்ளும் நிலையினை என்றுமே இவர்கள் விரும்பப்போவதில்லை….சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் வடிகட்டிய பொய்…..வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளும் இருக்கின்றன…இதுபோல சில்லறை வணிகங்களும் இருக்கின்றன….

எவ்வித படிநிலையுமின்றி , கண்காணிப்பும் இன்றி இந்த இடைத்தரகர்கள் போடும் ஆட்டத்தினை ஒரு முறைப்படுத்த உதவும் அந்நிய முதலீடுகளை வரவேற்பதே சமுகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்………..அதன் மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை குறைக்கப்படும்.!

ஆக ,  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகம் வேண்டாம்..

இந்திய பொருட்களை அந்நிய தேசத்தில் விற்பதுவும் , இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை தருவதும் , வெளிநாடுவாழ் இந்தியர்களின் டாலர்களும் நமக்குத்தேவையெனில் , அந்நிய முதலீடுகளை எதிர்க்கும் நமது கொள்கை முற்றிலும் நியாயமற்றது…

ஒட்டுமொத்த முதலாளித்துவ கொள்கையினை எதிர்ப்புக்கொள்கையை எதிர்ப்பதில் நியாயம் உண்டு…அதற்கான காரணங்களும்  நிறையவே உண்டு...ஆனால் , எதிர்ப்பாளர்கள்  முன்வைக்கும் மாற்று என்ன? சீனா போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சமூகமா? இல்லை வெனிசூலா போன்ற கம்யூனிச முதலாளித்துவமா? இல்லை க்யூபா போன்ற செயலிழந்துபோன , மக்களுக்குப் பயனற்ற கம்யூனிசமா?

தெளிந்து எதிர்த்தால் , தெளிவான பார்வையிருப்பின் அப்போது வேண்டுமானால் முதலாளித்துவத்தை எதிர்க்கலாம்…அதுவரை நீங்கள் விரும்பினும் விரும்பாவிடினும் இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான எதிர்ப்புகள் தேவையற்றது…நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையானது.!!