Monday, May 16, 2011

திராவிட முன்னேற்றக் கழகம்.

கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள் அதிமுகவினரும் , தேமுதிகவினரும்...கொண்ட நோக்கம் நிறைவேறிய காரணத்தால் தினமணி தலையங்கம் தீட்டித்தீட்டி பெருமிதப்பட்டுக்கொள்கிறது..... இனி இனிப்பு ஆட்சி என்று தினமலர் செய்தி போட்டு தம் வாசகர் பரப்பை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது....


ராஜபக்சேவை கூண்டிலேற்றுவோம்...ஆனால் அதே சமயம் மாநில ஆட்சியால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெ..வாழ்த்துக்கள் ஈழத்தமிழரிடத்தில் இருந்து குவிகிறது.


இராமநாராயணன் பதவி விலகுகிறார்.......புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு...நடிகர் விஜய் புரட்சித்தலைவியையும் , புரட்சிக்கலைஞரையும் வாழ்த்துக்களால் குளிப்பாட்டுகிறார்....

சில பதிவர்கள் திமுக தமிழகத்தில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக சந்தோஷம் கொண்டு , இனி மூன்றாம் இடத்தையாவது திமுக தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று அக்கறை கொள்கிறார்கள்...

இனி கனிமொழிக்கு 'களி'தான் என்று மூத்த அரசியல்வாதிகள் சந்தோஷப்படுகிறார்கள். புதிய தலைமைச்செயலகம் வேக வேகமாகக் காலி செய்யப்படுகிறது...பழைய 'புனித ஜார்ஜ்' கோட்டை பட்டை தீட்டப்படுகிறது.....ஆட்சி மாறினால் அனைத்தும் மாறத்தான் வேண்டும் என்ற எழுதப்படாத ஜனநாயக விதி இங்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

சோனியாவும் , மன்மோகனும் , ப.சிதம்பரமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்சொல்ல க்யூ கட்டுகிறார்கள்...பெரிசுகள் அல்லது பெரிய பதிவர்கள் திமுகவின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்...

திமுக அழிந்து போனது என்று அழிக்கத்துடிப்பவர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்....இவர்கள் மகிழ்ந்து போகும்படியா , பரிதாப்படும் படியா திமுக இருக்கிறது?


1991 தேர்தலில் 'ராஜிவ் காந்தியைக்கொன்றது திமுகதான் என்ற பொய்ப்பிரசாரத்திற்கு மயங்கிய மக்கள்  ஜெயலலிதாவிற்கு ஆதரவை அள்ளித்தந்தார்கள்.


இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் கழகத்திற்கு...ஒருவர் கலைஞர் , பிரிதொருவர் பரிதி இளம்வழுதி....கலைஞர் பிற்பாடு தன் பதவியை இராஜினாமா செய்தார். பரிதி இளம்வழுதி தனி ஒருவராக சட்டமன்றத்தில் இருந்தார்... அப்போதும் கழகம் எதிர்க்கட்சி அல்ல......அதிமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தது.


வரலாற்றை மறந்த சிலர் திமுக மூன்றாமிடத்திற்கு முதல் முறையாக தள்ளப்பட்டது என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி மகிழ்கிறார்கள்....வருங்காலத்தில் தேமுதிக தலைமையிலான அணியில் திமுக சேருமா என்ற விவாதத்தை சூடாகப் பேசி மகிழ்கிறார்கள்....


கழகத்திற்கு தோல்வி புதிதல்ல...ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் சுவைத்திருக்கிறது....


ஐந்தாண்டு காலமும் கொடநாட்டில் இருந்துகொண்டே அறிக்கையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவருக்கு தமிழக மக்கள் அதீத பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உடன்பிறப்புக்கள் உணர்கிறார்கள்....தவறை மக்கள் மீது போட்டுத் தப்பித்துக்கொள்ள உடன்பிறப்புகளொன்றும் 'குஷ்பு' அல்ல...


நலத்திட்டங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததொரு குறைபாடு......ஈழத்தமிழர் நிலையின் பால் திரிசங்கு நிலை இன்னொரு குறைபாடு......தம் கையில் எதுவுமில்லை மின்வெட்டு ஒரு குறைபாடு......பலமேதுமில்லாத காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்ததொரு குறைபாடு...வெண்கலக் கடை பாத்திரங்களைப் போல ஒட்டாத தலைமை கொண்ட காங்கிரசுடன் கொண்ட கூட்டணி ஒரு குறைபாடு....


வட இந்திய , தென் இந்திய ஆரிய , பார்ப்பன பத்திரிக்கைகளின் அதீத திமுக எதிர்ப்பே அவர்களின் அதீத திமுக எதிர்ப்பு பிரச்சாரமே திமுகவின் மீதான மக்களின் கருத்து மாற்றத்திற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..எனினும் அவைகள் அப்படித்தான்...மாறப்போவதில்லை..மாற்றவும் இயலாது ....


மாற்றிக்கொள்ள வேண்டியது எம்மையே....எமது செய்லதிறன் மிக்க உடன்பிறப்புக்கள் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவார்கள் என்று பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சியினரும் நினைப்பார்களாயேனில் அவர்கள் ஏமாந்து போவர்...இன்றிலும் , திமுக அணிக்கு விழுந்த ஓட்டுக்களில் 90 சதம் கழகத்தினரின் ஓட்டே....அதன் வாக்குவங்கியை தகர்க்க எம்.ஜி.ஆரிலிருந்து ஜெயலலிதா வரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.....ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

இது இன்னொரு முயற்சி...பல முனைத் தாக்குதல்கள் இருந்தாலும், ஊடகங்களின் மிதமீறிய அதிமுக ஆதரவுப் பிரச்சாரத்தின் இடையிலும் போட்டியிட்ட தொகுதிகளில் 25 சதவித வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.


அதனால் , திமுகவை நிலையைப் பார்த்து யாரும் ஒப்பாரி வைக்கவும் வேண்டியதில்லை..பிழைக்குமோ பிழைக்காதோ என்ற போலி கரிசனமும் தேவையில்லை. திமுக ஒன்றும் தேர்தலுக்கு தேர்தல் மக்களைப் பார்க்கும் கட்சியல்ல..எப்போதும் மக்களிடமே இருக்கும் கட்சி...இடையில் சிலபல நிகழ்வுகளால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. தவறுகளை எப்போதும் சரி செய்து கொள்வதால் தான் இன்னமும் 20 வயதொத்த பல இளைஞர்களை கட்சியில் கொண்டிருக்கிறது.ஆரம்பித்து அரை நூற்றாண்டானாலும் இன்னமும் தன் இளமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது...


மக்கள் அதிமுக என்னும் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்...நல்லது அவர்கள் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடுப்பது சனநாயகத்தின் மூலக்கூறு...!!!


அதிமுக இதுவரை ஆண்ட 25 வருடங்களில் ஒட்டுமொத்தமாக எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.........குறிப்பாக ஜெ.அ.தி.மு.க சாதித்தவைகள் என்று எதையுமே சொல்லமுடியாது என்பதை அக்கட்சிக்காரர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.... 

இதை முந்தைய ஒரு பதிவிலேயே சுட்டியிருந்தோம்!

இனிமேலாவது ஏதாவது செய்து மக்கள் நலப்பணிகளில் திமுகவின் சாதனைகளை முறியடிக்க முயல வேண்டும்.....திமுகவிற்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கான தகுதி அப்போதுதான் அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதே நமது ஆசை.


ஆனால் , ஜெ.அ.தி.முக.விடம் அதற்கான நோக்கம் கூட இல்லையென்பதையே புதிய தலைமைச்செயலக புறக்கணிப்பு காட்டுகிறது!!!!

வாழ்க தமிழர்கள்....வளர்க தமிழகம்!