Friday, April 29, 2011

தினமணி.... நெஞ்சில் நேர்மை கொள்!!

ஈழ விடயத்தில் கருணாநிதியின் மென்மையான போக்கு கடுகளவும் பிடிக்காதவனாக இருந்தாலும் , அவ்வப்போது நமது தமிழக பத்திரிக்கைகளின் பூணூல் வெளியே தெரியவேண்டும் என்ற ஆசை கொண்டவனாகையால் இந்தப்பதிவு!

முதலில் தினமணியின் தலையங்கம்!
 இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி

.இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

தினமணி சொல்லியிருக்கும் கருத்துக்களில் மாறுபாடு யாருக்கும் இருக்கமுடியாது...ஆனால் ஜெயலலிதா உடைத்தால் மண்குடம் , திமுக உடைத்தால் பொன்குடம் என்று சொல்வதுதான் தினமணியின் பூணூல் பாசத்தைக் காட்டுகிறது.

அதெப்படி , சும்மா அறிக்கை விடுவது உருப்படியான செயலாகும்? ஒரு கட்சியின் உயர்நிலைக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவது உருப்படியற்ற செயலாகும்?

முன்பெல்லாம் இலைமறை காயாய் திமுகவையும் , கருணாநிதியையும் கடிந்து கொண்டிருந்த தினமணி இப்போது வெளிப்படையாகத் தாக்குகிற மர்மமென்ன? ஒருவேளை மூத்த பத்திரிக்கையாளர் ( அதாங்க , ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருக்கிறாரே...) தினமணிக்கும் ஆலோசனை சொல்கிறாரோ?

எது எப்படியோ , இவர்கள் இப்படித்தான் , இவர்கள் இதுபோலத்தான் என்று இனம் பிரித்தறிய இதுபோன்ற தலையங்கங்கள் வாய்ப்பளிக்கிற வகையில் சந்தோஷமே.!!!

ஜெய் தினமணி.......ஜெய் தினமலர்....ஜெய் விகடன்....ஜெய் துக்ளக்.....வளர்க பூணூற்கொள்கை!

பூணூலார்கள் மீது நமக்கு துவேஷம் இல்லை.....அவர்களுக்குத்தான் நம் மீது எப்போதும் துவேஷம்...அவர்களைச் சொல்லி தவறேதுமில்லை....அத்துணை ஊடகங்களையும் அவர்களே ஆதிக்கம் செலுத்துமளவிற்கு அவர்களை உச்சாணியில் வைத்திருக்கிறோமே அதுவே தவறு

Monday, April 04, 2011

திமுகவின் சாதனைகள் இங்கே! அதிமுகவின் சாதனைகள் எங்கே?

கலைஞரின் பார்வையில்:

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை!

அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.
அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில்;
1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2. பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம்.
8. குடிநீர் வாரியம்.
9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு – அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.
13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.
14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்
திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபாய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளிகைப் பொருள்கள்.
16. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.
17. சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய புதிய பல்கலைக்கழகங்கள் – பொறியியல் கல்லூரிகள் – மருத்துவக்கல்லூரிகள் – கலை அறிவியல் கல்லூரிகள்.
19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.
31. அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.
38. திருச்சியில் உய்யகொண்டான் – சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள்.
45. புதிய சட்டமன்ற வளாகம் – தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும்பங்களுக்கு நிதி உதவிகள்.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை. 

நன்றி : திமுக வலைத்தளம்!

இது 2010 கணக்கு....இதற்குப்பின்னர்தான் ஒரு வருடத்தில் எத்தனையெத்தனை அறிவிப்புக்கள்? எத்தனையெத்தனை சாதனைகள்......குறிப்பிடத்தகுந்த ஒன்று குடிசை வீடுகளை கான்கிரிட் வீடாக்குவது.....

மனச்சாட்சியுள்ள எவரேனும் கலைஞரின் இத்தனை திட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது பலனடைந்ததை ஒத்துக்கொள்வார்கள்....உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா நண்பரே?

திமுக சாதனைகள் இங்கே....அதிமுக சாதனைகள் எங்கே?

இப்படிக்கு
கலைஞரின்
திட்டங்களால்பலனடைந்த ஒருவன்!