பொதுவாகவே , தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டுகள் எப்படி இருக்குமோ , அப்படியே இருக்கிறது தமிழக பட்ஜெட்.!
கடன் வாங்கி சோறு போடலாம்....பாலம் கட்டலாம்.....விவசாயிகளுக்கு கடன் கொடுக்கலாம்...வேலை வாய்ப்பை ஊக்குவிக்கலாம்..........ஆனால் கடன் வாங்கி கலர் டீவி சும்மா கொடுக்கலாம் என்பதை உலகுக்கு அறிவித்து உயர்ந்த நாகரீகமொன்றை ஏற்படுத்தியது தமிழகமே என்பதை நினைத்து எல்லோரும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.!
மற்றபடி , மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு கவனம் , மாநில பட்ஜெட்டில் செம்மொழி மாநாடு வாயிலாக கோவைக்கு கவனம் என்பதில் கொங்கு மாவட்டங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திமுகவும் , காங்கிரசும் தீவிரமாக முயல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் , கொங்குச் சீமைக்காரர்கள் , தங்களுக்கு இலவசத்திலோ , வார்த்தை ஜாலங்களிலோ அக்கறையில்லை என்பதை தொடர்ந்து சொல்கிறார்கள்....
சீரான மின்சாரம் , கள் இறக்க அனுமதி , சுயதொழிலுக்கான ஊக்கம் மற்றும் கடன் இவையிருந்தால் நாங்களே எங்களை சீர்படுத்திக்கொள்வோம் என்பதை எப்போதுமே சொல்லி வருகிறார்கள்.
குறிப்பாக , கள் இறக்க அனுமதி கேட்கும் விவசாயிகள் , இந்திய நிதி நிலை அறிக்கையின் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைப் பார்த்தால் , தமது போராட்டம் எந்தவித பலனையும் தராது என்று புரிந்து கொள்ளலாம்.!
துரதிஷ்டவசமாக , இந்தியாவில் பதவியில் இருக்கும் எந்த அரசும் அடுத்த தேர்தலைத் தாண்டி சிந்திப்பது இல்லை. அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குக்களை பெறுவது எப்படி என்ற கவனமே பெரும்பாலும் இருக்கிறது. அதனால் தான் தொலைநோக்குள்ள திட்டங்கள் எதுவுமே எந்த நிதி நிலை அறிக்கையிலும் இடம்பெறுவதில்லை.
அரசு நிர்வாகம் என்பது மக்களின் அமைப்பு..............அந்த நிர்வாகம் புரிகிறவர்கள் மக்களால் தமக்காக உழைக்கும்படி பணிக்கப்பட்டவர்கள். ஏதோ சில இலவசங்களைக் கொடுத்து விட்டு உடனே தம்மை மக்களைக் காப்பாற்ற வந்த இரட்சகர்கள் போல விளம்பரம் தேடிக்கொள்வதென்பது தமிழகத்தில் புதிதல்ல.!
அத்தகைய விளம்பரங்களின் முன் , உண்மையான மக்கள் சேவை புரியும் குழுக்களோ , மனிதர்களோ மறைந்து போகிறார்கள். இன்றைய அரசியல் சூழல் , நல்லவர்களை அரசியலுக்கு வர விடாமலும் , வந்தாலும் அவர்களை அடக்கியும் வைத்திருக்கிறது. !
அப்படி அடக்குவதற்கான கருவியாகவே அரசின் இலவசத் திட்டங்கள் இருக்கின்றன. தமது சுயநலனுக்காக , தாம் மக்களீடத்தே ஓட்டுக்களைப் பெறுவதற்காக , விளம்பரங்களைத் தேடிக்கொள்வதற்காக இலவசத் திட்டங்களைப் உபயோகிப்பதும் ஒரு அதிகாரத் துஷ்பிரயோகமே.!
கழிவரைகளில்லாத வீடுகள் இன்னமும் இருக்கின்றன. அவர்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன். சராசரியாக ஒரு வீட்டிற்கு 2500 ருபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. சுகாதாரத்தைப் பேணும் வகையில் சிறிய அளவிலான கழிவறைகளை இந்தக் காசுக்கு அமைத்துக்கொடுத்திருந்தால் , அக்கம் பக்கம் ஆள் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு அமரும் துர்பாக்கிய நிலை தாய்மார்களுக்கு நீங்கியிருக்கும்.!
மற்றபடி ஒருசில பாராட்ட வேண்டிய அம்சங்களும் இருக்கின்றன.....சென்னை அண்ணாசாலை மேம்பாட்டுக்கு 500 கோடி , சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இன்னும் பலகோடி , சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதே சமயம் , சென்னையைச் சுற்றியே மேம்பாலங்களைப் பற்றீ சிந்திக்கிற தமிழக அரசாகவே இன்னும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழக பட்ஜெட் :
புதிய மொந்தையில் பழைய கள்....
மாற்றமடைந்த கட்டிடத்தின் வடிவமைப்பு , பட்ஜெட்டின் மனப்பாங்கை மாற்றவில்லை.!